அவதூறுகளை கண்டு அஞ்ச மாட்டோம்

கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்பு மகனும் நமது ஜமாஅத்தின் அத்தக்வா ஹிப்ளு மத்ரஸா மாணவருமான அஹ்ஸன் அவர்கள் 03.07.20 அன்று மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.

முபாஹலாவின் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மார்க்க அறிவின்றி சிலர் பரப்பி தங்களது வெறுப்பை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஒன்றுமறியா பாலகனின் மரணத்தை வைத்து இவர்கள் செய்யும் அநாகரீக கூத்துகள் பிறமத மக்களே முகம் சுழிக்கச் செய்யும் ரகமாகும்.

இரு தரப்புக்கிடையில் யார் சொல்வது உண்மை? எனும் சர்ச்சை முற்றிப் போகும் போது பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்டு இறைவனிடம் ஒப்படைப்பதே முபாஹலா என்பதாகும்.

அதன் பொருள் இவ்வுலகிலேயே அவருக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதல்ல. மாறாக அல்லாஹ் அவர்களை மறுமையில் பார்த்துக் கொள்வான் என்பதுதான்.

கொள்கை விஷயமாக இருவர் இறைவனின் சாபத்தை கேட்டுக் கொண்டார்கள் எனில் அதில் பொய் கூறியவர் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவராவார். அதன் மூலம் அவரது பொய்யான கொள்கை இவ்வுலகிலேயே வீழ்ச்சி பெறும் என்று விளங்கலாம்.

தவிர பொய் கூறியவர் விபத்தில் மரணிப்பார், அல்லது கை கால்கள் போய் விடும் என்று பொருளாகாது.

மனைவியின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டு கூறினால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும் என்று கூறுவது லிஆன் எனும் சாப அழைப்பாகும்.

லிஆன் செய்த இருவரில் பொய் கூறியவருக்கு இறைவனின் சாபம் உண்டு என்றால் அவர் விபத்தில் மரணிப்பார், அல்லது அவருக்கு திடீர் மரணம் உண்டாகும் என்று மார்க்க அறிவுடையோர் புரிய மாட்டார்கள்.

உலகில் ஏற்படும் துன்பவியல் நிகழ்வுகள் அனைத்தும் இறை சாபத்தின் அடையாளங்களாகாது.

ஒருவருக்கு ஏற்படும் துன்பங்களை வைத்து அவருக்கு இறைவனின் சாபம் ஏற்பட்டு விட்டது என்று கூறமுடியாது.

ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்பதால் அவர் மீது இறைவன் திருப்தியுற்ற நிலையில் இருக்கிறான் என்றும் ஆகாது.

மோடி, அமித்ஷா கூட்டம் அப்பாவி முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. இவ்விருவருக்கும் எதிராக கையேந்தாத முஸ்லிம்கள் மிக அரிது எனலாம்.

ஆனால் அவர்கள் உலகத்தில் சுகபோகமாக வாழ்வதால் இறைநேசர்கள் என்று முடிவு செய்து விடலாமா?

அன்னை ஆயிஷா ரலி உள்ளிட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மனைவியர் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் அவதூறாக எவ்வளவோ விஷயங்களை முகநூலில் எழுதி வருகிறார்கள்.

அதை பார்க்கும் முஸ்லிம்களினது நெஞ்செமல்லாம் கொதித்து இவர்கள் நாசாகட்டும் என்று கூறுமளவு அவர்களது வரம்பு மீறல் உள்ளது.

அத்தகைய எதிரிகளுக்கு விபத்தோ, உலகியல் துன்பமோ எதுவும் ஏற்படவில்லை என்பதால் அவர்கள் எல்லோரும் மகா உத்தமர்கள் ஆகிவிடுவார்களா?

அபலைப் பெண்களை ஏமாற்றி நாசமாக்கும் நித்தியானந்தாக்களும் போலி ஆன்மீகவாதிகளும் தமிழகத்தில் நிறையவே உள்ளனர்.

தங்கள் வீட்டு பெண்களை பலிகொடுத்த ஆண்கள், பெற்றோர்கள் அவர்களுக்கு எதிராக சாபமிடுகிறார்கள்.

ஆனால் நித்தியானந்தாக்களோ கைலாசா எனும் தனிநாடு அமைக்கும் அளவு செல்வாக்கு பெற்று விட்ட காரணத்தால் அவர்கள் இறைவனின் விருப்பதிற்குரியவர்களா?

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

உலகியல் இன்ப துன்பத்தை வைத்து இறைவனின் முடிவை மனிதன் எடைபோடுவது சரியல்ல.

இதை விளங்காத மடையர்கள் விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பை இறைவனின் சாபத்துடன் ஒப்பிடுகின்றனர்.

இதன் மூலம் மார்க்க அறிவு கிஞ்சிற்றும் இல்லை என்று பகிரங்கப்படுத்திக் கொள்கின்றனர்.

அசத்தியவாதிகளை நினைவூட்டிய அவதூறு பேர்வழிகள்

மத்ஹபினர்களுடன் களியக்காவிளை விவாதம் (2006) நடைபெற்று முடிந்து திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானது.

எம்.ஐ சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அல்லாஹ்வின் அருளால் அதன் பிறகு குணமாயினர்.

ஆனால் அப்போது கப்ரு வணங்கிகள் சிலர் நமது அவ்லியாக்களை? திட்டியவர்களுக்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா? என்று அங்கலாய்த்து கொண்டனர்.

கப்ரு வணங்கிகளின் இச்செயலையே இத்தகையோர் நினைவுபடுத்துகின்றனர்.

சூனியத்திற்கு எவ்வித தாக்கமும் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சவால் விட்ட நேரத்தில் மணிகண்டன் எனும் சூனியக்காரன் தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள சிலருக்கு சூனியம் செய்வதாகவும் அதனால் குறிப்பிட்ட பாதிப்புகள் ஏற்படும் கூறினான்.

தற்போது ஜமாஅத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவன் என் மூலம் தான் ஏற்பட்டது என்று கூறினால் அது சரியாகுமா?

மத்ஹபில் உள்ள அசிங்கத்தை? பட்டியல் போட்டதால் தான் நாற்றமெடுக்கும் உங்கள் அந்தரங்கம் வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு போனீர்கள் என்று பாலியல் நடவடிக்கைக்கு ஆளானோர் குறித்து மத்ஹபினர் கூறுகிறார்கள்.

இதையும் சரிகாண்பார்களா?

முஃமினின் வாழ்வில் துன்பம்

இரு தரப்பினர் சாப அழைப்பில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களது கொள்கை வளர்ச்சி என்ன என்று பார்க்கப்படலாமே தவிர யாரின் குடும்பத்தில் சோதனைகள் ஏற்படுகிறது என்பதை முபாஹலாவின் அளவீடாக கொள்வது அறிவீனமாகும்.

வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் இறைவனின் சாபத்தின் அடையாளங்கள் என்றால் இறைத்தூதர்களும் நல்லடியார்களும் இறைசாபத்திற்கு உள்ளானார்கள் என்ற மிகப்பிழையான பொருள் வந்து விடும்.

எத்தனையோ இறைத்தூதர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டனர்.

பலர் கொல்லப்பட்டனர்.

நல்லடியார்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள்.

இவைகள் எல்லாம் இறைசாபத்தின் வெளிப்பாடுகளா?

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:155

இவ்வசனத்தின் படி இறைவன் புறத்திலிருந்து முஃமினுக்கு ஏற்படும் சோதனைகளை சாபத்தின் வெளிப்பாடிது என்று மார்க்க அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

மறைவான ஞானம் உண்டோ?

தவ்ஹீத் ஜமாஅத்தால் பாதிக்கப்பட்டேன். எனவே எதிராக பிரார்த்தனை செய்தேன். என்னுடைய பிரார்த்தனையால் தான் இப்படி ஏற்பட்டது என்று சிலர் கூறுகின்றனர்.

முதலில் இவ்வாறு சொல்வதே மறைவான ஞானம் எனும் இறையதிகாரத்தில் தலையிடுவதாகும்.

ஒரு செயலை என்னால் தான் நடந்தது, இதனால் தான் இப்படி ஆனது என்று கூறுவது மறைவான ஞானம் தனக்கு இருப்பதாக வாதிடுவதற்கு சமமான செயலாகும்.

நபிகள் நாயகத்திற்கு மறைவான ஞானம் இல்லை, வானவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை, சூனியக்காரனுக்கும் மறைவான ஞானம் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்த நாவுகள் இன்றைக்கு இதனால் தான் இப்படி ஆனது என்று மறைவான ஞானம் சார்ந்த ஒன்றில் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இறைநேசர் யார் என்றெல்லாம் நமக்கு தெரியாது. அது மறைவான ஞானத்தில் உள்ளது. இறைவனின் அதிகாரத்தில் இறைத்தூதர்களுக்கே அதிகாரமில்லை என்று முழங்கியவர்கள் இன்று அதில் சொந்தம் கொண்டாடும் செயலில் இறங்கி விட்டார்கள்.

கொள்கை வீழ்ச்சியில் அசுர பாய்ச்சல் இது.

சத்திய பிரச்சாரத்தை செய்யும் போது கண்டிப்பாக அது பலரை பாதிக்கவே செய்யும்.

விபச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆகிய எல்லா விஷயங்களையும் எதிர்த்து பிரச்சாரம் செய்யும் போது, இதனை செய்யக் கூடியவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாதிப்பாகவே இருக்கும்.

தங்களது மடியில் கை வைத்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வோரை எதிர்த்து இவர்கள் நாசமாக போக வேண்டும் என்றே நினைப்பார்கள்.

இந்த பிரச்சாரகர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு விட்டால் இது எங்களால் தான் ஏற்பட்டது என்று கூறவே செய்வார்கள்.

லாத், உஸ்ஸாவை விமர்சித்து பேசியதால் இப்படி ஏற்பட்டது என்று நபிகள் நாயகத்தை நோக்கி கூறினால் அது எப்படி நபிகள் நாயகம் அவர்களை எள்முனையளவும் பாதிக்காதோ அது போலவே உண்மையை கூறுவதால் சிலர் பாதிக்கப்பட்டு அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக சொன்னாலும் அதற்காக கவலை கொள்ளும் அவசியமில்லை.

வஹியின் வழியில் பயணம் தொடரும்

ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் விபத்தில் மரணமடைந்து விட்டார். இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்று மார்க்க அறிவற்று பூச்சாண்டி காட்ட முனைகின்றனர்.

அல்லாஹ்வை முன்னிறுத்த கொஞ்சமும் தகுதியற்றவர்கள் இறை மார்க்கத்தில் இல்லாதவைகளை கூறி அச்சமூட்ட நினைக்கிறார்கள்.

கொள்கைவாதிகளின் மனவுறுதியை இப்படியான கூற்றின் மூலம் சீர்குலைத்து விட முடியாது.

இவர்களின் கூற்றிற்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை.

சத்திய பிரச்சார பயணத்தின் இடையில் ஏற்படும் அற்ப சோதனைகளை கண்டு ஒரு கொள்கைவாதி அஞ்ச மாட்டான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மகன் இப்றாஹிம் சிறுவயதிலே மரணித்தார்கள்.

அன்னை ஆயிஷா ரலி மீது கூறப்பட்ட அவதூறால் நபிகள் நாயகம் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

தான் உயிருடன் இருந்த காலத்திலேயே பாத்திமா ரலி அவர்களை தவிர அத்தனை மகள்களையும் இழந்தார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் துவக்கத்திலேயே தனக்கு அரணாக விளங்கிய அன்னை கதீஜா ரலி மற்றும் தனது பெரிய தந்தை அபூதாலிப் ஆகியோரை இழந்தார்கள்.

இவைகள் யாவும் சத்தியக் கொள்கையில் பயணிப்பவருக்கு

வாழ்வில் பல சோதனைகள் ஏற்படும். அதனால் நிலைகுலைந்து விடக்கூடாது எனும் மனவுறுதியை வழங்குகிறது.

அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது எனும் விதி, நம்பிக்கையை முஃமினின் உள்ளத்தில் நங்கூரமாக பாய்ச்சுகின்றது.

இப்படி நபிகள் நாயகத்தின் வாழ்வு மீதும் அவர்களது போதனைகள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட கொள்கை கூட்டத்தை தங்களது பொய்ப்பிரச்சாரம் மற்றும் அவதூறுகளால் நிலைகுலையச் செய்ய முடியாது.

இறைநம்பிக்கையாளனை பொறுத்தளவில் துன்பங்கள் வாழ்வில் குறுக்கிடுவதை கண்டு மனம் தளர மாட்டான். அனைத்தையும் நன்மையாகவே கருதுவான் என்று பின்வரும் நபிமொழி உணர்த்தி விடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.”

முஸ்லிம் 5726

எனவே வஹியின் வழியில் உண்மையின் ஒளியில் பயணிக்கின்ற பொழுது எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், என்னதான் பழிச்சொற்கள் வீசப்பட்டாலும் அதற்காகவெல்லாம் கலங்கி விடமாட்டோம்.

நம் மீது அவதூறு கூறும் இவர்களை விட அல்லாஹ்வை முன்னிறுத்த அதிகம் தகுதி படைத்தவர்கள் நாமே. எனவே இவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு நம் சத்திய பயணத்தை தொடர்வோம்.

இறைவனைக் கொண்டு போலியாக அச்சுறுத்துவோர் குறித்து அல்லாஹ் அவனது வசனத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு தெளிவுப்படுத்தியுள்ளான்.

“அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.”

திருக்குர்ஆன் 25:73

அவதூறுகளால் நம்மை நிலைகுலைய செய்ய முயற்சிப்போருக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் அசத்தியவாதிகளுக்கு சொன்ன பதிலையே நாமும் கூறுவோம்.

“அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?”

“அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?” (என்றும் அவர் கூறினார்.)

அல்குர்ஆன் 6 80, 81

வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமை