அல்லாஹ் உருவமற்றவனா?

அபூஉஸாமா

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.

உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்’ என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உளிய நடையில் அருளப்பட்ட திருக்குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது.

ஆனால், திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்றுதான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும்.

அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையில் முகம் என்று பொருள் கொடுப்பதா? அல்லது இலக்கியமாக, முகம் என்பது திருப்தியையும், பார்வை என்hது கண்காணிப்பையும் குறிக்கும் என்று பொருள் கொடுப்பதா? என்பதில் முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகின்றது.

எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு முதலில் அகராதிப் பொருள், அதாவது அதன் நேரடிப் பொருள் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இது எல்லா மொழியிலும் உள்ள விதியாகும். அரபு மொழிக்கும் இதுதான் சட்டமாகும்.

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செயததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 5:38)

இந்த வசனத்தில் கையை வெட்டுங்கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். கையை வெட்டுங்கள் என்றால் அவளது பலத்தைக் குறைத்தல் என்று மாற்றுப் பொருள் கொடுக்கக் கூடாது.

உமது கையை கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவாரக வறுமைப்பட்டு, அமர்ந்து விடுவீர்!

(அல்குர்ஆன் 17:29)

இந்த வசனத்தில் ‘கழுத்தில் கையை கட்டிக் கொள்ளாதே’ என்று கூறப்படுவதற்கு, நேரடிப் பொருள், கொடுத்தால் பொருந்தாது. இது போன்ற கட்டங்களில், அந்த வார்த்தை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து, முன் பின் வாசகங்களை ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பொருளாதாரம் பற்றி பேசப்படுகின்றது. எனவே, கையைக் கழுத்தில் கட்டிக் கொள்ளதே என்பது கஞ்சத்தனம் செய்யாதே என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது புறச்சான்றின் அடிப்படையில் வார்த்தையின் அர்த்தத்தை முடிவு செய்ய வேண்டும். இதற்கு அரபியில் கரீனா என்று பெயர்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.

தெளிவான அரபு மொழியில் இந்த வேதத்தை இறக்கியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே, அரபு மொழி வழக்கில் மற்ற வார்த்தைகளை எப்படிப் பொருள் கொள்வோமோ அதே அளவுகோலைத்தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த வசனங்களுக்கும் கொள்ள வேண்டும்.

ஒரு வசனத்தில் அல்லாஹ்வின் முகம் என்று கூறப்படுமானால், முதலில் அதன் நேரடிப் பொருளைப் பார்க்க வேண்டும். அது பொருந்தாத சமயத்தில் அந்த வசனத்தின் முன் பின் விஷயங்களைக் கருத்தில் கொண்டு அதற்குத் தக்க மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

(அல்குர்ஆன் 55:27,28)

இந்த இடத்தில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் அழிந்து விடும், அவனது திருமுகம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ்வின் முகம் என்ற நேரடிப் பொருள்தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

அதே சமயம் கீழ்கண்ட வசனத்தைப் பாருங்கள்.

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 30:38)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் முகத்தை நாடி தர்மம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அல்லாஹ்வின் முகம் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாது. எனவே, அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாததால்தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்தில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.

அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று இடம் பெறும் அனைத்து வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுக்காமல் மாற்றுப் பொருள் கொடுத்து, அதன் காரணமாக அல்லாஹ்வுக்கு உருவமே கிடையது என்று ஒரு சாரார் வாதிக்கின்றனர்.

அல்லாஹ்வின் உறுப்புகள் குறித்து இடம் பெறும் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் நேரடிப் பொருள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறி அதன் மூலம் இஸ்லாத்தில் முரண்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை ஒரு சாரார் ஏற்படுத்துகின்றனர்.

எனவே, இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்றாக வேண்டும். அதற்காகவே இந்தத் தொடர். அல்லாஹ் எங்கிருக்கின்றான்? அவனுக்கு உருவம் உள்ளதா? அந்த உருவத்தை அனைவரும் பார்க்க முடியுமா? யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? என்பன போன்ற விளக்கங்களை இதில் தரவுள்ளோம்.

உருவமற்ற இறைவனா?

‘உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்ளூ உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.’

இவை நாகூர் ஹனீஃபாவின் வரிகளாகும். இஸ்லாமிய கடவுள் கொள்கையை புரியாததால் இவ்வாறு இறைவனை உருவமற்றவன் என்று கூறியிருக்கின்றார். இதற்கு அவர் மட்டும் காரணமாக இருக்க மாட்டார். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் படித்தால்தான் மார்க்கத்தை விளங்க முடியும் என்று பறை சாற்றும் ஆலிம்களும் காரணமாவர்.

அவர்கள்தான் அல்லாஹ் உருவமற்றவன் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வகையில் இஸ்லாமிய கடவுள் கொள்கையில் இவர்கள் சுத்த சூனியங்களாக – அறியாமை மையங்களாக உள்ளார்கள். இறைவன் பற்றிய விபரத்தை விளங்குவதில் இவர்களே இப்படி இருட்டில் இருக்கையில் நாகூh ஹனீபாவைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.

ஆனால், நிச்சியமாக அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன்

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27,28)
இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கென்று ஒரு முகம் உள்ளது என்hதை அறிந்தோம். இது மட்டுமன்றி வேறு பல வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ற்து சொன்னார்கள்.

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத் தூதரும் தன் சமுதாயத்திற்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)

நூல்: புகாரி 3057

(மேலும் பார்க்க: புகாரி 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407 மற்றும் முஸ்லிம் 247)

இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன.

தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்ளூ பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 58:01)

(மேலும் பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)

இந்த வசனங்களில் அல்லாஹ் தன்னை செவிப்புலன் உள்ளவன் என்பதை விளக்குகின்றான்.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

(அல்குர்ஆன் 4:164)

இந்த வசனத்தில், தான் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் அவன் ‘பேசுபவன்’ என்று சொல்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சுவர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர் தியாகியாகி விடுகின்றார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)

நூல்: புகாரி 2826

(மேலும் பார்க்க: புகாரி 806, 7438 மற்றும் முஸ்லிம் 278)

இந்த ஹதீஸ்களில் ரப்புல் ஆலமீனின் சிரிப்பை வருணனை செய்கின்றன.

பார்வை, செவியுறுதல், பேசுதல், சிரித்தல் ஆகிய பண்புகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் அவனது திருமுகத்தைக் கூறுகின்ற வசங்களையும் ஹதீஸ்களையும் இது வரை கண்டோம்.
அல்லஹ்வின் மற்ற உறுப்புகள் பற்றி இடம் பெற்றுள்ள ஆதாரங்களைப் பார்ப்போம்.

‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகயே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

(அல்குர்ஆன் 5:64)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கைகள் என்பது தாராளத்தன்மைக்காக கூறப்பட்டாலும் பின்வரும் வசனத்தில் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

‘எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான்.

(அல்குர்ஆன் 38:75)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கின்றதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘போதும், போதும்’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரழி)

நூல்: புகாரி 4848-4849, முஸ்லிம் 5084.

படைத்த இறைவனின் பாதங்களைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வும் தனக்குப் பாதங்கள் இருப்பதாகப் பறை சாற்றுகின்றான்.

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

(அல்குர்ஆன் 67:42)

தன்னிகரற்ற தனி நாயன்

சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஆதாரங்கள், அகில உலகத்தைப் படைத்து, பாதுகாத்து, இரட்சிக்கும் அவனுக்கென்று ஒரு தோற்றம் – ஓர் உருவம் உள்ளது என்று பிரகடணப்படுத்துகின்றன.

ஆனால், அவனது அந்தத் தோற்றத்திற்கு – அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாதுளூ ஒப்புவமை இல்லை.
அவனைப் போல் எதுவும் இல்லை.

(அல்குர்ஆன் 42:01)

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு யாரும் ஒப்பாக மாட்டார். எதுவும் ஒப்பாகாது. அவனுக்கு ஈடு இணை இல்லை என்று இந்த வசனத்தில் உறுதி கூறுகின்றான்.

இதே கருத்தை திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகின்றது.

‘அல்லாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன் 112:1-4)

எனவே இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று தன்னிகரற்ற, ஒப்புவமை இல்லாத, ஈடு இணையற்ற ஒரு தனித்தன்மை கொண்ட தோற்றம் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும், அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், கைகள், கால்கள் இருக்கின்றன என்று வரும் வார்த்தைகளுக்கு அதற்குரிய நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க வழியில்லாத பட்சத்தில்தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு கண்களா? அவனுக்கு கை, கால்களா? நமக்கு இருக்கும் உறுப்புக்களை அல்லாஹ்வுக்கு இருப்பதாக எப்படிச் சொல்லலாம்? என்று கற்பனை செய்து கொண்டு இவற்றுக்கு வேறு பொருள் கொடுக்க மாட்டோம்.

அதாவது கண் என்றால் கண்காணிப்புளூ கை, கால்கள் என்றால் அவனது ஆற்றல்கள் என்று மாற்றுப் பொருள்கள், வேறுபட்ட அர்த்தங்கள் கூற மாட்டோம். அதற்குரிய நேரடியான, உள்ளது உள்ளபடியான அர்த்தத்தைத்தான் கொடுப்போம். கண் என்றால் கண்தான், கை என்றால் கைதான்.

இப்படி ஒரு விளக்கத்தை இங்கு நாம் குறிப்பிடக் காரணம், அல்லாஹ்வின் பண்புகளில், தன்மைகளில் அறிவு ரீதியிலான விளக்கம் கொடுப்பவர்கள் இவர்கள் என்று நம்மை நோக்கி வஞ்சக எண்ணத்தோடு, குரூர சிந்தனையோடு குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், நம்முடன் இருக்கும் போது கருத்துக்கு எதிராக நாவுயர்த்திப் பேசவில்லை. எதிர்க் கருத்தை நம்மிடம் நேரடியாகக் கூறவில்லை. மாறாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இயக்க ரீதியான பந்தம் அறுந்தவுடன் இந்தக் குற்றச்சாட்டை நம் மீது எறிகின்றார்கள்.

அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

(அல்குர்ஆன் 7:54)

இந்த வசனங்களிலும் 10:03, 13:02, 25:59, 32:04, 57:04 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்’ என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)

நூல்: புகாரி 1145

(மேலும் பார்க்க: புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)

இந்த ஹதீஸில் அல்லாஹ் முதல் வானத்திற்கு ஒவ்வொரு நாள் இரவிலும் இறங்குகின்றான் என்ற கருத்து இடம் பெறுகின்றது.

கடந்த கால மக்களிடம் இந்தக் கருத்து முன் வைக்கப்படும் போது அவர்களுக்கு இதில் எந்த ஐயமும் ஏற்பட அறவே வாய்ப்பில்லை. ஆனால், பூமி 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கின்றது என்று அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட பின்பு இந்தக் கருத்தில் சந்தேகம் ஏற்படுகின்றது.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றானா? அல்லது முதல் வானத்தில் இருக்கின்றானா? என்பதுதான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் ஏன் உருவாகின்றது? சுழல்கின்ற பூமியில் இரவின் கடைசிப் பகுதி என்பது ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் ஏற்படுவது கிடையாது. 24 மணி நேரமும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி விடுகின்றான் என்றால் 24 மணி நேரமும் அல்லாஹ் முதல் வானத்தில்தான் இருக்கின்றான் என்றாகி விடும். அதாவது அர்ஷில் அவன் இல்லை அர்ஷ் காலியாக உள்ளது என்ற கருத்து வந்து விடும். இங்கு குர்ஆன் கூறும் கொள்கை ரீதியான விளக்கத்திற்கு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மோதுவதாக அமைகின்றது.
உண்மையில் ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் குர்ஆனுடன் முரண்படாது. இங்கு மோதுவது போல் தோன்றுகின்றது என்றால் நமது புரிந்து கொள்ளும் தன்மையில் கோளாறு என்யுறு சரியான விளக்கத்தை நாம் தேடியாக வேண்டும்.

சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள்

அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்றால் அல்லாஹ் நமது கோரிக்கையை மிக விரைந்து ஏற்றுக் கொள்கின்றான் என்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களாகின்றோம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்தவுடன் நம்மை சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள் என்பது போல் நமக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நமக்குப் பின்னால் பேசும் இவர்களிடம் நாம் கூறுவதெல்லாம், ‘எங்களுக்குப் பின்னால் வாய் கிழியப் பேசும் நீங்கள் எங்களுக்கு முன்னால் வந்து பேசுங்கள்’ என்பதுதான்

ஆனால், அந்த சந்தர்ப்பவாதிகள் அவ்வாறு வருவதில்லை. இதிலிருந்து யார் சத்தியத்தை விட்டும் சறுகியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இவர்களின் சலசலப்புக்கெல்லாம் நாம் ஒரு போதும் அஞ்சிப் போவதில்லைளூ அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

நமக்கு சத்தியமென்று தெரிகின்ற விஷயத்தை ஊருக்கு அஞ்சி, உலகுக்கு அஞ்சி போட்டுடைக்கத் தயங்கியதில்லை. அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸுக்கு இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கின்றோம். இல்லையெனில் குர்ஆன் வசனத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மோதுகின்றது என்ற தோற்றம், மற்றவர்களிடம் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்க்கததான் மேற்கண்ட விளக்கம்.

இது மாதிரி நெருடலான இடங்களில் இது போன்றதொரு விளக்கம் கொடுக்கப்படுவது புதிதான ஒன்றல்ல. இவர்களாலும் நம்மாலும் மதிக்கப்படும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இது போன்ற நெருடலான ஒரு விஷயத்தில் கொடுத்த ஒரு விளக்கத்தை இங்கு கோடிட்டுக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 57:04)

இந்த வசனத்தின் படி அல்லாஹ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருக்கின்றான் என்ற தவறான கருத்து இங்கு பெறப்படுகின்றது. இதற்கு மறுப்பு கூற வந்த இப்னு தைமிய்யா அவர்கள், ‘நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடம் இருக்கின்றான்’ என்ற வசனத்தின் படி அல்லாஹ் படைப்பினங்களுடன் இரண்டறக் கலந்திருக்கின்றான் என்று பொருள் கொண்டு விடக் கூடாது. அப்படி ஒரு கருத்தை இந்த வார்த்தை நடை தரவில்லை. இது (இந்த அத்வைதக் கொள்கை) அல்லாஹ் படைத்த இயற்கையான அமைப்பிற்கு நேர் எதிரானது, நம் முன்னோர்கள் கொண்ட ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் முரணானது.

வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சந்திரன் ஊரில் தங்கியிருப்பவர்களுடனும் இருக்கின்றது. பயணியுடனும் இருக்கின்றது என்று சொல்லும் போது, ஊரில் இருப்பவருடன் சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ அல்லது பயணத்தில் இருப்பவருடன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ எடுத்துக் காள்ள மாட்டோம். இதில் இடம் பெற்றுள்ள ‘உடன்’ என்ற வார்த்தைக்கு சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். அது போலத்தான் மேற்கண்ட வசனத்தின் பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கின்றான். அதே சமயம் நம்முடனும் இருக்கின்றான் என்ற கருத்தை இந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் அதனதன் பொருளின் அமைந்து, மாற்றி – திரித்துக் கூறுவதற்கு அவசியமின்றப் போகின்றது.

அல்அகீதத்துல் வாஸிதிய்யா என்ற நூலில் இப்னு தைமிய்யா அவர்கள் இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்க முன் வந்ததற்குக் காரணம் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அல்லாஹ் அடியார்களுடன் இருக்கின்றான் என்ற சூஃபிஸக் கருத்தை உடைப்பதற்காகவும்தான் என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சொல்லப்படும் செய்தியில் ஒரு கருத்து மற்றொரு கருத்துடன் மோதுவது போல் தோன்றுகின்ற போது அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து அந்தச சந்தேகத்தை நீக்குவது அந்தத் துறையில் ஈடுபடுவோர் மீது கட்டாயக் கடமையாகும்.

இங்கே ஒரு சிலர் அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான், முதல் வானத்திற்கும் இறங்குகின்றான் என்று அப்படியே விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு இரண்டும் முடியும் அல்லவா? என்பது போல் தங்கள் வாதங்களை வைக்கின்றனர்.

இத்தகையோர் இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

முரண்பாடு, அசாத்தியம் என்று எதை ஆக்கி விட்டானோ அந்த விஷயத்தில் அவன் எதுவும் மாற்றம் செய்வதில்லை.

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது

(அல்குர்ஆன் 35:19-21)

இந்த வசனங்களில் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களைச் சொல்லி இது ஒரு போதும் ஒன்றாகாது என்று கூறுகின்றான். முரண்பாடு என்றால் என்ன என்று விளக்குகிறான்.

அதாவது குருடன் என்றால் குருடன்தான் பார்வையாளன் என்றால் பார்வையாளன்தான். ஒருவன் குருடனாக இருந்து கொண்டே பார்வையாளனாக இருப்பது முரண் என்ற இயற்கை விதியை நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்த இயற்கை விதியின் படி, தான் ஏகன்ளூ ஒருவன்ளூ தன்னிகரற்றவன் என்பதை நிரூபிக்கிறான். ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்தால் அது இன்னொரு இடத்தில் இருக்க முடியாது என்பதுதான் அவன் கற்றுத் தரும் இயற்கை விதி.

அந்த இயற்கை விதியின் அடிப்படையில் அவன் அர்ஷில்தான் இருக்கின்றான். அவன் வேறொர் இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. அதாவது அவன் நிர்ணயித்த அந்த விதிக்கு அவன் ஒரு போதும் முரண்படுபதில்லை.

எனவே நம்முடைய அறிவின் அடிப்படையில் இல்லாமல், அல்லாஹ் விதித்த இயற்கை விதியின் அடிப்படையில்தான் அவன் அர்ஷிலிருந்து வானத்திற்கு வர முடியாது என்று கூறுகின்றோம். அதாவது அர்ஷில் முதல் வானத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று கூறுகிறோம்.

அடுத்து, அவன் அசாத்தியம் என்று எதைக் கூறி விட்டானோ அவன் சக்தியைப் பயன்படுத்தி சாத்தியமாக்குவதில்லை.

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

(அல்குர்ஆன் 7:40)

இங்கு ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று அவன் அசாத்தியமாக்கி விட்டான். அப்படி ஓர் இயற்கை விதியை நிர்ணயித்து விட்டான். அதற்கு அவன் மாறுபட மாட்டான்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

‘இறை மறுப்பாளர் சுவர்க்கம் செல்வார் என்று ஒருவர் சொல்கிறார்’ என்று வைத்துக் கொள்வோம். ‘அல்லாஹ் இன்னின்ன வசனங்களில் இறை மறுப்பாளர்களுக்கு நிரந்தர நரகம் என்றல்லவா சொல்கிறான்! அவர் எப்படி சுவர்க்கம் செல்ல முடியும்’ என்று நாம் அவரிடம் திருப்பிக் கேட்கிறோம். அதற்கு அவர், ‘ஊசிக் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை என்று அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சக்தி பெற்றவன். எனவே அவன் ஊசியின் காதில் ஒட்டக்தை நுழைய வைத்து இறை மறுப்பாளனை சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்’ என்று பதில் சொல்கின்றார் என்றால் அதைப் பைத்திக்காரத் தனமான வாதம் என்போம். அதற்கு ஆதாரமாக, அல்லாஹ் அசாத்தியமாக்கியதை சாத்தியமாக்குவதில்லை என்ற நியதியையும் கூறுவோம்.

அல்லாஹ் அர்ஷிலிருந்து கொண்டு முதல் வானத்திற்கு இறங்கும் ஆற்றல் பெற்றவன் என்று கூறுவோருக்கும் இதையே சாம் பதிலாகக் கூறுகிறோம். அவன் முரண்பாடு என்று ஆக்கிய இயற்கை விதியில் அவன் ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை. உறுதியாக மாற்றம் செய்ய மாட்டான். இது முதல் அடிப்படை.

அடுத்து இந்தக் குர்ஆனை தன்னுடைய வேதம்தான் என்பதற்கு சிறந்த சான்றாக சமர்ப்பிப்பது முரண்பாடின்மையைத்தான்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன் 4:82)

ஒரு நூலில் முரண்பாடு இருந்தால் அது வேதமல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றான். இது இரண்டாவது அடிப்படை.

இந்த அடிப்படையின் படி அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகளுக்கு இடமில்லை. நாம் விளங்குவதில்தான் கோளாறு இருக்க வேண்டும்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ் முதல் வானத்திற்கு வருகின்றான் என்று ஹதீஸ் கூறுகின்றது. (அதுவும் வஹீ தான்)

இது முரண்பாடு போல் தோன்றுகிறது. எனவே அதற்குரிய விளக்கம், அல்லாஹ்: அடியார்களுடைய தேவையை விரைந்து நிறைவேற்றுகிறான் என்பதுதான் என்று கூறுகிறோம்.

எனவே இந்த அடிப்படையையும் அதற்கான விளக்கத்தையும் தெரிந்து கொண்டால் அவர்கள் இந்த வாதத்தை முன் வைக்க மாட்டார்கள்.

அல்லாஹ் கட்டடங்களுக்கு அடியில் வருவானா?

இங்கு அவர்களிடம் இன்னொரு விஷயத்தை முன் வைக்கிறோம். அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் வேயுறு விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதில் நாம் மாறுபடவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மாற்று விளக்கம் கொடுத்தாக வேண்டும். அந்த இடங்களில் மாற்று விளக்கம் கொடுக்காமல் இருக்க முடியாது. இவர்களும் அது போல் மாற்று விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் அது போன்று விளக்கம் கொடுத்தால் நமக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நாம் அவர்களிடம் கேட்பது.

அவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். மேலேயிருந்த முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத வகையில் அவர்களிடம் வேதனை வந்தது.

(அல்குர்ஆன் 16:26)

இந்த இடத்தில் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள்? மாற்று விளக்கம் கொடுக்காமல் அதே விளக்கம் கொடுத்தால் அல்லாஹ் கட்டடத்தின் அடித்தளத்திற்கு வருகிறான் என்றாகி விடும். எனவே இதற்கு நிச்சியம் இந்த விளக்கம் கொடுக்க முடியாது.

மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும், வானவர்களும் வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும்.

(அல்குர்ஆன் 2:210)

இந்த வசனத்திற்கும் அதே விளக்கம் கொடுக்க முடியாது. வேறு விளக்கம்தான் கொடுத்தாக வேண்டும். அவர்கள் மாற்று விளக்கம் கொடுத்தால் தப்பில்லை. நாம் கொடுத்தால் தப்பு? அப்படியானால் இதில் தெரியவருகின்ற பகிரங்கமான உண்மை, ஒரு தனி நபர் மீது கொண்டிருக்கும் வெறுப்பு அவர்களை இவ்வளவு தொலைவுக்கும், தலை கீழ் நிலைக்கும் கொண்டு செல்கிறது.

இதற்கு நாம் கவலைப்படப் போவதில்லை. மேலும் அல்லாஹ் இவர்களின் சதி வலைகளை, பொய் செய்தி அலைகளைத் தொடர்ந்து முறியடித்துக் கொண்டிருக்கிறான் என்பது நாம் நிதர்சனமாகக் கண்டு வரும் உண்மையாகும்.

எனவே இங்கு நாம் தெளிவாகத் தெரிவிப்பது என்னவெனில், அல்லாஹ்வின் பண்புகளில் மாற்று அர்த்தம் கொடுக்கக் கூடாது, அதன் இயற் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவனது பண்புகளைக் கூறும் இடத்தில் எங்கு முரண்பாடு ஏற்படுவது போல் தோன்றுகிறதோ அங்கு எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் விளக்கத்தைக் கொடுத்தாக வேண்டும். இதுதான் நமது நிலைப்படாகும்.

இந்த அடிப்படையில் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று ஓர் அழகிய திருமுகம், கண்கள், செவிப் புலன்கள், பேசும் ஆற்றல் உள்ளன என்று விளங்கிக் கொள்கிறோம்.

இப்படி ஒரு புனிதத் தோற்றம் இருப்பது உறுதியான பின் நாம் அவனைக் காண வேண்டும் என்ற ஆவல், அலை போல் கிளம்புவது இயல்பானதுதான். அத்தகைய புனித தோற்றமுடையவனை நாம் எங்கே காணலாம்?