திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்பு – அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

சூரத்துல் பகராவின் சிறப்புகள்

திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை முதலில் காண்போம்.

விரண்டோடும் ஷைத்தான்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.

அறிவிப்பாளர்: அபூஹரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487, 8089, 8560, 8681

யார் பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு ஆயத்துகளை ஓதுகிறாரோ அது அவருக்கு (ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க) போதுமானதாகும்.

நூல்: புகாரி 5010

மறுமையில் நிழல் தரும் மேகங்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில் குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்! இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் எடுத்துக் கொள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.

அறிவிப்பாளர் அபூ உமாமா அல் பாஹிலி (ரலி)

நூல்: முஸ்லிம் 1440, அஹ்மத் 21126. 21136. 21169. 21186

மறுமையில் முதலில் வரும் அத்தியாயம்

நபி(ஸல்) அவர்கள், “மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவார். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும்” என்று கூறி விட்டு இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979

இவை அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு குறித்து இடம் பெறும் ஆதாரப்பூர்வமான செய்திகளாகும். இனி இது குறித்து இடம் பெற்றுள்ள பலவீனமான செய்திகளையும், அவற்றின் தரத்தையும் பார்ப்போம்.

பைத்தியத்திற்கு மருந்து?

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் இருக்கிறது” என்றார். என்ன நோய்? என்றார்கள். பைத்தியத்தில் ஒருவகை ஏற்பட்டுள்ளது என்று சொன்னார். நபி ஸல் அவர்கள், அவரை என்னிடம் கொண்டு வா என்று சொன்னார்கள். அவர் அவரைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார். அவருக்கு நபி ஸல் அவர்கள் சூரத்துல் பாத்திஹாவையும் சூரத்துல் பகராவின் முதல் நான்கு வசனங்களையும் இலாஹுகும் இலாஹுவ் வாஹித் என்ற ஆயத்தையும் ஆயத்துல் குர்ஸியையும் சூரத்துல் பகராவின் கடைசி ஆயத்தையும் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்தில் ஷஹிதல்லாஹு அன்னஹு லாயிலாஹா இல்லா ஹுவ என்ற ஆயத்தையும் சூரத்துல் அஃராபில் இன்ன ரப்பகுமுல்லாஹுல்லாஹுல்லதி எனத் தொடங்கும் ஆயத்தையும் சூரத்துல் முஃமினின் கடைசி வசனமான பதஆலல்லாஹு எனத் தொடங்கும் வசனத்தையும் சூரத்துல் ஜின்னில் வ அன்னஹு தஆலா எனத் தொடங்கும் வசனத்தையும் சூரத்துல் ஸாப்பாத்தில் முதல் பத்து வசனத்தையும் சூரத்துல் ஹஷ்ரில் கடைசி மூன்று வசனத்தையும் குல் ஹுவல்லாஹு என்ற ஆயத்தையும் முஅவ்விததைன் எனும் குல் அவூது பிரப்பில் பலக்கும் குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள். பின்பு அந்த மனிதர் நோய் பீடிக்காதவரைப் போன்று எழுந்து நின்றார்.

அறிவிப்பவர்: உபை பின் கஃபு (ரலி)

நூல்: அஹ்மத் 20237

இந்தச் செய்தியில் உமர் பின் அலி என்பவரும் அபீ ஜனாப் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரையும் அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அறிஞர் அஹ்மத் அவர்களும் இப்னு மயீன் அவர்களும் இவர் தத்லீஸ் (இருட்டடிப்புச்) செய்பவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு ஸஃது அவர்களும் இவ்வாறே கூறுகிறார்கள். இவர் கடுமையாக தத்லீஸ் செய்பவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 427

தத்லீஸ் என்பது ஒருவர், தான் நேரடியாகக் கேட்காத ஒருவரிடமிருந்து, கேட்டிருக்கவும் கேட்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பார். எனவே இவர் போன்றவர்கள் தனக்கு அடுத்து வரும் அறிவிப்பாளரிடம் நான் செவியுற்றேன், அவர் எனக்கு அறிவித்தார் என்று தெளிவாகக் கூறினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இந்தச் செய்தியில் உமர் பின் அலீ என்பவர் தனக்கு அடுத்து வரும் அறிவிப்பாளர் அபூஜுனாத் என்பவரிடம் நேரடியாகக் கேட்டேன் என்ற வாசகத்தில் கூறாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.

இந்த ஹதீஸில் மற்றொரு அறிவிப்பாளரான யஹ்யா பின் அபீ ஹய்யா என்ற அபீ ஜனாப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரையும் அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

“பலமானவர் இல்லை’ என்று அபூஹாத்திம், இமாம் நஸயீ, இமாம் அபூதாவூத், அபூஅஹ்மத் ஆகியோர் கூறியுள்ளனர்.

“பலவீனமானவர்’ என்று இப்னு மயீன், இஜ்லீ, இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ, யஃகூப் பின் ஸுஃப்யான், இப்னு அம்மர், இப்னு ஹிப்பான் ஆகியோர் கூறியுள்ளனர்.

“இவருடைய செய்தியில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளது’ என்று இப்னு கிராஸ் அவர்கள் கூறியுள்ளார்கள். “இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்படவேண்டியவர்’ என்று ஸாஜீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்’ என்று அம்ர் பின் அலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 177

திருக்குர்ஆனின் தலைமை அத்தியாயம்?

“ஒவ்வொரு பொருளுக்கும் திமில் (உயரமான பகுதி) என்று ஒன்று உண்டு. குர்ஆனின் திமில், சூரத்துல் பகராவாகும். இன்னும் அதிலே ஒரு வசனம் உண்டு. அது குர்ஆனின் தலைவியாகும். அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதி 2803, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ 2375, ஹாகிம் 3027

தப்ரானீ, பாகம்: 6, பக்கம்:163, முஸ்னத் அபீ யஃலா 755.

இந்தச் செய்தி இரண்டு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இதில் திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களில் ஹகீம் பின் ஜுபைர் என்பவர் இடம் பெற்றுள்ளர். இவர் பலவீனமானவராவார்.

இமாம் அஹ்மத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் “பலவீனமானவர் மூளை குழம்பியவர்’ என்றும் இப்னு மயீன் அவர்கள் “இவர் பலவீனமானவர்’ என்றும் “இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர்’ என்று யஃகூப் பின் ஷைபா அவர்களும் இப்னு அபீ ஹாத்திம் அவர்களும் கூறியுள்ளனர். “இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர், நிராகரிக்கப்பட்டவர்’ என்று இமாம் புகாரி அவர்களும், “ஷுஅபா அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்’ என்றும் இமாம் நஸயீ அவர்களும், “பலவீனமானவர்’ என்றும் இமாம் தாரகுத்னீ அவர்களும் “கைவிடப்பட்டவர்’ என்றும் இப்னு மஹ்தீ அவர்கள் “இவர் குறைவான செய்திகளை அறிவிக்கிறார், அதிலும் நிராகரிக்கப்பட வேண்டிய செய்தியை அறிவித்துள்ளார்’ என்றும், இமாம் அபூதாவூத் அவர்கள் “இவர் பலவீனமானவர்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 2, பக்கம் :383

தப்ரானீ, ஷுஅபுல் ஈமான், முஸ்னத் அபீ யஃலா ஆகிய நூல்களில் காலித் பின் ஸயீத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவருடைய செய்திகளுக்கு வழிமொழியப்படும் செய்திகள் எதும் இல்லை. (மீஸானுல் இஃதிதால் பாகம்: 2, பக்கம்: 412) இவரை உகைலீ அவர்கள் லுஅஃபா (பலவீனமானவர்) என்ற நூலில் இணைத்துள்ளார்கள். மேலும் இவரை நம்பகமானவர் என்று யாரும் கூறவில்லை. (இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர, இவர்கள், யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் என்று கூறும் பழக்கம் உடையவர்)

பகரா குர்ஆனின் திமிலாகும். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்துடனும் எண்பது மலக்குகள் இறங்குகின்றனர். இன்னும் ஆயத்துல்குர்ஸி அர்ஷின் கீழிருந்து வெளியேற்றப்பட்டதாகும். பிறகு ஆயத்துல்குர்ஸியைக் கொண்டு சூரத்துல் பகரா இணைக்கப்பட்டது அல்லது சூரத்துல் பகராவைக் கொôண்டு ஆயத்துல்குர்ஸி இணைக்கப்பட்டது.

இன்னும் சூரத்து யாஸீன் குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும் மறுமை வீட்டின் நற்பேற்றை நாடி ஒரு மனிதர் அதனை (யாஸீன்) ஓதினால் அவருடைய (பாவங்கள்)மன்னிக்கப்படும். இன்னும் நீங்கள் அதனை மரணத் தருவாயில் இருப்பவர் அருகே ஓதுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி)

நூல்: அஹ்மத் 19415

மஃகல் பின் யஸார் (ரலி) வழியாக அஹ்மதில் (19415) இடம் பெற்றுள்ளது. இதில் பெயர் குறிப்பிடப்படாமல் ஒரு மனிதர் என்றும் அவரின் தந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரென அறியப்படாத இவ்வகை செய்திகள் ஹதீஸ் கலை அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தாரமி 3243, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ 2487 ஆகிய நூல்களில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளது.

ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஈருலுக நன்மைகள் அடங்கிய அத்தியாயம்?

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம், “குர்ஆனுடைய அத்தியாயங்களில் மிகச் சிறப்பான அத்தியாயம் எது?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் குல் ஹுவல்லாஹு அஹத் என்ற அத்தியாயம் என்றார்கள். பின்னர் அவர் குர்ஆன் வசனங்களில் சிறந்த வசனம் எது? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயத்துல் குர்ஸி’ என்றார்கள். பின்னர் அவர், “அல்லாஹ்வின் தூதரே! உன்னுடைய உம்மத் எந்த ஆயத்தை பெற்றுக் கொள்வதை விரும்புகிறீர்கள்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பகராவின் கடைசி வசனங்கள் என்றார்கள். “ஏனென்றால் அது அல்லாஹ்வின் அர்ஷின் கீழே உள்ள அருளின் பொக்கிஷமாகும். இந்த வசனங்களை இந்த உம்மத்திற்காகக் கொடுத்திருக்கிறான். இது உலகம் மற்றும் மறுமையின் நன்மை அனைத்தையும் பொதிந்ததாக இருக்கிறது” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல்: தாரமி 3380

இந்த செய்தியை அய்ஃபவு பின் அப்துல் கலாயீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிய முடியாது. எனவே இவ்வகைச் செய்திகளை பலவீனமான வகைச் சார்ந்த “முர்ஸல்’ என்று ஹதீஸ் கலையில் குறிப்பிடுவர்.

நான் சூரத்துல் பகராவை முந்திய (வேத) உபதேசத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 749

இந்த ஹதீஸ்களின் அனைத்திலும் உபைதுல்லாஹ் பின் அபீ ஹுமைத் என்பவரே இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இவர் அறிவிப்பாளர் வரிசைகளை புரட்டுபவர், இவர் தான் இந்தச் செய்திகளை உருவாக்கினார் என்று சந்தேகப்பட முடியாத அளவிற்குச் செய்திகளைக் கொண்டு வருபவர். இதனால் இவர் விடப்படுவதற்கு தகுதயானவராவார்.

நூல்: மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் 65