அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் வழியாகப் பல வசனங்களில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொள்ளாத மக்களை நோக்கிப் பேசுகிறான்; முழுமையாக நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கிப் பேசுகிறான். குறிப்பாக, பல இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விளித்துப் பேசுகிறான்.
அந்த வசனங்களில் மக்களுக்கு அறிவிக்குமாறு பல்வேறு செய்திகளை அல்லாஹ் நபிகளாருக்கு அறிவுறுத்துகிறான். காலங்காலமாக எந்த விசயத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அதற்கு எதிராக அந்த வசனங்கள் பேசுகின்றன. அப்படியான வசனங்களை ஆராயும் போது அல்குர்ஆன் இறைவேதம் தான் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய வசனங்களில் சிலதை மட்டும் இப்போது பார்ப்போம்.
இறைவன் அருகில் இருக்கிறான்
மனிதர்களின் பிரார்த்தனைகளை இறைவன் எளிதில் செவியேற்று விட மாட்டான்; ஏற்றுக் கொள்ள மாட்டான். அதற்கென சில மந்திரங்களையும் சடங்குகளையும் செய்யும்போது தான் அந்தப் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் பதிலும் பலனும் கிடைக்கும் என்று போதித்து அப்பாவி மக்களிடம் ஆதாயம் அடையும் ஆன்மீகத் தலைவர்கள் அநேகம் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் நபிகள் நாயகத்திடம் இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும்” (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)
அல்குர்ஆன் 2:186
ஏக இறைவனது நெருக்கமான கண்காணிப்பில் நாம் இருக்கிறோம். எனவே, எந்த மனிதரும் எந்தவொரு இடைத்தரகரும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அவரது பிரார்த்தனைக்கு ஏகஇறைவன் பதில் அளிப்பான் என்று இவ்வசனத்தில் நபிகள் நாயகத்தின் வழியாக எடுத்துரைக்கப்படுகிறது.
மறைவான ஞானம் இல்லை
கண் முன்பு அல்லாமல் திரைக்கு அப்பாலோ அல்லது வேறு எங்கேயோ நடக்கும் விசயங்கள், கடந்த காலத்தில் நடந்து முடிந்த அல்லது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விசயங்கள் போன்றவை மறைவான விசயங்கள் ஆகும். இவற்றை முழுமையாக அறிவதே மறைவான ஞானம் என்பதாகும்.
இத்தகைய ஞானம் தங்களுக்கும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, அதன் மூலம் ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகளை விதைத்து வயிறு வளர்க்கும் ஆசாமிகள் அதிகம் உள்ளனர். ஆனால் இஸ்லாமோ இத்தகைய மூடநம்பிக்கைகளை விட்டும் மக்களைக் காப்பாற்றுகிறது. அந்த வகையில் அண்ணலாருக்குக் கூறப்பட்ட அறிவுரையைப் பாருங்கள்.
(நபியே!) “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். மறைவானதை நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை” என்று கூறுவீராக! “பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 6:50
இதே கருத்தை 46:9, 25:6, 33:63 ஆகிய வசனங்களிலும் காணலாம். மறைவான ஞானம் நபிகள் நாயகத்திற்கு இல்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் அது குறித்து விளக்குமாறு அல்லாஹ் அவருக்கு ஆணையிடுகிறான். ஒருவேளை அத்தகைய ஞானம் இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் விளக்குமாறு கூறுகிறான். இதோ பாருங்கள்.
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மைகளையே அதிகம் பெற்றிருப்பேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188
நபிகள் நாயாகத்திற்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நன்மையான காரியங்களை நோக்கி மட்டுமே அவர் நகர்ந்திருப்பார்; அவருக்கு நல்லது மட்டுமே நடந்திருக்கும். தமக்கு நடக்கப்போகும் துன்பங்களில் இருந்து அவர் விலகி இருப்பார். ஆனால் அவரது வாழ்வு அவ்வாறில்லை. நபிகளாரின் வாழ்விலும் இன்பங்கள் துன்பங்கள் ஏற்பட்டன; சக மனிதர்களால் பிரச்சனைகள் தொல்லைகள் ஏற்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டால் நபிகள் நாயகத்திற்குக் கூட மறைவான ஞானம் இல்லை என்பதை விளங்கலாம். இறைத்தூதருக்கே இந்த ஞானம் இல்லை என்பதை அவர் வழியாகவே இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
நன்மையும் தீமையும் இறைவன் வசமே!
சில மதத் தலைவர்கள் தங்களுக்கு அற்புத ஆற்றல் இருப்பதாகவும், அதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றும் வாதிடுகிறார்கள். சாமியாரைப் பகைத்துக் கொண்டால் அவர் சபித்து விடுவார் அல்லது மந்திரம் ஓதிவிடுவார். அவர் கூறியவாறு அப்படியே நடந்துவிடும் என நம்புகிற மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மாற்றமாகத் திருக்குர்ஆன் பேசுகிறது.
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியவரிடம் ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறாய். நீ நாடியவரைக் கண்ணிப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவுபடுத்துகிறாய். நன்மை யாவும் உன் கைவசமே உள்ளன. ஒவ்வொரு பொருளின்மீதும் நீ ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:26
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு நானே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு நான் சக்தி பெற மாட்டேன். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தவணை உள்ளது. அவர்களின் தவணைக்காலம் வரும்போது சற்று நேரம்கூடப் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” என்று (நபியே) கூறுவீராக!
அல்குர்ஆன் 10:49
“நான் என் இறைவனிடமே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டேன்” என்று (நபியே!) கூறுவீராக! “நான் உங்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்றும் கூறுவீராக! “என்னை அல்லாஹ்விடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காண மாட்டேன்” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 72:20-22
இறைவனது நாட்டமின்றி நபிகள் நாயகம் தமக்கு மட்டுமல்ல! எவருக்கும் எந்தவொரு நன்மையோ தீமையோ செய்துவிட முடியாது. இதையும் அறிவிக்குமாறு மேலுள்ள வசனங்களில் அல்லாஹ் அவருக்கு ஆணையிடுகிறான்.
அற்புதங்கள் இறைவனின் கைவசம்!
மக்கள் சிலரை மகான் என்றும் குரு என்றும் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்தவொரு அற்புதத்தையும் செய்வார்கள் என்று புகழ்வதைப் பார்க்கிறோம்.
இப்படியான மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களும் அளவுகடந்த ஆதாயம் அடைகிறார்கள். இப்படியான வரம்பற்ற அற்புத ஆற்றல் தூதர்களுக்கு இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இதோ குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
“இவரது இறைவனிடமிருந்து இவர்மீது அற்புதங்கள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (நபியே!) “அல்லாஹ்விடமே அற்புதங்கள் உள்ளன. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன்தான்!” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 29:50
நீர் அவர்களிடம் சான்றைக் கொண்டு வராதபோது, “நீரே (சுயமாக) அதை உருவாக்க மாட்டீரா?” என்று கேட்கின்றனர். “எனது இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த ஆதாரங்களாகவும், இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:203
தங்களிடம் ஓர் அற்புதம் வந்தால் அதை நம்புவதாக அல்லாஹ்வின்மீது உறுதியிட்டுச் சத்தியம் செய்கின்றனர். “அற்புதங்கள் யாவும் அல்லாஹ்விடமே உள்ளன” என்று கூறுவீராக! அது நிகழ்ந்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவிக்கும்?
அல்குர்ஆன் – 6:109
மக்களுள் ஒருவரை இறைத்தூதராகத் தேர்வு செய்து அனுப்பும் போது அவரைத் தூதரென மக்கள் அறிந்து கொள்வதற்காக அவருக்கு அற்புதம் செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்குகிறான். அல்லாஹ் நாடும் போது தான் அவரால் அற்புதம் செய்ய முடியுமே தவிர அவராகவே அனைத்து அற்புதத்தையும் செய்துவிட முடியாது. இந்த வழிமுறை நபிகள் நாயகத்திற்கும் பொருந்தும். இதை அறிவிக்குமாறு நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் ஆணையிடுவதை மேலுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
எதையும் கேட்கவில்லை!
சிலர், மக்களிடம் சமயத் தலைவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மக்களிடம் மூடநம்பிக்கைகளை அர்த்தமற்ற சடங்குகளை பரப்புகிறார்கள். இறையருள் எதிர்பார்க்கும் மக்களிடம் அதற்காக சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கூறி பல்வேறு பொருட்களைத் தானமாகப் பெற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்கள். இத்தகைய தேவையும் எதிர்பார்ப்பும் நபிகள் நாயகத்திற்கு இல்லை என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகிறது.
“(நபியே!) இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. தம் இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புபவரைத் தவிர (எதையும் எதிர்பார்க்கவில்லை)” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 25:57
“நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 34:47
சாதாரண மனிதனே!
சக மனிதர்களை விட்டும் மேம்பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஆன்மீகத் தலைவர்கள் இல்லாமல் இல்லை.
உடற்கூறு மற்றும் அறிவாற்றலில் மற்ற மனிதர்களைப் போல் அல்லாமல் தங்களை வேறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்வதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தங்களுக்குத் தனித்தன்மை இருப்பதாக மக்களை ஏமாற்றிக் கொண்டு அதன் மூலம் தாராள வாழ்வு வாழ்வார்கள்.
ஆனால், நபிகள் நாயகம் தம்மை எவ்வாறு அறிமுகப்படுத்தினார்கள் தெரியுமா? அது குறித்து அவருக்கு அல்லாஹ் பிறப்பித்த ஆணையைப் பாருங்கள்.
“நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு (தூதுச்செய்தி) அறிவிக்கப்படுகிறது. எனவே தமது இறைவனைச் சந்திக்க விரும்புபவர் நற்செயல் செய்யட்டும். தமது இறைவனை வணங்குவதில் யாரையும் அவர் இணையாக்க வேண்டாம்” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 18:110
உங்களைப் போன்று நானும் சாதாரண மனிதன் தான். உங்களுக்கு ஏற்படுவதைப் போன்று தேவையும் பலவீனமும் எனக்கும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் எடுத்துரைத்த நிகழ்வுகள் நபிமொழிகளில் நிறைந்து காணப்படுகின்றன.
கட்டுப்பட்டோரில் முதன்மையானவன்
சில சமயத் தலைவர்கள் மக்களுக்கு ஒன்றைப் போதிப்பார்கள்; ஆனால் அதற்கு நேர்மாற்றாமாகச் செயல்படுவார்கள். அதுபற்றிக் கேட்டால் சமயக் கடமைகளும் கட்டளைகளும் எங்களைக் கட்டுப்படுத்தாது என வியாக்கியானம் பேசுவார்கள். இப்படியான முரண்பாடு நபிகள் நாயகத்திடம் இல்லை. இது தொடர்பான வசனத்தைப் பாருங்கள்.
“மனிதர்களே! எனது மார்க்கத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். மாறாக, உங்களைக் கைப்பற்றுபவனாகிய அல்லாஹ்வையே வணங்குவேன். நான் இறைநம்பிக்கையாளர்களுள் ஒருவனாக ஆகி விடுமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 10:104
“வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்த அல்லாஹ்வை விடுத்து, வேறு பொறுப்பாளனை எடுத்துக் கொள்வேனா?” என்று கேட்பீராக! அவனே உணவளிக்கிறான்; அவன் உணவளிக்கப்படுவதில்லை. “கட்டுப்பட்டோரில் நான் முதன்மையானவனாக இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக! இணை வைப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
அல்குர்ஆன் 6:14
நம்பிக்கை கொள்வதிலும், கட்டுப்பட்டு நடப்பதிலும் முதல் நபராக இருக்கிறேன்; அவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளேன் என்று நபிகள் நாயகம் எடுத்துரைத்தார்கள். அதன்படியே அவரது வாழ்க்கை அழகிய முறையில் இருந்தது.
ஒருவேளை நபிகள் நாயகம் தம்மை இறைத்தூதர் என்றும், தமக்கு இறைச்செய்தி வருகிறது என்று சுயமாகக் கற்பனையாகக் கூறி அதன் மூலம் பேரின்பமாக வாழ நினைத்திருந்தால் மற்ற ஆன்மிகத் தலைவர்களைப் போன்று அவரது போதைனையும் இருந்திருக்கும். மக்களை ஏமாற்றும் வகையில் தான் அவரது பேச்சும் செயலும் இருந்திருக்கும்.
ஆனால், ஆன்மிக ரீதியாக ஆதாயம் அடைவதற்காக மத குருமார்கள் எதையெல்லாம் மக்களிடம் கூறி வருகிறார்களோ அவற்றுக்கு மாற்றமாகத் தான் நபிகள் நாயகத்தின் பிரச்சாரம் இருந்தது.
அவரது அழைப்புப் பணியோ அறியாமைக் காரியங்கள், அனாச்சாரங்கள், சமூகத் தீமைகளுக்கு எதிராக இறுதி மூச்சு வரை இருந்தது.
இந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் நபிகள் நாயகம் இறைத்தூதர் தான்; அவர் ஓதிக்காட்டிய அல்குர்ஆன் இறைவேதம் தான் என்பதை எளிதாக அறியலாம்.