இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

தொடர்: 2

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

எம். ஷம்சுல்லுஹா

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி ஆவார். இவர் மொராக்கோ என்ற (மக்ரிப்) நாட்டைச் சேர்ந்த நவீன கால மார்க்க அறிஞராவார். அவர் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தைத் தான் ஏகத்துவத்தில் தந்துள்ளோம்.

இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை நாம் புகழ்கின்றோம். அவனிடமே நாம் உதவியும் தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் கெடுதிகள், நம்முடைய செயல் தீங்குகளை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டுகிறானோ அவரைக் கெடுப்பவன் எவனுமில்லை. அல்லாஹ் யாரை வழிகெடுக்கிறானோ அவரை நேர்வழிப்படுத்துபவன் எவனுமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை என்று உறுதிமொழி கூறுகின்றேன். முஹம்மது அவனுடைய அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார் என்று உறுதிமொழி கூறுகின்றேன்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் 3:102

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

அல்குர்ஆன் 33:70, 71

இந்தப் புகழுரைக்குப் பின்…

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். செயலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செயலாகும். காரியங்களில் மிகவும் கெட்டவை புதியவையாகும். ஒவ்வொரு புதிய காரியமும் பித்அத் (நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவை) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் தான்.

“வரலாற்றுப் பயணத்தில் ஏகத்துவக் கொள்கை மற்றும் அறைகூவல்களை எதிர்கொள்கின்ற அதன் ஆற்றல்’ என்ற தொடரை வெளியிடுவதற்கும், இந்தச் சிறிய தொடரை வெளியிடுவதற்கு உதவி புரிந்த அல்லாஹ்வுக்குத் துவக்கத்தில் நன்றி செலுத்திக் கொள்கிறோம்.

தொடரில் இடம்பெறுகின்ற இந்தச் சிறிய நூலுக்கு, கஸ்ஸாலியின் இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் எனப் பெயரிட்டுள்ளேன்.

(இதையே, “இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?’ என்று தலைப்பிட்டுள்ளோம்.)

இஹ்யா என்ற இந்த நூல் மட்டுமல்ல. இதே அடிப்படையில் அமைந்த எந்த நூலாக இருந்தாலும் உடனடியாக நாம் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை அதை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். காரணம் இந்த நூல் அதிகமான மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தாலும் இந்த நூலின் பிரதியைக் காணாமல் இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் சில வீடுகளில் இந்த நூலைத் தவிர வேறு எந்த நூலையும் நீங்கள் பார்க்க முடியாது. வீடுகளுக்கு இந்த கதி என்றால் பொது மற்றும் தனி நூலகங்களின் கதியைச் சொல்ல வேண்டியதில்லை. அந்த நூலகங்களில் இஹ்யாவின் ஆட்டமும் ஆதிக்கமும் தான்.

மாத இதழ்கள், மக்களிடம் நடத்தப்படும் சொற்பொழிவுகள், மத்ரஸாக்களில் நடத்தப்படும் பாடங்களில் இஹ்யாவின் சாம்ராஜ்யத்தை நீங்கள் கேட்கவே வேண்டாம். சூபிஸம் என்ற கொள்கையில் ஈடுபாடு இல்லாதவர்களிடம் இஹ்யாவின் தாக்கம் இது! அந்த சூபிஸக் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதுதான் வானிலிருந்து இறக்கப்பட்ட இஞ்சீலும், ஸபூரும் ஆகும்.

அதனால் அந்த நூலைப் பற்றிய அவர்களது பாராட்டைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களது பாடங்களுக்கு அதை முன்னோடியாக ஆக்குவதைக் கூறவும் வேண்டுமா?

இது ஒன்றும் புதிது கிடையாது.

ஆனால் இவர்கள் இந்த இஹ்யாவை நோக்கி மக்களிடம் செய்கின்ற பிரச்சாரம், குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து மார்க்க விஷயத்தில் முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ள தெளிவான விளக்கத்திற்குக் கூட நேர் எதிராக இருப்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

தஃரீபுல் இஹ்யா பி ஃபளாயிளில் அஹ்யா – இஹ்யாவின் சிறப்புகளைப் பற்றி வாழ்பவர்களுக்கு ஓர் அறிமுகம் என்ற பெயரில் அப்துல்காதிர் பின் அப்துல்லாஹ் அல்ஐதுரூஸ் என்பவர் ஒரு நூலை இயற்றியிருக்கின்றார். இந்நூலைப் போன்று இஹ்யாவைச் சிறப்பிக்கும் விதமாக கஸ்ஸாலியின் ஆதரவாளர்கள் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றனர்.

அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும், முன்சென்ற சத்தியக் கொள்கையாளர்கள் மீதும் எந்த அளவுக்கு கஸ்ஸாலி ஆதரவாளர்கள் துணிந்து பொய் சொல்வார்கள் என்பதற்கு இந்த ஐதுரூஸ் தனது நூலில் கூறுகின்ற ஒரு சம்பவம் சரியான எடுத்துக்காட்டாகும்.

யாஃபிஇ கூறுவதாக அந்த நூலில் ஐதுரூஸ் தெரிவிப்பதாவது:

இஹ்யா உலூமித்தீன் என்ற நூலுக்கு எதிரான பிரச்சாரத்தில் அபுல் ஹஸன் அலீ பின் ஹர்சஹம் என்ற மார்க்க அறிஞர் மிகக் கடுமையான போக்கைக் கடைப்பிடித்திருந்தார். இவர் மக்ரிப் என்ற நாட்டைச் சேர்ந்த பிரபலமான மாபெரும் அறிஞரும் மார்க்கச் சட்ட மேதையும் ஆவார். மக்களிடம் அவரது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.

இஹ்யாவின் அனைத்துப் பிரதிகளையும் திரட்டுமாறு மக்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு அனைத்துப் பிரதிகளும் பெரிய பள்ளிவாசலில் குவிந்து கிடந்தன. வெற்றிகரமாகக் குவிந்த அந்தப் பிரதிகள் அனைத்தையும் கொளுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கனவுக் காட்சியும் கஸ்ஸாலியின் புகாரும்

அந்தத் தருணத்தில் வெள்ளிக்கிழமை இரவில் அவருக்கு ஒரு கனவுக் காட்சி தோன்றுகின்றது. அவர் (இஹ்யாவைக் கொளுத்தவிருக்கும்) அந்தப் பள்ளிக்குள் நுழைகின்றார். ஆச்சரியம்! நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் வீற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருக்கின்றார்கள்.

இமாம் கஸ்ஸாலி நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அலீ பின் ஹர்ஸஹம், நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் வந்ததும் கஸ்ஸாலி, “அல்லாஹ்வின் தூதரே! நான் எழுதிய நூல் அவர் குற்றம் சாட்டுவது போன்று அமைந்திருந்தால் நான் அல்லாஹ்விடம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டு விடுகின்றேன். அவரது குற்றச்சாட்டுக்கு மாற்றமாக இந்நூல் அமைந்து, உங்களது பரக்கத்தை பெறத்தக்க வகையிலும், உங்கள் வழிமுறையைப் பின்பற்றுகின்ற அடிப்படையிலும் அமைந்திருந்தால் என்னுடைய எதிர்வாதிக்கு உரிய தண்டனை அளியுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இஹ்யா உலூமித்தீனை எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார்கள். நூலின் கடைசி வரை ஒரு பக்கம் கூட விடாமல் படித்து முடித்தார்கள். “இந்த இஹ்யா ஓர் அழகான நூல்” என்று குறிப்பிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அதனைப் பார்த்து, “அருமை’ என்றார்கள். பிறகு அதைப் படித்து விட்டு, “உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பினானே அவன் மீது சத்தியமாக! இது ஓர் அழகான நூல் தான்” என்று சொன்னார்கள். பிறகு அதை உமர் (ரலி) அவர்கள் எடுத்துப் பார்த்து விட்டு, அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றே பாராட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அலீ பின் ஹர்ஸஹமின் சட்டையைக் கழற்றச் சொல்லி, இட்டுக்கட்டியவருக்கு – அவதூறு சொல்பவருக்குரிய கசையடிகளைக் கொடுத்து அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறு அவரது சட்டையைக் கழற்றி அடியும் கொடுத்தார்கள். ஐந்து கசையடிகள் கொடுத்ததும் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் பரிந்துரை செய்தார்கள். “இந்நூலில் உங்களுடைய சுன்னத்துக்கு மாற்றமான செய்தி இடம்பெற்றிருக்கின்றது என்று அவர் தவறாக நினைத்திருக்கலாம். அதன் அடிப்படையில் அவரது முடிவு தவறாக அமைந்திருக்கலாம்’ என்று அபூபக்ர் (ரலி) விளக்கமும் சொன்னார்கள். இதைக் கேட்ட இமாம் கஸ்ஸாலி திருப்தியடைந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டார்.

இப்போது அலீ பின் ஹர்ஸஹம் கண் விழிக்கின்றார். தமது முதுகில் கசையடியின் தடம் பதிந்திருப்பதைக் கண்டார். தன்னுடைய தோழர்களிடம் இதைத் தெரிவித்து, கஸ்ஸாலி இமாமுக்கு எதிரான பிரச்சாரத்திலிருந்து திருந்தி விலகி விட்டார். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினார். ஆனாலும் சாட்டையடி காயத்தின் காரணமாக ஏற்பட்ட வலியினால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டேயிருந்தார். இதற்கிடையே அல்லாஹ்விடம் பணிந்து உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை தேடிக் கொண்டிருந்தார்.

இறுதியில் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி தமது சங்கையான கையினால் அவருடைய முதுகில் தடவி விட்டார்கள். அவ்வளவு தான். அவருக்கு நிவாரணம் ஏற்பட்டு, அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு சுகமும் அடைந்தார். பிறகு இஹ்யா உலூமித்தீனைத் தொடர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அல்லாஹ் இந்த விஷயத்தில் அவரது உள்ளத்தைத் திறந்து விட்டான். அல்லாஹ்வின் ஞானத்தை அடைந்து மறைமுக, நேர்முக ஞானம் பெற்ற மாபெரும் மகான்களில் ஒருவராக மாறி விட்டார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!

இஸ்லாத்திற்கு எதிரான சதி

இந்தச் சம்பவத்தையும், இதை அப்படியே பதிவு செய்துள்ள நூல்களையும், இந்தச் சம்பவத்தைத் தாங்கி வெளியாகும் செய்தி ஆவணங்களையும் படிப்பவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் சதி செய்கின்ற மாபெரும் சதிகாரனைக் கண்டிப்பாக அடையாளம் கண்டு கொள்வார்.

இது முஸ்லிம்கள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்கின்ற மார்க்க விளக்கத்திற்கு நேர் எதிரான விஷயமாகும். இதை எப்படி முஸ்லிம்களுடைய ஏடுகளில் பதிவு செய்ய முடியும்?

எழுதப் படிக்கத் தெரியாமை தான் நபி (ஸல்) அவர்களின் மாபெரும் அற்புதமாகும். அப்படியிருக்கையில் அவர்கள் எப்படிப் படிப்பார்கள்? எழுதுவார்கள்? நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 29:48

ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள். அந்த விளக்கத்தை வரும் இதழில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

வளரும் இன்ஷா அல்லாஹ்