நூறு கொலை செய்தவர் பற்றிய ஹதீஸின் நிலை

குர்ஆனுக்கு முரணாகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் எவ்விதத்திலும் விளக்கம் சொல்ல முடியாத வகையிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் சில செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுபோன்ற செய்திகளைக் காணும் போது அதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனும் முடிவுக்கு வருவதே மார்க்கத்தை முரணில்லாமல் புரிந்து கொள்ளவும் பொய்யான செய்திகளைக் கண்டறியவும் ஹதீஸ்கலை வகுத்துத் தந்த விதியாகும். அதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை.

நாம் இந்த விதியின் அடிப்படையில் சில செய்திகள் தொடர்பாக, இவை ஹதீஸ் என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றோம். சில செய்திகளை சரியான விளக்கம் தெரியும் வரை நிறுத்தியும் வைக்கின்றோம்.

இதுபோன்ற செய்திகளுக்கு ஆதாரத்தின் அடிப்படையில் சரியான விளக்கம் வரும் போது அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தயக்கம் காட்டியது கிடையாது.

கடந்த காலத்தில் பல எதிர்கேள்விகள் எழுந்த காரணத்தினால் நூறு கொலை செய்தவர் தொடர்பான செய்தியின் கருத்தில் பல சிக்கல் இருப்பதாகக் கூறினோம்.

இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (4/ 211)

 3470 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ، عَنْ شُعْبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ ، عَنْ أَبِي سَعِيدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ : لاَ فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبُ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, “(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், கிடைக்காது என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது கருணைக்கான வானவர்களும் தண்டனைக்கான வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, நீ நெருங்கி வா! என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, நீ தூரப் போ! என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, “அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி).

நூல்: புகாரி 3470, முஸ்லிம் 5340, 5341

இதே செய்தி ஸஹீஹ் முஸ்லிம் 5339வது இலக்கத்தில் ஒரு சில கூடுதல் வார்த்தைகளுடன் இடம்பெறுகிறது.

صحيح مسلم ـ مشكول (13/ 338)

4967 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ لَا فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فَقَالَ قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ قَالَ قَتَادَةُ فَقَالَ الْحَسَنُ ذُكِرَ لَنَا أَنَّهُ لَمَّا أَتَاهُ الْمَوْتُ نَأَى بِصَدْرِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார்.

பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு ஒரு பாதிரியார் காட்டப்பட்டார். அவர் அந்தப் பாதிரியாரிடம் சென்று, “நான் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?’’ என்று கேட்டார். அந்தப் பாதிரியார், “கிடைக்காது’ என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கிவிட்டார்.

பிறகு மீண்டும் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், “நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்” என்று சொன்னார்.

அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பாதி வழியில் இறந்துவிட்டார். அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.

அப்போது அருளின் வானவர்கள், “இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்’’ என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், “இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்’’ என்று கூறினர்.

அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், “இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்’’ என்று சொன்னார்.

அவ்வாறே கணக்கெடுத்தபோது, (அவர் வசித்துவந்த ஊரைவிட) அவர் நாடிவந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா அவர்கள் கூறுகிறார்கள்:

“அவர் (இறக்கும் தருவாயில்) தமது நெஞ்சை (அந்த நல்ல ஊர் இருக்கும் திசை நோக்கி சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார்’’ என்று எங்களிடம் கூறப்பட்டது என ஹசன் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 5339

முன்பு இதில் கீழ்க்கண்ட எதிர்க் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

கொலைக்கு மன்னிப்பு கிடையாது எனும் போது 100 கொலை செய்தவரை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

ஊரை மையமாக வைத்து பாவமன்னிப்பு கிடைக்குமா?

வானவர்கள் சர்ச்சையில் ஈடுபடுவார்களா?

மன்னிப்பு வழங்கப்படுவதற்கு இறைவன் ஊரை அளந்து பார்ப்பானா?

இதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு மேற்படி செய்தி ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டு இந்தச் செய்தி குறித்து ஏற்கனவே எழுப்பப்பட்ட எதிர்கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் உரிய பதில்கள் கண்டறிப்பட்டது.

எனவே, மேற்படி செய்தியில் “மறுக்கத்தக்க எந்த அம்சமும் இல்லை” என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தச் செய்தி குறித்த ஆய்வில் பேசப்பட்ட பதில்களை விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

  1. நூறு கொலை செய்தவரை அல்லாஹ் மன்னிப்பானா?

முற்காலத்தில் வாழ்ந்த மனிதர் 99 கொலை செய்துவிட்டுத் தனக்கு மன்னிப்பு உண்டா என்று ஒரு பாதிரியிடம் கேட்கிறார். அவர் மன்னிப்பில்லை என்று கூறியதும் அவரையும் கொன்று தனது கொலையை நூறாக ஆக்குகிறார். மீண்டும் தனக்கு மன்னிப்பு உள்ளதா என்று மற்றவரிடம் கேட்கிறார். இவர் திருந்தினார் என்று எவ்வாறு சொல்ல இயலும்? இவ்வாறானவரை இறைவன் எவ்வாறு மன்னிப்பான்?

நூறு கொலை தொடர்பான செய்தியில் எழுந்த முதல் சந்தேகம் இதுவே! இதற்கான பதிலை முதலில் காண்போம்.

கொலை இஸ்லாத்தில் பெருங்குற்றம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய பாவம் என்றும் கண்டிக்கப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

யார் இறைநம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலை செய்கிறானோ அவனது கூலி நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டான். மேலும் அவனைச் சபித்து விட்டான். அவனுக்குக் கடும் வேதனையையும் தயார்படுத்தி விட்டான்.

அல்குர்ஆன் 4:93

“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

புகாரி 2766

“இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்” என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள் என்றார்கள்.

நூல்: புகாரி 31

“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டே இருப்பார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 5778

இதுபோன்ற ஆதாரங்கள் கொலை பெரும் பாவம் என்பதையும், நிரந்தர நரகத்திற்குரிய குற்றம் என்பதையும் கடுமையாக எச்சரிக்கின்றன.

அதே சமயம் இதற்கு மாற்றமாக இறைவன், தான் நாடினால் கொலைக் குற்றத்தை மன்னிப்பான் என்ற கருத்தில் வேறு சில ஆதாரங்களும் வந்துள்ளது.

இணைவைத்தலைத் தவிர மற்ற பாவங்களை இறைவன், தான் நாடியோருக்கு மன்னிப்பான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.

அல்குர்ஆன் 4:48

இணைவைப்பு மட்டுமே இறைவனால் மன்னிக்கப்படாத குற்றம் என்றும், அது அல்லாத ஏனைய பாவங்களை இறைவன், தான் நாடியோருக்கு மன்னிப்பான் என்பதையும் இவ்வசனம் எடுத்துரைக்கிறது.

இணைவைப்பு அல்லாத, இறைவனது மன்னிப்பிற்கு வாய்ப்புள்ள பாவங்களில் கொலையும் உள்ளடங்கும் என்பதை இந்த வசனத்தின் பொது விதியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், இந்தக் கருத்தினைக் கொலை தொடர்பான ஏனைய ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபசாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை’’ என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்’’ என்று கூறினார்கள்.

மேலும், “இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 3518

மேற்கண்ட செய்தியில் அல்லாஹ், தான் நாடினால் தண்டிப்பான், தான் நாடினால் மன்னிப்பான் என்ற பகுதியிலிருந்து கொலைக்கும் இறைவனது மன்னிப்பு அவன் நாடினால் உண்டு என்று தெளிவாகிறது.

இதே கருத்தை பின்வரும் வசனமும் உறுதி செய்கிறது.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள். அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொல்ல மாட்டார்கள்; விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யார் இதைச் செய்கிறாரோ அவர் தண்டனையை அடைவார்.

அவருக்கு மறுமை நாளில் தண்டனை இரட்டிப்பாக்கப்படும். அதில் இழிவுபடுத்தப் பட்டவராக என்றென்றும் இருப்பார்.

பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோரைத் தவிர! அவர்களுடைய தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:68-70

பின்வரும் செய்தியும் இந்தக் கருத்தைத் தருகிறது.

“எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 44

“எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ, ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1237

கொலை உட்பட பெரும் பாவங்கள் ஒருவர் செய்திருந்தாலும் சிறிதளவு ஈமான் அவரிடம் இருக்கும் போது அல்லாஹ் நாடினால் அவருக்கு மன்னிப்பு உண்டு என்று மேற்படி செய்தி தெரிவிக்கிறது.

எனவே, கொலை தொடர்பாக இருவிதமான கருத்துக்கள் வந்திருக்கும் போது இரண்டையும் சேர்த்துப் பின்வருமாறு விளக்கம் காணலாம்.

கொலைக்கு நிரந்தர நரகம் என்று சொல்லப்பட்டாலும் பிற ஆதாரங்களைக் கவனிக்கும்போது, அந்தப் பாவத்தையும் இறைவன், தான் நாடியோருக்கு மன்னிப்பான் என்றே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புரிந்தால் மட்டுமே முரண்பாடின்றி ஆதாரங்களைப் புரிய இயலும்.

இணைவைப்பைத் தவிர நரகில் நிரந்தரமாக இருப்போர் என்று வந்துள்ள மற்ற பாவங்களுக்கு, மன்னிப்பு வழங்கப்படாது என்ற முடிவுக்கு வர இயலாது என்பதை மேற்படி ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, கொலைக்கும் இறைவன் நாடினால் மன்னிப்பு உண்டு என்பதற்கு மேற்படி ஆதாரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.

இப்போது 100 கொலை தொடர்பான செய்திக்கு வருவோம்.

ஒருவர் 99 கொலை செய்துவிட்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு கிடைக்காதா என்று கேட்கிறார்.

தனக்கு மன்னிப்பில்லை என்று கூறியதும் அவரையும் கொன்று தனது கொலைகளை நூறாக ஆக்குகிறார்.

மீண்டும் வேறொருவரிடம் தனக்கு மன்னிப்பு உண்டா என்று கேட்கும் போது, ஒரு ஊரை சுட்டிக்காட்டி அங்கு நன்மக்கள் உள்ளார்கள். திருந்தி வாழ்வதற்கு ஏற்ற சூழல் அங்கு உள்ளது என்று அவர் அறிவிக்கிறார். அங்கிருப்பவர்களுடன் இணைந்து இறைவனை வணங்கி வழிபடு என்று அவர் அனுப்பியும் வைக்கிறார்.

இவரும் தனக்கு மன்னிப்பு கிடைத்தால் போதும் என்று அவ்வூரை நோக்கிச் செல்கிறார்.

இவரது முயற்சி முழுவதும் இம்முறை அந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்றுள்ளது.

அதனால் தான் தனக்கு மரணம் வருகிற அந்தக் கடைசி நிமிடத்தில் கூட அந்த ஊரை நோக்கித் தனது உடலை சாய்த்துக் கொள்கிறார். இதிலிருந்தே இம்முறை அவரது நோக்கமும் முழு எண்ணமும் அவ்வூருக்குச் சென்று விட வேண்டும் என்று இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நமது விஷயத்தில் முயற்சி செய்வோரை நம்முடைய வழிகளில் செலுத்துவோம். அல்லாஹ், நன்மை செய்பவர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 29:69

தனக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்றும் இறைவனை வணங்கி வழிபடும் மக்களோடு இணைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்றும் இம்மனிதர் புறப்பட்டு தனது மரணம் வரை அதற்கான முயற்சியில் இருந்ததிலிருந்தே இவர் மனம் திருந்திவிட்டார் என்று தெளிவாகிறது.

மனம் திருந்திய மனிதரை இறைவன் மன்னிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

தான் நாடினால் கொலைக் குற்றத்தை இறைவன் மன்னிப்பான் என்று ஆதாரம் இருக்கிறது எனும் போது அதுவே ஒரு கொலைக்கும் நூறு கொலைக்கும் பொருந்தும்.

ஒரு கொலைக்குப் பொருந்தும், நூறு கொலைக்குப் பொருந்தாது என்றால் அதற்கு தனியே ஆதாரம் தேவை. அவ்வாறான ஆதாரம் ஏதுமில்லை.

எனவே, இவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு விஷயத்தில் எவ்வித சந்தேகமுமில்லை.

  1. ஓர் ஊரை மையமாக வைத்து பாவமன்னிப்பு வழங்கப்படுமா?

ஒரு குறிப்பிட்ட ஊரில் இருந்தாலோ அல்லது அங்கு சென்றாலோ பாவமன்னிப்பு கிடைக்கும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாகத் தெரிகிறதே?

இந்தச் செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட அடுத்த கேள்வி இதுவே! இதற்கான பதிலையும் காண்போம்.

புகாரி 3470வது செய்தியை வைத்து மட்டும் பார்க்கும் போது இந்தக் கேள்வி வந்தாலும் முஸ்லிமின் 5339வது செய்தியையும் சேர்த்து கவனிக்கும் போது இந்தச் சந்தேகம் நீங்கிவிடுகிறது.

முஸ்லிமின் அறிவிப்பில் இடம்பெறும் வாசகம் இதோ:

அப்போது அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், “நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்” என்று சொன்னார்.

இதில் இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? என்ற ஆலிமின் பதில், இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்போருக்குக் கண்டிப்பாக மன்னிப்பு உண்டு என்ற குர்ஆன் நமக்குச் சொல்லும் பதிலையே தருகிறது.

எனவே, ஊரை பாவமன்னிப்புக்கான காரணமாக அவர் கூறவில்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

மேலும் இந்தப் பதிலை இதே செய்தியில் பாதிரியார் சொன்ன பதிலுடன் பொருத்தி பார்த்தால் இதை இன்னும் தெளிவாக அறிந்துக் கொள்ளலாம்.

பாதிரியார் இவருக்கு மன்னிப்பில்லை என்று கூறிவிடுகிறார்.

இப்போது ஆலிம் பாவமன்னிப்பு கோரிக்கைக்கும் இறைவனுக்கும் யாரும் குறுக்கே நிற்க முடியாது என்கிறார்.

இதிலிருந்து அந்த ஆலிம், பாதிரியார் சொன்ன பதிலுக்கு மறுப்பு வழங்குகிறார் என்பதை உணர முடிகிறது.

பாதிரியார் இறையதிகாரத்தில் தலையிட முடியாது. பாவமன்னிப்பு கேட்போருக்கு இறைவன் மன்னிப்பான். மன்னிப்பில்லை என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்பதே ஆலிமின் பதிலாக உள்ளது.

குறிப்பிட்ட ஊரை நோக்கிச் செல்லுமாறு ஏன் கூற வேண்டும்?

மன்னிப்பு இறையதிகாரத்தில் உள்ள காரியம் என்று ஆலிம் கூறினாலும் குறிப்பிட்ட ஊரை நோக்கிச் செல்லுமாறு ஏன் அவர் கூற வேண்டும்? அங்கு சென்றால் தான் மன்னிப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கான பதிலும் முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலேயே உள்ளது.

பாவமன்னிப்புக்கான காரணமாக ஊரை அந்த ஆலிம் கூறவில்லை. பாவமன்னிப்பு இறையதிகாரத்தில் உள்ள விஷயம் என்று சொல்லிவிட்டு மனம் திருந்திய அந்த நபர் நல்லவராக வாழவேண்டுமென்பதற்காவே சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு செல்லச் சொல்கிறார். ஏனெனில் அவரது ஊரில் பாவமான காரியத்தில் ஈடுபடுவோர் தான் அதிகம் உள்ளனர். இங்கு இவர் திருந்தினாலும் மற்ற மக்கள் இவரை திருந்தி வாழ விட மாட்டார்கள் என்பதற்காகத்தான் நல்லோர் வாழும் ஊருக்கு அவரை செல்லுமாறு கூறுகிறார். அங்கு சென்றால் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு திருந்தி வாழலாம் என்று வழியை காட்டுகிறார்.

இந்தக் கருத்தைத் தரும் ஆலிமின் வார்த்தை இதோ:

நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்”

எனவே, ஊர் மன்னிப்புக்கான காரணமாக அவருக்குச் சொல்லப்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

  1. இறைவன் ஊரை ஏன் நெருங்கி வரச் செய்ய வேண்டும்?

ஊரை அளவெடுத்துத் தான் இறைவன் மன்னிப்பு வழங்குவானா? தீயவர்கள் வாழும் ஊர் தான் நெருக்கமாக இருந்தும் இறைவன் அவர் செல்லவிருந்த ஊரை நெருங்கி வரச் செய்தது உண்மைக்கு மாற்றமான காரியம் போல உள்ளதே? இதை எவ்வாறு இறைவனுடன் இணைக்க முடியும்?

இது இச்செய்தி தொடர்பாக எழுந்த அடுத்த சந்தேகமாகும்.

முதலில் ஹதீஸில் இதற்கான பகுதியை பார்ப்போம்.

புகாரியின் அறிவிப்பு

அப்போது கருணைக்கான வானவர்களும் தண்டனைக்கான வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, நீ நெருங்கி வா! என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, நீ தூரப் போ! என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள் என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

முஸ்லிமின் 5339வது அறிவிப்பு

அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.

அப்போது அருளின் வானவர்கள், “இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்” என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், “இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்’’ என்று கூறினர்.

அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், “இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்’’ என்று சொன்னார்.

அவ்வாறே கணக்கெடுத்தபோது, (அவர் வசித்துவந்த ஊரைவிட) அவர் நாடிவந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.

மேற்படி இரு அறிவிப்புகளிலும் இடம்பெறும் தகவல்கள் இதோ:

அருளுக்கான வானவர்களும் தண்டனைக்கான வானவர்களும் இவரை யார் கைப்பற்றுவது என்று சர்ச்சை செய்து கொள்கின்றனர்.

அருளுக்கான வானவர்கள், ‘இவர் இறைவனிடம் தவ்பா தேடி அல்லாஹ்வை நாடி வந்தவர். அதனால் நாங்கள் தான் கைபற்றுவோம்’ என்கின்றனர்.

தண்டனைக்கான வானவர்கள் ‘இவர் நன்மையேதும் செய்யவில்லை. அதனால் நாங்கள் தான் கைபற்றுவோம்’ என்கின்றனர்.

இப்போது இறைவன் ஊர்களின் தூரத்தைக் கணக்கெடுக்கச் சொல்கின்றான். ஒரு அறிவிப்பில் இத்தகவலை மற்றொரு வானவரின் மூலம் கூறியதாக இடம்பெறுகிறது.

இந்த சமயத்தில் தான் இறைவன் அம்மனிதர் சென்ற ஊரை நெருங்கச் செய்கிறான். அருளுக்கான வானவர்கள் கைப்பற்றும் படி செய்கிறான்.

இதுவே மேற்படி செய்தியில் இடம்பெறும் தகவல்கள்.

இறைவன் மன்னிப்பதற்கு ஊரைக் காரணமாக ஆக்குகிறானா?

இறைவன் ஒருவரை மன்னிக்க நாடினால் அவர் குறிப்பிட்ட ஊருக்குச் சென்றிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அதே சமயம் தான் நாடியோருக்கு மன்னிப்பை வழங்க முடிவு செய்த இறைவன் அதற்காகத் தான் நாடிய முறைகளையும் கையாள்வான் என்பதும் ஹதீஸ்கள் நமக்கு சொல்லித்தரும் விஷயமாகும்.

உதாரணமாக,

விபச்சாரம் செய்த பெண்ணுக்கு இறைவன் மன்னிப்பை வழங்குகிறான். அதற்கு காரணமாக நாய்க்கு நீர் புகட்டியதை இறைவன் ஆக்கினான்.

“(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 3467

இந்தச் செய்தியும் கொலை நிகழ்வை போலவே பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபர் குறித்துப் பேசுகிறது.

விபச்சாரம் புரிபவராக இருந்த பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதிலிருந்தே அந்தப் பெண்ணிடத்தில் இணைவைப்போ இறைமறுப்போ இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தாகித்திருந்த நாய்க்கு நீர் புகட்டியதற்காக அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

இதை வைத்து விபச்சாரக் குற்றத்திற்கு நாய்க்கு நீர் புகட்டினால் தான் மன்னிப்பு என்று சட்டம் எடுக்க மாட்டோம்.

அல்லாஹ் அப்பெண்ணை மன்னிக்க நாடிவிட்டான். அதற்கு ஒரு ஏற்பாடாக நாய்க்கு நீர் புகட்டியதை ஆக்கியுள்ளான். அவ்வளவே. இதை வைத்து நாய்க்கு புகட்டினால் தான் விபச்சாரத்திற்கு மன்னிப்பு என்று சொல்ல இயலாது.

இதே போலத்தான் நூறு கொலை செய்த நபர் விஷயத்திலும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விபச்சாரம் பெரும்பாவம் என்பதைப் போலவே கொலையும் பெரும்பாவம். அதற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது போலவே இச்செய்தியில் நூறு கொலை செய்த மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர் திருந்தியதும் அவரது முயற்சியும் தான் மன்னிப்புக்கான காரணமே தவிர ஊருக்குச் செல்வது மன்னிப்புக்கான காரணமில்லை. அதைக் கணக்கிடுவது என்பது இறைவனின் ஏற்பாடு.

இதை இன்னும் விரிவாக புரிந்து கொள்ள மறுமையில் நடக்கும் மற்றொரு நிகழ்வையும் பார்ப்போம்.

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் “இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்)” என்று அவன் கூறுவான். “(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்று அல்லாஹ் கேட்பான்.

அதற்கு அவன் “என் இரட்சகனே ஏதுமில்லை” என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். “நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்” என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்” என்று கூறுவான்.

அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2639

மேற்படி செய்தியில் அதிகமான பாவத்தைச் சுமந்திருக்கும் ஒரு மனிதனிடம் நன்மையேதுமில்லை. அவரிடம் தவ்ஹீத் மட்டுமே இருக்கிறது.

அம்மனிதரை இறைவன் மன்னிக்க நாடிவிட்டான் என்றாலும் அதை அளவிடச் சொல்லி அங்கு ஓர் ஏற்பாட்டை இறைவன் செய்கிறான்.

பாவ ஏடுகளை விட நன்மைக்கான ஏடு சிறியதாக இருந்தாலும் சிற்றேடு தான் கனமாக இருக்கும் என்று இச்செய்தியில் கூறப்படுகிறது.

இங்கு இந்தச் செய்தி சொல்லும் பாடம், நன்மைகள் ஏதுமில்லையென்றாலும் தவ்ஹீத் மட்டுமே இறைவனது மன்னிப்பைப் பெற போதுமானது என்பதேயாகும்.

இதை உணர்த்துவதற்கு இறைவன் இவ்வாறான எடை போடும் ஏற்பாட்டைச் செய்து சிறிய ஏட்டையும் கனக்கச் செய்துள்ளான்.

இதே போலத்தான், நூறு கொலை நிகழ்விலும் அம்மனிதரிடம் ஏகத்துவம் மட்டுமே இருக்கிறது. நன்மை ஏதுமில்லை.

அருளுக்கான வானவர்கள், அவர் மனம் திருந்தி இறைவனே மன்னிப்பான் என்று உணர்ந்ததால் அவரைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.

இவர் நன்மையேதும் செய்யவில்லை என்பதால் தண்டனைக்கான வானவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள்.

இதுபோல இருவரும் போட்டி போட்டுக் கொள்ளும் ஏற்பாட்டின் மூலம் அவரது நிலையை இறைவன் விளக்குகிறான்.

இரு சாராரும் சொல்லும் காரணங்களின் மூலம், நன்மையேதுமில்லை என்றாலும் தவ்ஹீதே ஒருவர் இறை மன்னிப்பைப் பெற போதுமான காரணம் என்ற அருளுக்கான வானவர்களே சரியான காரணத்தைச் சொன்னதால் அவர்களுக்குத் தக்கவாறு ஊரை நெருக்கி வரச் செய்துள்ளான்.

தவ்ஹீதின் நன்மையையும் இறைவனது மன்னிப்பின் விசாலத்தையும் உணர்த்துவதாக மற்ற செய்திகள் எவ்வாறு அமைந்துள்ளதோ அவ்வாறே நூறு கொலை தொடர்பான இச்செய்தியும் அமைந்துள்ளது.

மன்னிக்க நாடிய இறைவன் நாய்க்கு நீர் புகட்டும் ஏற்பாட்டை செய்ததைப் போல வானவர்களை வரவழைத்து ஊரை நெருக்கி வரச் செய்யும் ஏற்பாட்டை இவர் விஷயத்தில் செய்துள்ளான்.

சிற்றேட்டை கனக்கச் செய்ததைப் போல ஊரை நெருக்கமாக்கியுள்ளான்.

ஏனைய செய்திகளில் இடம்பெறும் இறைவனின் செயல்பாடுகளைப் போலத்தான் இச்செய்தியிலும் இடம்பெறுகிறதே தவிர இச்செய்தியில் சந்தேகத்திற்குரிய அம்சம் ஏதுமில்லை.

எனவே, இவையனைத்தும் இறைவனின் ஏற்பாடு என்றும், தான் மன்னிக்க நாடியவர்களை, தான் நாடிய விதத்தில் இறைவன் மன்னிப்பான் என்றும் நம்புவதே பொருத்தமே தவிர மன்னிப்புக்கான காரணமே ஊரை நெருங்கியிருப்பது தான் என்று புரிவது தவறாகும்.

அல்லாஹ், தான் நாடியவற்றைச் செய்பவன்.

அல்குர்ஆன் 85:16

  1. வானவர்கள் சர்ச்சையில் ஈடுபடுவார்களா?

வானவர்கள் இறைக்கட்டளைப் படியே செயல்படுவார்கள் எனும் போது அவர்கள் தங்களில் யார் கைப்பற்றுவது என்று சர்ச்சையில் ஈடுபட்டுக் கொள்வார்களா?

இது இச்செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட இறுதி கேள்வியாகும்.

இதற்கு முந்தைய பதிலிலேயே இதற்கான விடையையும் அறிந்து கொள்ளலாம்.

முதலில், இறை உத்தரவின்றி வானவர்கள் வந்து சர்ச்சையில் ஈடுபட்டார்கள் என்று அச்செய்தியில் இடம்பெறவில்லை. அந்தக் கருத்தமைப்பும் இல்லை.

மாறாக, யார் கைப்பற்றுவது என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்கான தீர்வை இறைவன் தருவதிலிருந்தே இறைவனே இவ்வாறு அவர்களை அனுப்பியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.

பிறகு, அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள் என்று (வானவர்களுக்குக்) கூறினான்.

நூல்: புகாரி

எனவே, இறைவனது அனுமதியின்றி வானவர்கள் வந்துள்ளார்கள் என்ற கருத்து இச்செய்தியில் இல்லை.

ஒருவர் மன்னிக்கப்படுவதற்கு காரணத்தை சமுதாயத்திற்கு தெளிவுப்படுத்த இறைவன் ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கும் போது அதற்காக வானவர்கள் வருவதும் அவ்விருவரும் யார் கைபற்றுவது என போட்டியிடுவதும் அதன் பின் இறைவன் தீர்வு சொல்வதும் அந்த ஏற்பாட்டின் கீழே வரும்.

இறைவனின் ஏற்பாட்டின் படி போட்டியிட்டுக் கொள்வது வானவர்களிடம் உள்ள நடைமுறை தான் என்பதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

நாங்கள் ஒருநாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் ‘ரப்பனாவல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ’ என்று கூறினார். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?’ என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் தான் என்றார். ‘முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 799

நன்மையை யார் பதிவு செய்வது என வானவர்கள் தங்களுக்கு மத்தியில் போட்டியிட்டுக் கொண்டதாக மேற்படி செய்தி கூறுகிறது.

இறைவனின் ஏற்பாட்டின் படி தர்க்கித்துக் கொள்வது வானவர்களிடம் உள்ள நடைமுறை தான் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்தும் அறியலாம்.

இது மாபெரும் செய்தியாகும். நீங்களோ இதைப் புறக்கணிக்கிறீர்கள். உயர்ந்த (வானவர்) கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டபோது அவர்களைப் பற்றிய அறிவு எனக்கு இருக்கவில்லை. ‘நான் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்தான்’ என்றே எனக்கு அறிவிக்கப்படுகிறது” என்றும் (நபியே!) கூறுவீராக.

உமது இறைவன், வானவர்களிடம் “நான் களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன். நான் அவரை முழுமைப்படுத்தி, என் உயிரை அவரில் ஊதியதும் நீங்கள் அவருக்குப் பணிந்து கட்டுப்படுங்கள்!” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!

அல்குர்ஆன் 38:67-72

எனவே, நூறு கொலை செய்தவர் தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்ட சந்தேகத்திற்குரிய அம்சங்கள் அனைத்திற்கும் ஆதாரப்பூர்வமாக பதில் அமைந்துள்ளதால் அச்செய்தியில் முரண்பாட்டின் அம்சம் ஏதுமில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்.

அதே சமயம், எவ்விதத்திலும் விளக்கம் கொடுக்க முடியாத வகையில் குர்ஆனுக்கு முரணான கருத்தமைப்பு கொண்ட ஒரு செய்தி நபிகளாரின் பெயரில் வந்திருக்கும் எனில் அதை ஹதீஸ் என்று தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை