நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

கேள்வி :

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

பதில் :

ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்?

ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! காமஉணர்வு மிக்கவராக நபியவர்களை அடையாளம் இது காட்டுகிறதே?

என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும்.

இந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் சிலரின் உள்ளங்களிலும் இந்தச் சந்தேகம் குடிகொண்டிருக்கக் கூடும். புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களின் முதல் கேள்வியும் இது பற்றியதாகவே அமைந்துள்ளது.

இந்த ஐயத்தை அகற்றும் விதமாக அறிஞர் பெருமக்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து மறுப்புகள் பல அளித்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமனங்கள் செய்ததற்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். அந்தக் காரணங்களில் பெரும்பாலானவை சந்தேகங்களை நீக்கி தெளிவைத் தருவதற்குப் பதிலாக மேலும் சந்தேகங்களையே அதிகப்படுத்தி விட்டன.

அந்த அறிஞர்கள் சொல்லும் பொருந்தாத காரணங்களை முதலில் பார்த்து விட்டு உண்மையான காரணங்களைக் காண்போம்.

விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பனம் செய்தனர். இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மனைவியருக்கு வாழ்வளிக்கவும், விதவை மறுமணத்தை ஆர்வமூட்டவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தனர் என்று சில அறிஞர்கள் காரணம் கூறுகின்றனர்.

இந்தக் காரணம் ஏற்க முடியாததாகும். விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மனைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற விதவைகளில் பத்துப்பன்னிரண்டு விதவைகளுக்கு மாத்திரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவில்லை.

விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு நான்கு மனைவியர் எனும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் நான்குக்கு மேல் மணம் செய்வதை எக்காலத்துக்கும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்தக் காரணம் சரியானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் விதவை மறுமணம் ஆர்வமூட்டப்பட வேண்டிய நிலைமையில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே அன்றைய அரபுகள் விதவை மறுமணம் செய்து வந்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த அரபுகளும் விதவை மறுமணம் செய்திருந்தனர். இதற்குச் சான்றாக கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய திருமணங்களைக் கூறலாம்.

காதீஜா (ரலி) அவர்கள் முன்னர் அபூ ஹாலா என்பவரின் மனைவியாக இருந்தார்கள். அவர் மரணித்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்தார்கள். அவரும் மரணமடைந்த பிறகே நபியவர்களைத் திருமணம் செய்தார்கள்.

(பார்க்க : அல் இஸாபா)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணப்பதற்கு முன்பே விதவையாக இருந்த கதீஜா (ரலி) அவர்களை அதீக் என்பவர் மணந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அன்றைய அரபுலக வரலாற்றைப் பார்க்கும் போது இந்தியாவில் இருந்தது போல் விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருக்கவில்லை. ஏராளமானோர் விதவை மறுமணம் செய்திருந்தனர் என்பதை அறியலாம். அந்த நல்ல வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அங்கீகரித்தார்கள். இது தான் வரலாற்று உண்மை.

இந்த உண்மைக்கு மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் விதவை மறுமணம் செய்தார்கள் என்பதும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டுவதற்காக நிறைய விதவைகளைத் திருமணம் செய்தார்கள் என்பதும் பொருந்தாத காரணங்களாகும்.

நட்பைப் பலப்படுத்துவதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி), உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை நபியவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.

இந்தக் காரணமும் பொருந்தாக் காரணமேயாகும். நண்பர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்துவதற்காக நான்கு என்ற வரம்பு நீக்கப்பட்டதென்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் வரம்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக இது போன்று யார் செய்தாலும் வரவேற்கத்தக்க காரியம் தான் என்று மார்க்கம் சொல்லி இருக்க வேண்டும்.

மேலும் திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.

இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தும். அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தாது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.

எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் பலம் பொருந்திய கோத்திரத்தினரை – அண்டை நாட்டுத் தலைவர்களை எதிரிகளாகப் பெற்றிருந்தார்கள். அவர்களது எதிர்ப்பின் வேகத்தைக் குன்றச் செய்வதற்காக அவர்களின் கோத்திரத்தில் திருமணம் செய்து அதன் வேகத்தைக் குறைத்தனர் என்பர் இன்னும் சிலர்.

இதுவும் பொருந்தாத காரணமேயாகும். ஏனெனில் இது போல் திருமணம் நடந்த பின் ஒரு சில கோத்திரத்தில் எதிர்ப்பு வேகம் குறைந்திருந்தாலும், மற்றும் சிலருடைய எதிர்ப்பு வேகம் அதிகரித்திருந்தது.

அபூ சுப்யான் (ரலி) அவர்களின் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபியவர்கள் மணம் முடித்திருந்தும் பல்லாண்டுகள் நபியவர்களின் எதிரியாகவே அவர் திகழ்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் படை எடுத்து வந்து யுத்தங்கள் செய்தார். எனவே இந்தக் காரணமும் சரியானதல்ல.

நாட்டுத் தலைவர் என்ற முறையில் பகைமையைக் குறைத்துக் கொள்வதற்காக விதிவிலக்கு உண்டென்றால், இஸ்லாமிய ஆட்சித் தலைவராக வரும் தலைவர்கள் அனைவருக்கும் மட்டுமாவது இதே காரணத்துக்காக நான்குக்கு மேல் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி மார்க்கத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. நபியவர்கள் நான்குக்கு மேல் மணம் செய்ததற்குக் கூறப்படும் இது போன்ற காரணங்கள் ஏற்க இயலாதவையாகும். எளிதில் எவராலும் மறுத்துரைக்கத் தக்கவைகளாகும்.

காமவெறி தான் காரணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு இவை காரணமல்லவென்றால் உண்மையான காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் நபியவர்கள் பல பெண்களை மணந்ததற்கு மிதமிஞ்சிய காம உணர்வே காரணம் என்ற பிரச்சாரம் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

ஒரு ஆண் மகனுக்கு அவனது இளமைப் பருவத்தில் தான் பெண்களின் பால் அதிக நாட்டம் இருக்கும். பெண்களை அனுபவிப்பதற்கான வலிமையும் இளமைப் பருவத்தில் தான் மிகுதியாக இருக்கும். உலகத்து இன்பங்களை – குறிப்பாக உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை – அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி நிற்பதும் அந்தப் பருவத்தில் தான்.

வயதான காலத்தில் கூட சிலர் இதில் இளைஞர்களை விட அதிக நாட்டம் கொள்கிறார்களே என்று சிலருக்குத் தோன்றலாம். இது உண்மை தான், எனினும் முதிய வயதில் பெண்களை அதிகம் நாடுபவர்கள், அவர்களின் இளமைக் காலத்தில் அதை விடவும் அதிகம் நாடியிருப்பார்கள். அவரவர்களின் இளமைப் பருவத்துடன் அவரவர்களின் முதுமைப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இளமைப் பருவம் தான் அந்த இன்பத்தை அனுபவிக்க ஏற்ற பருவமாகும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

1- கதீஜா (ரலி) அவர்கள்

இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும்.

நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது.

பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் – அவர்கள் மட்டுமே – இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத் தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16

தம்மை இறைத்தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்களைச் சூட்டி அவர்களை இழிவுபடுத்த முனைந்தது அந்தக் கூட்டம். இவ்வளவு வெறுப்புக்குரியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகிவிட்ட பின்னரும் நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்வு பற்றி அவர்கள் விமர்சித்ததில்லை.

கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.

தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பபு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்கான எல்லா வசதியும் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் அவர்கள் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவராக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.

தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப் படக்கூடிய கட்டழகுக் கன்னியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகிப் போன நாற்பது வயது கதீஜா (ரலி) அவர்களையே மணம் செய்தார்கள்.

தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மனைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கன்னித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மனைவி வேண்டும் என்ற அளவுக்கு அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.

இல்லற வாழ்வுக்குக் கன்னியரை விட விதவைகள் தான் அதிகம் பொருத்தமானவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணி இருக்கலாமோ என்றால் அதுவும் இல்லை.

ஏனெனில் ஒரு இளைஞன் கன்னியரை மணப்பதே சிறந்தது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்ற இளைஞனிடம் நீ திருமணம் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம்! என்றார். கன்னியா? விதவையா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் விதவை தான் என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ ஒரு கன்னியை மணந்திருக்கக் கூடாதா? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும்,அவளுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கவும், உண்ணுடன் அவள் மகிழ்ச்சியாக இருக்கவும் கன்னிப் பெண்ணே ஏற்றவள் என்று கூறினார்கள்.

ஆதாரம் : புகாரி 2097, 2309, 5247

ஒரு இளைஞன் தன் காம உணர்வைத் தணித்துக் கொள்ள அவனுக்கு ஈடு கொடுத்து முழு அளவில் திருப்திப்படுத்த கன்னிப் பெண்ணே தகுதியானவள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த அதிகபட்சத் தகுதியைப் பிறருக்கு சிபாரிசு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காக அதை விரும்பவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா (40 வயது முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள கால கட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.

நன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் ஒரேயொரு மனைவியுடன் விதவையுடன் – தம்மை விட பதினைந்து வயது மூத்த விதவையுடன் மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காமஉணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

இன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் இல்லற உறவை விரும்பினால் அந்த உறவு முழுமையானதாக அமையாது.

கதீஜா (ரலி) அவர்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்த அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் அடைந்து விடுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மனைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா (ரலி) அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள். கதீஜா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழுமையான இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா? என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிதமிஞ்சிய காமஉணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மனைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபியவர்கள் வாழ்ந்திருக்க முடியும்? இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா? குறைந்தபட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா? அப்படியெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மனைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் அவ்ர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட் எவருமே அதைக் குறை கூறி இருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தமது ஐம்பதாம் வயது வரை – கதீஜா மரணிக்கும் வரை இன்னொரு திருமணமே செய்யவில்லை.

இன்னொரு கோனத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது.

தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்தில் அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயது வரை பல மனைவியருடன் வாழ்வதை அவர்கள் தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.

இவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு காம உணர்வுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.

மறுமணம் செய்யாவிட்டாலும், தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மனைவி அமைந்தால் குறைந்தபட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும்.

ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் ஹிரா எனும் குகைக்குப் போய் பல நாட்கள் தனித்து இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். கரடு முரடான அந்த மலையில் ஏறி கதீஜா அவர்கள் நபிகள் நாயகத்துக்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு வருவார்கள். அவ்வாறு அந்தக் குகையில் தங்கி இருந்த போதுதான் தனது தூதராக அவர்களை இறைவன் நியமித்தான். இது இஸ்லாமிய வரலாறு.

காமஉணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தது அவர்கள் காமஉணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

உடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும், முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள்.

அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா?

தமக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, முஹம்மதுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அரபு உலகமே எள்ளி நகையாடியது. எனக்குப் பயமாக இருக்கிறது; என்னைப் போர்த்துங்கள் என்று நடுங்கினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் உங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீங்கள் அநாதைகளை ஆதரிக்கிறீர்கள், ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள். அடிமைகளை விடுதலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேராது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என ஆறுதல் கூறி அன்று வாழ்ந்த மக்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கதீஜா (ரலி) அவர்களே பெற்றார்கள்.

நபியவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால், அதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கவே முடியாது. உலகம் பைத்தியக்காரர் என்று பட்டம் சூட்டுவதற்கு முன் முதலில் கதீஜாவே அந்தப் பட்டத்தைச் சூட்டியிருப்பார்கள்.

காம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபியவர்களின் தவவாழ்வை கதீஜா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் நபிகள் நாயகத்தை இறைத்தூதர் என்று முதலில் நம்பும் பெருமையை கதீஜா (ரலி) பெற்றார்கள்.

கதீஜா (ரலி) அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவவாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.

இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு இறைச் செய்தி வந்ததாகக் கூறிய போது, அநாதைகளுக்கு உதவுதல், ஏழைகளை அரவணைத்தல், அடிமைகளை விடுவித்தல் போன்ற அருங்குணங்களைக் கூறி ஆறுதல் படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமைந்திருந்த இந்த நற்குணங்களையே கதீஜா (ரலி) அவர்கள் காதலித்தார்கள். வெறும் கட்டுடலை அல்ல என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் தமக்கு உடல் சுகம் தர இயலாத கதீஜா (ரலி) அவர்கள் மரணித்ததற்காக இடிந்து போயிருக்க மாட்டார்கள். இனியாவது மகிழ்ச்சியில் திளைக்கலாமே என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் கதீஜா அவர்கள் மரணித்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எவரது இழப்புக்காகவும் கவலைப்பட்டதில்லை.

அவர்களின் கவலையை வர்ணிக்க வார்த்தை தேடிய சரித்திர ஆசிரியர்கள் கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த ஆண்டை ஆமுல் ஹுஸ்ன் – கவலை ஆண்டு – எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு நபியவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள். கதீஜா அவர்களை நினைவில் வைத்திருந்தது போல் வேறு எவரையும் அவர்கள் நினைவு கூரவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிலே கன்னியாக இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட கதீஜா (ரலி) அவர்களின் இடத்தை அடைய முடியவில்லை. நானே பொறாமைப்படும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் கதீஜா அவர்களை நபியவர்கள் நிணைவு கூர்வார்கள், புகழ்ந்துரைப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004

அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்றால் கதீஜாவை விட நபியவர்கள் ஆயிஷாவை அதிகம் நேசித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிஷாவால் கூட அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

தமது இல்லத்தில் ஆடு அறுக்கப்படுமானால் கதீஜாவின் தோழியருக்குக் கொடுத்தனுப்புங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று நான் கேட்ட போது கதீஜாவின் தோழியர்களை நானும் விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004

இந்த உலகத்தில் உள்ள பெண்களிலேயே மிகவும் சிறந்தவர்கள் இம்ரானுடைய மகள் மர்யமும், குவைலித் என்பவரின் மகள் கதீஜாவும் ஆவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 3432

ஒரு மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க ஆயிஷாவின் இல்லத்திற்கு வந்த போது அவர்களுக்கு மரியாதை செய்து தமது மேலாடையை விரித்து, அதில் அந்த மூதாட்டியை அமரச் செய்தார்கள். அந்த மூதாட்டி திரும்பிச் சென்ற பின் இதன் காரணத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, கதீஜாவை அடிக்கடி இந்தப் பெண் சந்திக்க வருவார். அதுவே காரணம் என்றார்கள்.

நபியவர்கள், கதீஜாவைப் புகழ்ந்துரைத்த நபிமொழிகளை யெல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.

தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜாவுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.

ஐம்பது வயது வரை ஒருவருக்குக் காமவெறி இல்லாமல் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காமவெறி திடீரென்று ஏற்பட்டு விட்டது என்று கூறினால் அறிவுடைய யாரும் அதை ஏற்பார்களா?

2 ஸவ்தா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.

ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு வி;ட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் (ரலி) அவர்கள், தம் மனைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்.

இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டால், கதீஜா (ரலி) அவர்களுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்வு அந்தக் காமஉணர்வுக்கு ஈடு கொடுக்கத்தக்க விதமாக அமைந்திருக்காத நிலையில், இந்த இரண்டாம் திருமணத்தின் போதாவது இளம் பெண்ணை விரும்பியிருக்க வேண்டும். காமஉணர்வைப் பிரதானமாகக் கொண்டவர் நீண்டகாலம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டவர் இளம் வயதுப் பெண்ணைத் தான் தேர்வு செய்வார்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும்.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காமஉணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்தும் தெளிவாகும்.

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.

3 ஆயிஷா (ரலி) அவர்கள்

இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே.

அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வசாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது.

சிறுவயது ஆயிஷாவை நபிகள் திருமணம் செய்தது ஏன் என்பதை விபரமாக அறிய

சிறிய வயதுடைய ஆயிஷாவை நபிகள் மணந்தது ஏன்?

ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னியாக இருந்தவர்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்ததற்குக் கூட காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

காமவெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ளத் தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவை தான்.

ஒருவனுக்குக் காமஉணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்துவிட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத்தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காமஉணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.

இப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான்.

நபிகள் நாயகத்துக்கு முதல் மனைவியுடன் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மனைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.

இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் – காமவெறி கொண்டவராக இருந்தால் அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நிலையை அடைந்திருந்தும் ஆயிஷா (ரலி) அவர்களை மூன்றாவதாக மணம் புரிந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே! இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களைப் பெயரளவுக்குத் தான் திருமணம் செய்கிறார்கள்.

இத்திருமணம் நடந்த பின் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யுடன் அப்போது இல்லறம் நடத்தவில்லை. மக்காவை விட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்புதான் ஆயிஷா (ரலி அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.

எனவே இத்திருமணத்திற்கு காமவெறியைக் காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.

உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷாவின் தந்தை அபூ பக்ர் ( ரலி) அவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது, எதிரிகள் நபிகள் நாயகத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்குப் புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து புறப்பட்ட இந்தப் பயணத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்தச் சமுதாயத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.

இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூ பக்கர் (ரலி) அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள்.

பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும்.

மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் ஆயிஷாவை மணக்கும் போது சவ்தா மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியாக இருந்தார்கள். நான்கு என்ற வரம்புக்கு உட்பட்டதாகவே இத்திருமணம் இருந்தது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைக் காலத்திலும், கதீஜாவை மணந்த இறுதிக் காலத்திலும், ஸவ்தாவை மணந்த காலத்திலும் பொங்கியெழாத காமவெறி அவர்களின் ஐம்பத்தி மூன்றாம் வயதில் திடீரென பொங்கி எழ முடியுமா?

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா (ரலி) மரணமடைந்து விட்டதால் இரண்டு மனைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.

இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் காலகட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.

அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இருபத்தி ஐந்து வயதுடைய கட்டழகு இளைஞன் நாற்பது வயது விதவையைத் திருமணம் செய்து அவளுடனேயே தனது ஐம்பது வயது வரை – அவளுடைய அறுபத்தைந்து வயது வரை – வாழ்ந்தால் அறிவுடைய எவரேனும் இதற்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூற துணிய மாட்டார்.

அதே மனிதன் தனது ஐம்பதாவது வயதில், ஐம்பத்தைந்து வயது விதவையை மீண்டும் திருமணம் செய்தால் அதற்கும் காமவெறியைக் காரணமாகக் கூற எந்த அறிவாளியும் முன்வர மாட்டார்.

ஐம்பத்தைந்து வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது சாத்தியமாகாது என்பதை அறிந்த எவருமே இவ்வாறு கூறத் துணிய மாட்டார்.

திருமணம் செய்யும் நேரத்தில் தான் அந்தப் பெண் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கிறார். நபியவர்கள் மரணிக்கும் காலத்திலோ அப்பெண் அறுபத்தி எட்டு வயதுடையவராக இருக்கிறார். ஐம்பத்தி ஐந்து முதல் அறுபத்தி எட்டு வயது உள்ள பெண்ணிடம் என்ன காமசுகம் அனுபவித்திட இயலும்?

இதே கட்டத்தில் அந்த மனிதர் ஆறு வயது சிறுமியைப் பெயரளவுக்கு மணமுடித்தால் அதற்கும் காமவெறியை நியாயவான்கள் காரணம் காட்ட மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களில் இது வரை கூறப்பட்ட மூன்று திருமணங்களும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பதைக் களங்கம் சுமத்துவோர் கவனிக்க வேண்டும். நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.

4- ஹஃப்ஸா (ரலி) அவர்கள்

ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர்.

அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.

கணவரை இழந்து விதவையாகிப் போன ஹப்ஸா (ரலி) அவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா (ரலி) அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.

ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் வரை தான் மணந்து கொள்ளலாம் என்று அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை இந்தச் சந்தர்ப்பத்திலும் நபியவர்கள் கடந்து விடவில்லை.

நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிக்குரிய நியாயங்களே இத்திருமணங்களுக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தவரும், தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்தவருமான உமர் (ரலி) அவர்களின் மகளாக ஹப்ஸா (ரலி) அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாக இருக்கலாம்.

இந்தப் பிரத்தியேகக் காரணம் இல்லாவிட்டால் கூட இந்தத் திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவிக்கு மேல் கூடாது எனும் வரம்பைக் கடந்து விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது திருமனத்தைக் காண்போம்.

5 ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார்.

ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.

ஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமனம் செய்ததற்கு காமவெறிதான் காரணம் என்று சிந்திக்கும் எவராவது கூற முடியுமா? இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காமவெறியைக் காரணமாகக் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா (ரலி) முன்னரே மரணித்து விட்டதாலும், ஸைனப் (ரலி) எட்டு மாதங்களில் மரணித்து விட்டதாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா (ரலி) ஆகிய மூவர் மட்டுமே.

இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடுத்தடுத்த திருமணங்களைக் காண்போம்.

6 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காகச் செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.

இதில் மாற்றாரின் மீது மட்டும் ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. முஸ்லிம் அறிவீனர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் ஆதாரமில்லாமல் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.

உக்கால் எனும் அரபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்.

கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்த பின் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பினால் விடுதலை செய்து விடலாம் என்று கூறி விட்டார்கள்.

அதன் பின் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும், அவரது சகோதரர் கஅப் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்குரிய விலையைத் தந்து விடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம்; எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தரவேண்டியது இல்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது என்று கூறி விட்டனர்.

வந்தவர்கள், ஸைத் அவர்களிடம் பேசிப் பார்த்தனர். முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஸைத் இனி மேல் என் மகனாவார். அவர் இனி அடிமையில்லை; நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார், எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், ஸைதுக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை (அல் இஸாபா)

அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸைத் இப்னு முஹம்மத் (முஹம்மதுவின் மகன் ஸைத்) என்றே ஸைத் குறிப்பிடப்பட்டார்.

வளர்ப்பு பிள்ளைகளை அவர்களின் தந்தையர் பெயராலேயே குறிப்பிடுங்கள் (33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் (4782) காணப்படுகிறது.

சொந்த மகன் போலவே ஸைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்திடவே இந்த விபரங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப் அவர்களை – அதாவது தமது மாமி மகளை – ஸைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அபைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத புரட்சியாகும்.

ஜஹ்ஷ் உடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல் நிலைக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஸைனபை தலாக் கூறும் நிலைக்கு ஸைத் (ரலி) அவர்கள் ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகிறது.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

நபிகள் நாயகத்துக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் கூறுகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது.

வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை இருந்திருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஸைனபைத் திருமணம் செய்திருக்க முடியும். அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.

எனவே இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

ஸைத் தம் மனைவி ஸைனபை தலாக் கூற விரும்பியதும், அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனை செய்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலாக் கூற வேண்டாம் என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

இதே வசனத்தில் இறுதிப் பகுதியில் அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்துக் கொண்டீர் மக்களுக்கு அஞ்சினீர் என்று இறைவன் கடிந்துரைக்கிறான்.

தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட விஷயம் என்ன என்பது இவ்வசனத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற சில அறிவிலிகள் எவ்வித ஆதாரமும் இன்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

ஸைத் வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்க்கக் கூடாத கோலத்தில் ஸைனபைப் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகைக் கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதிற்குள் எண்ணினார்களாம். ஸைத் தலாக் கூற முன் வந்ததும் தலாக் கூற வேண்டாம் என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் அவர் தலாக் கூற வேண்டும்; அதன் பிறகு அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத் தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறானாம். இப்படிப் போகிறது கதை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படியொரு சம்பவம் நடந்ததாக ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் கிடையாது.

ஒரு ஆதாரமும் இன்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி இவர்கள் அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையைப் புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நபியவர்கள் தம் மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டதாகக் கூறப்படுவதன் விளக்கம் என்ன என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.

ஸைத் (ரலி) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது ஸைனப் (ரலி) அவர்களின் வயது 34 அல்லது 35 ஆக இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து நாம் இப்படி முடிவு செய்ய இயலும்.

அது வருமாறு:

ஸைத் (ரலி) அவர்களும், ஸைனப் (ரலி) அவர்களும் ஓர் ஆண்டு அல்லது அதை விட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்று விபரம் கிடைக்கின்றது.

(பார்க்க : இப்னு கதீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது முப்பத்தி ஐந்து

(பார்க்க : அல் இஸாபா)

ஸைனப் (ரலி) அவர்களின் 35 வயதில் இருந்து ஸைதுடன் வாழ்ந்த ஓர் ஆண்டைக் கழித்தால் ஸைதுடன் திருமணம் நடந்த போது ஸைனபின் வயது 34 ஆகத் தான் இருக்க முடியும். ஏனெனில் ஸைத் தலாக் கூறி இத்தா முடிந்ததும் உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபை திருமணம் செய்ததாக அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஸைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்குச் சிரமமானது. சாத்தியக் குறைவானது. ஸைதை மனப்பதற்கு முன் அவர்கள் வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும். அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமல் இருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை.

இந்த அனுமானம் தவறாக இருந்தாலும் ஸைதைத் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 35 என்பது அதை விடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.

நபியவர்கள் தமது 56 வயதில் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது 35 என்றால் 21 வயது வித்தியாசம் வருகிறது. அதனடிப்படையில் ஸைனப் அவர்களுக்கு 15 வயதாக இருக்கும் போது நபியவர்களின் வயது 36 ஆக இருக்கும்.

தன்னுடைய 36 ஆம் வயதில் ஸைனபைத் திருமணம் செய்ய வாய்ப்பு இருந்தும் நபியவர்கள் அப்போது திருமணம் செய்யாமல் இன்னொருவருக்கு வாழ்க்கைப்பட்டு திருமணம் ரத்தாகி இருக்கும் போது தான் திருமணம் செய்வார்களா?

பருவ வயதிலிருந்த ஸைனப் (ரலி) அவர்களை சர்வசாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது.

அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக்கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் அவர்களை சர்வசாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது 53 வது வயது வரை ஸைனபைப் பார்த்து இருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக் கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்து, பேசி, பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸைனபின் அழகில் சொக்கி விடாத நபியவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவருடைய பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பது வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்துக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது.

ஸைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை அவர்கள் மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே?

இன்னும் சொல்வதென்லால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தாவை விட, ஆயிஷாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இவர்களுக்கல்லவா அதிக அக்கரை இருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்கு மட்டும் தான் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம்; அதன் காரணமாக அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கருத முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மணமுடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். அவர் முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விடுகிறார்கள். உடன் பின்வருமாறு இறை வசனம் இறங்கியது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுயவிருப்பம் கொள்ள உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் (33:36) இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித் தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கதீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஸைனப் (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன்வருகின்றார்கள் என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகிறது. நபியவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்கு விருப்பமில்லாத ஒருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஸைனப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க மாட்டார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போதும் அந்தக் கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஸைனபைத் தகாத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டு அவர் மீது ஆசைப்பட்டார்கள் என்றால் அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர் (அவர்களில் யாரும் அறியாவிட்டால் இதை எழுதி வைத்த நூல் ஆசிரியர்களுக்குத் தெரிய முடியாது)

இந்தச் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி தம் மனைவியை தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஸைத் ஆலோசனை கேட்கிறார்கள்.

அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அன்புடனும், அளவு கடந்த பாசத்துடனும் முன்னர் இருந்தது போலவே நடக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்தக் கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மூத்தா எனும் போர் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 61 வது வயதில் நடந்தது. அதாவது ஸைனபை மணந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இந்தப் போரில் ஸைத் அவர்கள் தளபதியாகச் சென்று வீர மரணம் அடைந்தார்கள்.

பார்க்க : புகாரி 1246, 2798, 3063, 3757, 4262

ஸைதுடைய மனைவியின் மீது ஆசைப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் தட்டிப் பறித்து மணந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பு ஸைதுக்குத் தான் இருந்திருக்கும். அதன் பின்னர் அவர் நபிகள் நாயகத்தின் எதிரியாக மாறி இருப்பார்.

ஆனால் அவ்வாறு ஆகாமல் நபிகள் நாயகத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து பல்வேறு போர்க்களங்களில் பங்கு கொண்டு கடைசியாக மூத்தா போரில் உயிர் தியாகமும் செய்தார்.

இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஸைதுக்கும், ஸைனபுக்கும் இடையே ஒத்துப் போகாமல் மனமுறிவு ஏற்பட்டுத் தான் விவாகரத்து நடந்திருக்கிறது. அவர் தனக்குப் பிடிக்காத மனைவியை விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து வாழ்வு கொடுத்தார்கள் என்பதால் தான் இது ஸைதைக் கடுகளவும் பாதிக்கவில்லை. நபிகள் நாயகத்தின் கட்டளையை ஏற்று உயிரைக் கொடுக்கவும் அவர் தயாராகிறார்.

இப்போரில் முதலில் தளபதி ஸைத் கொல்லப்படுவார். அதன் பின்னர் தன் பெரிய தந்தையின் மகன் ஜாஃபர் கொல்லப்படுவார். பின்னர் காலித் பின் வலீத் தலமையேற்று வெற்றிக்கொடி நாட்டுவார் என்று முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்புகிறார்கள். இப்போரில், தான் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து கொண்டே தான் ஸைத் அவர்கள் படை நடத்திச் சென்றார்கள். இதில் இருந்து ஸைனப் விஷயமாக ஸைத்துக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை என்பது தெளிவாகிறது.

அது மட்டுமின்றி இன்னொருவர் மனைவியைப் பார்க்கக் கூடாத கோலத்தில் நபியவர்கள் பார்த்து அவரைத் திருமணம் செய்தார்கள் என்றால் அது அந்தக் காலத்து மக்களுக்குத் தான் தெரிந்திருக்கும். அவர்களை இறைத்தூதர் என்று நம்பிய மக்கள் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு காரணம் கூறி ஒரே ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்பதில் இருந்தும் இது ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை அறியாலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொள்கை ரீதியாகப் பல எதிரிகள் இருந்தனர். இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அதை அவர்கள் விமர்சிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் எதிரிகள் கூட இது போன்ற விமர்சனத்தைச் செய்ததில்லை. இதில் இருந்தும் பிற்காலத்தில் இது புணையப்பட்ட கற்பனை என்பதை அறியலாம்.

இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின் மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்! மனிதர்களுக்கு அஞ்சினீர்! என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுவது எதை? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உண்மையே. அது என்ன என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படி கதை கட்டி விட்டு, விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தீர்மானிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது என்பது நமக்கே தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.

ஸைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஸைனபைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஸைத் (ரலி) திருமணம் செய்திருந்தார். இவ்விருவருக்கும் உஸாமா என்ற மகன் பிறந்தார். ஸைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள்.

அதன் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்தார்கள்.

ஸைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்மு குல்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்மு குஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஸைத்.

அதன் பின் அபூ லஹப் உடைய மகள் துர்ரா என்பவரைத் திருமணம் செய்தார்.

பார்க்க : அல் இஸாபா)

இந்த விபரங்களை இங்கே கூறுவதற்குக் காரணம் ஸைத் (ரலி) அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்ததும் ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஸைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஸைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை. அவ்விருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுவாபமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப் போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சன்டையும், சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போன்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார்.

ஆனாலும் மனைவியை தலாக் விடுவதாக ஸைத் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். தலாக் விடுவதாக ஒருவர் கூறியவுடன் அதை ஆதரிக்கிறாரே என மக்கள் எண்ணுவார்களே என்று அஞ்சுகிறார்கள். இது தான் உண்மையில் நடந்திருக்க முடியும் இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.

உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள் என்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர் மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் அருகதையானவன்.

திருக்குர்ஆன் 33:37

தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதைக் கூறத் துணிவதில்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர் அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயால் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் இப்படி இந்த விஷயத்தில் நடிக்கத் தான் செய்வார்கள். அனுபவப்பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.

இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சராசரி மனிதனுக்கு ஏற்படக் கூடிய இது போன்ற தயக்கம் தான் ஏற்பட்டதே தவிர அடுத்தவர் மனைவியை ஆசைப்படக் கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்ப்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும் இந்தப் பொய்ச் செய்தியை முற்றாக நிராகரித்து விடுகின்றது.

நபியவர்கள் விவாக ரத்துச் செய்யாதே என்று ஆலோசனை கூறிய பிறகும் ஸைத் தம் மனைவியை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்தி விட்டார்.

இந்த நிலையில் ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் காரணத்தையும் அவனே கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. அறவே சந்ததி அற்றவர்களும், ஆண் சந்ததி அற்றவர்களும், உதவாக்கரை ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக – சுவீகாரப் புத்திரனாக – எடுத்துக் கொள்வர். வளர்ப்பு மகன் என்று பிரகடனம் செய்யப்பட்டவர் பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராகக் கருதப்படுவார்.

இப்படி வளர்த்தவர் இறந்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்குக் கிடைப்பதைப் போன்ற அதே சொத்துரிமை கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக தன்னை வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது. தந்தை, மகன் எனும் உறவு அவ்விருவருக்கும் இடையே உண்மையிலேயே ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின் அல்லது அவன் இறந்த பின் அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்வது கூடாத ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.

ஏனெனில் அப்பெண் உண்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பினர். இதுபோல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவராகி விட்டனர் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள்தனமான இந்தச் சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். தெளிவான தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையிலும் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது.

இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக் கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்த்து எறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஸைதுடைய மனைவியை, ஸைது விவாகரத்து செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனமுடித்து வைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

இந்தப் போலித்தனமான உறவுகள் தகர்க்கப்பட வேண்டியவை தாம் என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.

முதல் காரணம்

தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறைநம்பிக்கை அற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையால் தீர்மானிக்கப்படுபவை.

இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இ;யலாது.

இவர் தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும்; எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது.

அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக் கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக் கூடியதாகும்).

ஆனால் தத்தெடுக்கும் போலித்தனமான உறவுமுறைகள் செயற்கையை இயற்கையைப் போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

இரண்டாவது காரணம்

யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினைமுட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்பந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்பந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், பெற்ற பிள்ளையை உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதை விட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளர வேண்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும் அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாக இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி யாராவது செல்வந்தர்கள் தத்து எடுக்க மாட்டார்களா? என்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடம் மேலோங்கி விடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.

மூன்றாவது காரணம்

எவ்வளவு தான் பாசத்தைப் பொழிந்து ஒருவனைத் தத்து எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல் வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசத்தைப் பொழிய முடியாது. வசதியான இடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அவரைத் தந்தையாக ஏற்கத் துணிந்தவனிடம் இதயப்பூர்வமான நேசத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?

வளர்ப்புத் தந்தைக்குப் பின் அவரது வாரிசாகப் போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன் அவர் சீக்கிரமாக சாக மாட்டாரோ என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாக மாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூருக்கு அனுப்பவும் தயங்க மாட்டான். இரத்த சம்பந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமாக நேசம் இல்லாத காரணத்தினாலும் சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்வைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவிகாரப் புத்திரனிடம் பெரும்பாலும் எதிர்பார்க்க முடியும்.

நான்காவது காரணம்

ஒருவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனுடைய பெற்ற மகனே அடைவான்.

பெற்ற மகனுக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும் போது அவனுடைய தந்தையின் அண்ணன், தம்பிகளோ, அக்கா, தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கெல்லாம் கிடைக்காமல் இவனுக்குக் கிடைத்து விட்டதே என்று எண்ண மாட்டார்கள். ஏனெனில் மகன் என்ற உறவு மற்ற உறவுகளை விட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் யாருக்கோ பிறந்தவன் திடீரென நுழைந்து மகனென்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடைந்து, வசதிகளை அனுபவிக்கும் போது, இரத்த சம்பந்தம் உடைய அவனுடைய அண்ணன், தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்தப் போலி மகனை விட உண்மையான சகோதர, சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?

ஐந்தாவது காரணம்

மேற்கூறிய அதே காரணத்தினால் எப்போது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கிறானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகைக்கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ள இந்த சுவீகாரம் முக்கிய காரணமாக அமைகிறது. ஒரு போலித்தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.

ஆறாவது காரணம்

தன் தந்தை அல்லாதவர்களை தந்தை என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை இப்றாஹீமுக்குப் பிறந்தவன் என்று சொல்லிப் பாருங்கள். அதன் பின் அதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவது தான் மனிதனின் இயல்பு.

எவனோ ஒருவனை தந்தை என்று அதுவும் உண்மையான தந்தை போன்று கருதுவதை விட மானம் கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.

இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்தப் போலித்தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாக சொல்லிக் காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.

திருக்குர்ஆன் 33:4

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:5

உங்களில் தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 58:2

உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23

இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

அந்த உறவுகள் தகர்க்கப்படத் தான் வேண்டும்; ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால், அல்லது அதற்கு அனுமதியுண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது தவறு என்பது தெளிவாகும்.

திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின் பால்பட்டது. அனுமதிக்கத் தான் முடியும். மணம் செய்ய அனுமதியுண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வர மாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை.

காலம் காலமாக மகனுடைய மனைவி என்று நம்பி வந்திருக்கும் போது சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்களின் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தை தலைமுறை, தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.

உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பாரம்பர்யப் பழக்கத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதிய இறைவன் இதற்கு அவர்களையே தேர்வு செய்தான்.

இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.

இறைத்தூதர்கள் இறைவனிடம் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும், அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது.(33:39) எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அஞ்சுவதற்குரிய ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.

இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆறு திருமணங்களையும், அவற்றுக்கு காமவெறி காரணம் அல்ல என்பதையும் கண்டோம்.

7 உம்மு ஸலமா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும், இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர்.

திரும்பவும் மதீனாவுக்கு நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து சென்ற போது இந்தத் தம்பதியினரும் அவர்களில் இருந்தனர். அபூ ஸலமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார். அதன் பின் ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிரிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று மதீனா திரும்பினார். அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்.

இவர் மரணிக்கும் போது இவரது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வயது என்ற தெளிவான குறிப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை.

ஏனெனில் நபியவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய போது நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; என்னால் இனிமேல் குழந்தை பெறவும் இயலாது என்று பதிலளித்தார்கள்.

பார்க்க : முஸ்னத் அஹ்மத் 15751

உம்மு ஸலமா அவர்களே தாம் வயது முதிர்ந்தவராக இருப்பதையும், குழந்தை பெறும் பருவத்தைக் கடந்து விட்டதையும், தம் வயதுப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை என்பதையும் காரணம் காட்டி திருமணத்திற்குத் தயக்கம் தெரிவிக்கிறார்கள். இல்லற வாழ்வுக்குரிய தகுதியை இழந்து விட்ட இவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்கு காமமே காரணம் என்றிருந்தால் கன்னியர் பலரும் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்த சமயத்தில், நபியவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்க பலரும் தயாராக இருந்த நிலையில் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாத முதிய வயதுப் பெண்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா? நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காமஉணர்வு மேலோங்கியவர் தேர்வு செய்ய முடியுமா?

இந்தத் திருமணத்துக்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரின் வயதை கவனத்தில் கொள்வதுடன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளமை வேகத்துடன் இருக்கும் காலங்களில் எல்லாம் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்ட நபியவர்கள் தமது ஐம்பத்தியாறு வயதுக்குப் பிறகு தான் பல திருமணங்களைச் செய்யலானார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் திருமணம் நடந்த போது அவர்களின் வயது ஐம்பத்தி ஏழாகும். இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை அன்னியப் பெண்களை ஏறெடுத்தும் பாராமல் முதிய விதவையுடன் மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நபியவர்களுக்கு ஐம்பத்தி ஏழாவது வயதில் காமஉணர்வு மேலோங்கியது என்று சொன்னால் அறிவுடைய எவறாவது ஏற்க இயலுமா?

அப்படியே ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொண்டாலும் நான்கு குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இல்வாழ்வில் நாட்டம் இல்லை என்று தாமே ஒப்புக் கொண்டுவிட்ட முதிய விதவையைத் தேர்ந்தெடுப்பார்களா? குழந்தை பெருவதற்குரிய வயதைக் கடந்து அதாவது மாதவிடாய் நின்று விட்ட ஒரு பெண்ணைத் தான் காமஉணர்வு காரணமாக திருமணம் செய்பவர் தேர்ந்தெடுப்பாரா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எட்டாவது திருமணத்தைக் காண்போம்.

8 ஜுவைரியா (ரலி) அவர்கள்

பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவரின் மனைவியும் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். பிடிக்கப்பட்ட கைதிகள் அன்றைய போர் தர்மத்தின்படி போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். ஜுவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜுவைரியா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பனுல் முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார். இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தின் போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஒன்பதாகும். கைதிகளாகப் பிடிபட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் அழகில் மயங்கி காமஉணர்வின் காரணமாக அவரை அனுபவிக்க விரும்பியிருந்தால் தம் பங்குக்கு ஜுவைரியாவை எடுத்துக் கொண்டிருக்கலாம். நபித்தோழர்களில் எவரும் அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அப்பெண்னை ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள். இதன் மூலம் காம உணர்வோ, உணர்ச்சியோ, கவர்ச்சியோ இத்திருமணத்திற்குக் காரணம் அல்ல என்பதை அறியலாம்.

தான் இந்தக் கூட்டத்தின் தலைவி என்று கூறிய பிறகு தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிறகு – தான் அவரைத் திருமணம் செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெண்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அணைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்திருமணத்தின் போது ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வயது என்னவென்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும் அவர்களும் முதுமையான வயதுடையவர்களாகத் தான் இருந்திருக்கக் கூடும் என்று அனுமானம் செய்ய இடமுண்டு.

ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு அப்பெண் கிடைத்ததும் இளமங்கையாகவோ, அல்லது சுண்டி இழுக்கும் பேரழகு கொண்டவராகவோ இருந்திருந்தால் இளைஞரான ஸாபித் இப்னு கைஸ் அவர்கள் ஏழு ஊக்கியா தந்துவிட்டு விடுதலையாகலாம் எனக் கூறியிருக்க மாட்டார். அவர் தாமே அனுபவிக்க எண்ணியிருப்பார். அடிமைகளை அனுபவித்துக் கொள்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் எந்தத் தடையும் இருக்கவில்லை. அல்லது அவரே கூட அப்பெண்னைத் திருமணம் செய்திருக்கலாம்.

தமக்குக் கிடைத்த பெண்ணை அற்பமான ஏழு ஊக்கியா தந்து விட்டு விடுதலையாகலாம் என்று அவர் கூறியதிலிருந்து ஜுவைரிய்யா அவர்கள் இளமங்கையாகவோ, பேரழகு படைத்தவராகவோ இருந்திருக்க முடியாது என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 59 வயதுடைய முதியவராகி விட்டார்கள். அந்தப் பெண்னும் அதே நிலையில் இருக்கின்றார். இவ்விருவருக்கும் நடந்த இத்திருமணத்திற்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூற முடியுமா?

அந்தக் கூட்டத்தின் தலைவியை மணமுடித்ததன் மூலம் அக்கூட்டத்தினர் முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே இத்திருமணத்திற்குரிய தனிப்பட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

(ஏன் பல திருமணங்கள் செய்தார்கள் என்று இறுதியில் நாம் கூறக் கூடிய பொதுவான காரணங்களும் இத்திருமணத்திற்குப் பொருந்தும்) எனவே இத்திருமணத்திற்கும் காமஉணர்வைக் காரணமாக கூற இடமில்லை.

9 உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும்.

உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ளா என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் எதிரிகளின் தலைவராகத் திகழ்ந்தவருமான அபூ சுப்யான் அவர்களின் மகளே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். முஆவியா (ரலி) அவர்களின் சகோதரியுமாவார்.

இவரது தந்தை இஸ்லாத்தை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாத்தைத் தழுவினார்.

தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா)வுக்கு தம் கணவருடன் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) செய்தார்கள். அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிறித்தவராக மதம் மாறினார். கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக நின்றார்கள்.

சரித்திரத்தில் இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள பெண்களை அரிதாகவே காண முடியும். தந்தையை விடவும், கணவரை விடவும் கொண்ட கொள்கையே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிறந்தார்கள். (அல் இஸாபா) இவர்களை நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் தமது 59ஆம் வயதில் திருமணம் செய்த போது இவர்களுக்கு 37 வயதாக இருந்தது.

கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

அபீஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி (ரலி) அவர்களுக்கு அவரது நாட்டில் நிர்க்கதியாக இருந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்களை தாம் திருமணம் செய்து கொள்வதாக தூதுச் செய்தி அனுப்பினார்கள்.

இதன் பிறகு நஜ்ஜாஷி (ரலி) அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை மிகவும் மரியாதை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் நானூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) மஹராகக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பிறகே உம்மு ஹபீபா (ரலி)யைத் திருமணம் செய்தார்கள். இது சுருக்கமான விபரம்.

இந்தத் திருமணத்திற்கும் நிச்சயமாக காம உணர்வு காரணமாக இருக்க முடியாது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். ஆரம்பக் காலத்திலேயே தம் கணவருடன் அபீஸீனியாவுக்கு தியாகப் பயணம் மேற்கொண்டவர்கள்.

சுமார் 15 ஆண்டுகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அபீஸீனியாவிலேயே தங்கிவிட்டார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பார்த்ததைத் தவிர, இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததே இல்லை.

இந்தப் பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில் இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் – கணவரையும் பிரிந்து விட்டவர், ஒரு குழந்தையையும் பெற்று விட்டவர் எத்தகைய அமைப்பில் இருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

அவர்களின் நிறமும், அவர்களின் பருமனும், அழகும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கும் என்பதையும் தீர்மானிக்க இயலாது. காம உணர்வு தான் இதற்குக் காரணம் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்த்து அவர்களின் அழகில் மயங்கியிருக்க வேண்டும். ஒரு பெண்ணை அறவே பார்க்காது திருமணம் செய்தால் அதற்கு காமஉணர்வைக் காரணமாகச் சொல்ல முடியுமா?

20 வயது உம்மு ஹபீபாவைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வயதில் வேண்டுமானால் அவர்கள் அழகாக இருந்திருக்கலாம். அழகானவர்களைக் கூட அகோரமாக மாற்றிவிடும் அபீஸீனிய நாட்டில் 15 ஆண்டுகளைக் கழித்த ஒரு பெண், ஒரு குழந்தையையும் பெற்று, கணவனால் கைவிடப்பட்டு கவலைக்கு ஆளான ஒரு பெண் – வெளியில் சென்று தானே உழைத்து உண்ணக் கூடிய ஒரு பெண் 20 வயதில் இருந்த அதே அழகுடன் இப்போதும் இருப்பார்கள் என்று கூறமுடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்க்காமல் அவர்களுடைய தோற்றம் இப்போது எப்படி இருக்கும் என்பதைக் கூட அறியாமல் உம்மு ஹபிபாவின் நிர்க்கதியான நிலையைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் தான் அவரை மணந்து கொள்ளப் போவதாக நஜ்ஜாஷிக்கு தூது அனுப்புகிறார்கள்.

இந்தத் திருமணத்தைப் பற்றி முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவை நேரில் சந்திக்கவில்லை. அவர்களது நிராதரவான நிலையை அறிந்தவுடனேயே அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

நியாய உணர்வு படைத்தவர்களே! இந்தத் திருமணத்திற்கு காமஉணர்வு தான் காரணம் என்று சொல்லப்படுவதை இதன் பிறகும் உங்கள் உள்ளம் ஏற்கிறதா?

25வயதில் இல்லாத காமஉணர்வு மரணத்தை நெருங்கி விட்ட 59வது வயதில் தானா திடீரென்று ஏற்பட்டு விடும்?

அதுவும் எப்படி இருப்பார் என்று தெரியாத ஒரு பெண்ணின் மீதா காம உணர்வு ஏற்படும்? ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட – உடலுறவுக்குரிய தகுதியை இழப்பதற்குரிய கட்டத்தை நெருங்கி விட்ட – அழகையும், இளமையையும் பிரயாணங்களிலும் கவலையிலும் முற்றுமாக இழந்து விட்ட ஒரு பெண் மீது தானா காமஉணர்வு ஏற்படும்? ஒருக்காலும் ஏற்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்களுக்கு காம உணர்வு எப்படி காரணமாக இருக்கவில்லையோ அது போல் இந்தத் திருமணத்திற்கும் அது காரணமில்லை.

10 ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி) அவர்கள்

இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாகக் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள்.

இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்சம் என்பவரின் மனைவியாக இருந்தார்.

(இவருடைய மற்றொரு மனைவி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விஷமூட்டப்பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)

இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மனந்து கொண்டார்கள். ஸஃபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர்.

மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள்.

இதை அறிந்த ஸஃபிய்யாவும், அவரது தந்தையும், கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.

கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். யூதத் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார். பலர் சிறைபிடிக்கப்பட்ட போது ஸஃபிய்யாவும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

அன்றைய வழக்கப்படி கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸஃபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள்.

இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.

இதை ஊன்றிக் கவனிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காமவெறியைக் காரணமாகக் கூற முன்வர மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.

முதலாவது அம்சம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மனைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணத்திற்கு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?

இரண்டாவது அம்சம் ஸஃபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத்தானா காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?

மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபர் என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கன்னியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.

பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கன்னியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.

இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கன்னியரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காமஉணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கடைசியாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸஃபிய்யாவும், மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் அவர்களில் ஸஃபிய்யாவின் அழகில் மயங்கி மணந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பற்றியோ மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.

இதனால் தான் திஹ்யா என்பவர் ஸஃபிய்யாவைத் தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.

ஸஃபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.

யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.

யூதர்களின் வெறுப்புணர்வைத் தனித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.

இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும்.

ஏனைய திருணங்களுக்கு எப்படி காமஉணர்வு தான் காரணம் என்று கூற முடியாதோ அது போல் இத்திருமணத்திற்கும் அதைக் காரணமாகக் கூற முடியாது.

11 மைமூனா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசியாக மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்.

பர்ரா எனும் இயற்பெயருடைய மைமூனா (ரலி) அவர்கள் ஹாரிஸ் என்பவரின் மகளாவார்.

இவர்கள் உமர் பின் அம்ர் என்பாரை முதலில் மணந்தார்கள்.

அவருக்குப் பின் அபூ ரஹ்ம் பின் அப்துல் உஸ்ஸா என்பாரை மணந்தார்கள்.

இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு அவ்விருவரும் மரணித்த பின் மைமூனா (ரலி) அவர்கள் விதவையாக இருந்தார்கள்.

இவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறுபதாவது வயதின் கடைசியில் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்தின் போது மைமூனா அவர்களின் வயது எவ்வளவு என்பதற்கான தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் ஏற்கனவே இரண்டு கணவர்களை மணந்து பின்னர் விதவையாக இருந்தார்கள் என்பது அவர்கள் நடுத்தர வயதைக் கடந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் உம்முல் பழ்ல் என்ற பெண்னை மணந்திருந்தார்கள். உம்முல் பழ்ல் உடைய சகோதரி தான் மைமூனா. இதன் காரணமாக அப்பாஸ் அவர்களின் பராமாரிப்பில் மைமூனா (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் தாம் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர்.

மேலும் மைமூனா (ரலி) அவர்கள் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தம்மை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதும் தமது பெரிய தந்தையின் பொறுப்பில் அவர் இருந்ததும் இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாகும். எனவே இத்திருமணத்திற்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

இவை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்கள். இத்திருமணங்களில் எவையுமோ காமவெறியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை மட்டும் அவ்வப்போது விளங்கியுள்ளோம்.

உண்மையான காரணங்கள் என்ன?

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவியரால் மட்டும் தான் அறிய முடியும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே கருத முடியும்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள்.

பொதுவாக காமவெறி கொண்டவர்களை மதிப்புக்கு உரியவராக மக்கள் கருத மாட்டார்கள். ஆன்மிகத் தலைவரிடம் காமவெறி இருப்பதை அறிந்தால் அவரை நஞ்சென வெறுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களைச் செய்வதை தமது கண்களால் பார்த்த மக்கள் மனிதர்களின் பொதுவான இந்த இயல்பின் படி நபிகள் நாயகத்தை எடை போடவில்லை.

அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தக் காரணத்தைக் கூறி மதம் மாறியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் திருமணம் செய்த கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றார்கள். ஏறக்குறைய ஒட்டு மொத்த அரபுலகும் அவர்களை ஏற்றுக் கொண்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி பிடித்தவர் என்றால் அதைக் கண்ணால் கண்டவர்கள் இஸ்லாத்தை வெறுத்து ஒதுக்கி இருப்பார்களே? ஏன் அப்படி நடக்கவில்லை? இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

வரலாறுகளைப் படிப்பவர்கள் ஒன்பது மனைவிகள் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். அதன் முழு விபரத்தைப் பார்க்காமல் முடிவு செய்து விடுகிறார்கள்.

அந்த வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பார்த்தார்கள்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலையையும் பார்த்தார்கள்.

இதுபோன்ற வயதுடைய பெண்களை நாமே மணக்க மாட்டோமே அப்படியானால் இதற்குக் காமவெறி காரணமாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள்.

அதனால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தால் காமவெறி காரணம் அல்ல என்பதை விளங்கி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வெளிஉலகில் நல்லவராகக் காட்சி தரும் சிலர் உண்மையில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியர் மட்டுமே அறிவார்கள்.

தம் கணவன் நல்லவனா? அல்லது பகல் வேஷக்காரனா? ஒவ்வொரு பெண்ணும் அறிவாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மனைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மனைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்குப் போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதாரமண்ம் மிகச் சிறந்த அளவு கோலாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மனைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நபிகள் நாயகம் அவர்கள் நள்ளிரவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல்படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த நபியின் உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக்காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியிடம் கூட பொறுமையைக் கடைப்பிடித்து பண்பாடுகளின் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான்.

அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆனாகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும், நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

மேலும் நபியின் மனைவியர் செல்வச் செழிப்போடு இருக்கவில்லை. அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.

எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்காரர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவனிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்கான காரணமாகும்.

எப்படியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமைமிக்க கவிஞன் என்றார்கள், கைதேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை.

மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.

இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.

சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காமவெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.

அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.

காமவெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டினியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப்படும்.

தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காமஉணர்வு இருக்கப் போகின்றது?

பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காம வெறி இருக்க முடியும்?

இயல்பிலேயே காமவெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.