வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா?

கேள்வி:

ஒரு இஸ்லாமியப் பெண் வரதட்சணை வாங்கும் ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படிச் செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன?

சோஃபியா பேகம்.

பதில்:

வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும்.

வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்வதற்குத் தான் பெண்களும், பெண்ணைப் பெற்றவர்களும் முயல வேண்டும். வரதட்சணை இல்லாத மணமகனைத் தான் தேட வேண்டும்.

இவ்வாறு தேடிப்பார்த்தும் வரதட்சணை இல்லாமல் மணமகன் கிடைப்பதாகத் தெரியவில்லை என்று தெரியும் போது, ஆண்டுகள் பல கடந்தாலும் வரதட்சணை இல்லாமல் வாழ்க்கைத் துணை அமையாது என்ற நிலை ஏற்படும் போது என்ன செய்வது?

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தக்க சமயத்தில் வாழ்க்கைத் துணை அமையாமல் போனால் அதன் காரணமாக விபச்சாரத்தில் விழுந்து விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி விழுந்து விடாமல் தன்னால் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் என்று ஒரு பெண் நம்பினால் அவள் அவ்வாறு இருந்து கொள்ளலாம்.

காலம் கெட்டுப்போயுள்ளதால் விபச்சாரத்தைத் தூண்டக் கூடிய காட்சிகள் மலிந்துள்ள போது, ஒரு பெண்ணால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்படலாம். திருமணம் செய்யாவிட்டால் வழி தவற நேரும் என்று அவள் அஞ்சினால் அப்போது விபச்சாரத்தில் சென்று விடக் கூடாது என்பதற்காக வரதட்சணை கேட்பவனை மணந்து கொண்டால் கருணையுள்ள அல்லாஹ் அதை மன்னிப்பவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

திருக்குர்ஆன் 16:106

இறை நிராகரிப்பு அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் அதற்கே விதி விலக்கு வழங்குகின்றான்.

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதை நெருக்கடி, நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூட மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை உண்ணலாம் என்று மார்க்கம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக இது போன்ற மனமகனை பெண்கள் மணக்கக் கூடாது என்றாலும் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் அப்போது வரதட்சணை கேட்பவனை மண்ந்து கொண்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

ஆனால் வரதட்சணை கேட்காத மணமகணைத் தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தும் அதற்கேற்ற மணமகன் கிடைக்காத போது தான் அது நிர்பந்தமாகும். அவ்வாறு இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே எவனாக இருந்தாலும் சரி என்று தலையை நீட்டினால் அவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளானவர்களாக மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.