முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்

முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்

ஆஷூரா சிறப்பிதழ்ஏகத்துவம் 2005 பிப்ரவரி

எம். ஷம்சுல்லுஹா

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது.

கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்:

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.

மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.

கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும்,அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.

துக்க நாளாகி விட்ட ஆஷூரா :

ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது.

நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, “அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1387

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள்.

(நூல்: புகாரி 1387)

உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும்.

ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்?இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது.

ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல் :

இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது.

இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள்.

இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி,நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ,சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 313

ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு,இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை.

ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர்

ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.

பஞ்சா எடுத்தல் :

முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான்.

பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி,திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும்.

தெருமுனையில் திருக்கோயில் :

பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர்.

ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை.

பஞ்சாவின் உடல் கட்டமைப்பு :

பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.

அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன்,ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதனால் தான் ஒரு கவிஞன், “எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ),பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்” என்று பாடியுள்ளான்.

பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.

ஏழாம் பஞ்சா :

பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும்.

இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்!

இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்.

கர்பலாவின் லைவ் காட்சி :

பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்!

குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர்.

இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன்,ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது.

பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள்.

பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள்.

ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள்.

மீன் சாப்பிடத் தடை :

இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும்.

தாம்பத்தியத்திற்குத் தடை :

அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது,முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

பத்தாம் பஞ்சா :

முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது.

பத்தாம் நாள் கிளைமாக்ஸ்!

நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் “கவுண்ட் டவுன்’ நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும்.

பேண்டுக்கு மேல் ஜட்டி :

பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.

புலி வேஷம் போடுதல் :

இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு,கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர்.

ஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர்.

பக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர்.

உப்பு மிளகு போடுதல் :

புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!

குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம் :

ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும்.

தீமிதியும், தீக்குளிப்பும் :

தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.

ஹஸன் (ரலி) அருந்திய நஞ்சு பானம் :

ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும்.

காதலர் தினம் :

இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும்,கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர்.

மாரடித்தல் :

ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்..

விநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும்.

வெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும்.

இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள்.

இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன.

இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம்.

  1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
  2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல்
  3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்
  4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத்

நபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.

குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை!

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா?அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா?உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194,195

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

குழந்தை பாக்கியம் :

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும்,பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.

அல்குர்ஆன் 42:49,50

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை.

குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்.

நேர்ச்சை ஒரு வணக்கமே!

அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும்.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்!

அல்குர்ஆன் 22:29

இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது.

அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான்.

ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றதுஎன்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1865

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

அல்குர்ஆன் 4:116

இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும்.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல் :

பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்.

நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது.

அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம்,வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும்.

ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.

பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள்.

இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்?

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

அல்குர்ஆன் 42:21

இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?

அல்குர்ஆன் 66:1

என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:116

நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 6:21

அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 6:144

மாற்று மதக் கலாச்சாரம் :

பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல்,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும்.

ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் 7: 27

லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு “தாத்து அன்வாத்துஎன்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்.! .இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி (ரலீ)

நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892

இத்தகைய மாற்றுக் கலாச்சாரத்தில் உள்ளது தான் புலி வேஷம் போடுதல். அல்லாஹ் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்துள்ளான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

அல்குர்ஆன் 95:4

ஆனால் இந்த அற்புதப் படைப்போ புலி வேஷம் போட்டுக் கொண்டு மிருக நிலைக்கு மாறி விடுகின்றான்.

அல்லாஹ் படைத்த தோற்றத்தை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப் பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்று வார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்) அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் 4:119

புதுப் புது வணக்கங்கள் :

பஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

இதில் வேடிக்கை என்னவென்றால் ஹஸன், ஹுசைன் பெயரில் இந்தப் பத்து நாட்களும் ஓதும் மவ்லிதில், ஒளி வீசும் ஹுசைனின் கைகளை வரைந்தவர்களின் கைகள் நாசமாகட்டும் என்ற கவிதை வரிகளையும் ஒரு பக்கம் ஓதிக் கொள்வது தான். இந்த ஹஸன், ஹுசைன் மவ்லிதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கருத்துக்களைத் தாங்கியதாகும். இதுவும் ஒரு பித்அத் ஆகும்.

பக்கீர்கள் ஒரு பார்வை! :

ஃபக்கீர் என்றால் ஏழை! செல்வந்தர்களைத் தவிர மற்றவர்கள் ஏழை தான். ஆனால் இவர்களோ யாசகத்தைத் தங்கள் குலத் தொழிலாக்கிக் கொண்டு, தங்களைத் தனி ஜாதியாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இஸ்லாத்தில் யாசகம் என்பது தடுக்கப்பட்டது மட்டுமன்றி, சபிக்கப்பட்டதும் கூட! இதை இவர்கள் குலத் தொழிலாகக் காட்டுவதுடன் நின்றால் பரவாயில்லை. இவர்கள் யாசகத்திற்கு வரும் போது, கையில் ஒரு கொட்டு! கழுத்தில் உத்திராச்சக் கொட்டை! தலையில் பச்சைத் தலைப்பாகை! காதில் சுருமா கம்பி! குறிப்பாக முஹர்ரம் பத்து நாட்களில் கையில் மயில் தோகை!

இப்படி ஒரு கோலத்தில் வந்து தங்களை ஒரு தெய்வீகப் பிறவியாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவர்களிடம் யாசகம் கொடுப்பது மட்டுமின்றி ஈமானையும் சேர்த்தே பறி கொடுத்து விடுகின்றார்கள். இதல்லாமல் கப்ருகள் தோண்டுவதையும் இந்தப் பக்கீர்கள் தங்கள் குலத் தொழிலாகப் பாவித்து வருகின்றார்கள்.

இவர்கள் தான் பஞ்சா எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக மக்களை நரகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் மது, கஞ்சா அருந்துவது இவர்களுக்கு சகஜமான ஒன்று!

ஆலிம்களின் பங்கு :

ஆலிம்கள் எனப்படுவோர் இந்தப் பஞ்சா எனும் வழிகேட்டைப் பற்றி ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு இவர்கள் தயாரில்லை. அது போன்ற கருத்துக்களை இவர்கள் முன் வைப்பதுமில்லை.

முஹர்ரம் மாதத்தில் ஜும்ஆ மேடைகளில் பஞ்சா எனும் வழிகேட்டைக் கண்டித்துப் பேசாமல், மூஸா (அலை) அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறாமல், கர்பலாவின் கதைகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அது பஞ்சாவுக்கு உரமாகி விடுகின்றது.

தவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை. இவ்வாறு இவர்கள் முயற்சி எடுக்காமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கின்றது.

இந்தப் பஞ்சா என்பது ஷியாக்களின் நடைமுறை என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் சொல்லிக் கொண்டாலும் இவர்களிடம் குடி கொண்டிருப்பதும் ஷியாக் கொள்கைதான். இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும். அந்தக் கொள்கையில் இந்தப் பக்கீர்களும், ஆலிம் படைகளும் ஒன்றுபட்டே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்களால் ஒரு போதும் பஞ்சாவை ஒழிக்க முடியாது. அதனால் தான் அது இவ்வளவு நாளும் ஒழியாமல், ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நிச்சயமாக இந்தப் பஞ்சாக்கள் ஒழியப் போவது இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்தின் மூலம் தான். இறையருளால் அது நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும் :

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.

(அல்குர்ஆன் 9:36)

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

இப்புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பை நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறாôர்கள்:

நபி (ஸல்) அவர்களிடம் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறந்த தொழுகை எது? ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறப்பிற்குரியது இரவின் நடுப் பகுதியில் (எழுந்து) தொழுகின்ற தொழுகையாகும். ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பிற்குரிய நோன்பு அல்லாஹ் வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1983

ஆஷூரா நோன்பு :

அல்லாஹ்வுடைய மாதமாகிய புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பு தான் முஹர்ரம் பத்தாவது நாள் நோற்கின்ற ஆஷூரா நோன்பாகும். ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறாôர்கள்:

அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1901

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்? :

நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக, கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டி ருப்போம்என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3)என்ற திரு வசனம் தான் அது)

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)என்றார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: புகாரி (45)

யூதர்கள் பெருநாளாக கொண்டாடி யிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டி யிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 2005, 2006

கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெரு நாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 1913

ஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய இஸ்லாமியர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சார மாகவே மாறி விட்டது.

முஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத் தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள் :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல்: புகாரி 2006

நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.

இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1977

அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.

யூதர்களுக்கு மாறு செய்வோம் :

ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்,ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1916, 1917

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?

சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: அஹ்மத் 2047, பைஹகீ

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.

குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல் :

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.

ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் துôதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

நூல்: முஸ்லிம் 1919

சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

ஆஷூரா நாள்

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் “நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397

இந்தச் சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?

பனீ இஸ்ரவேல் சமுதாயத் தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்பவனிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச் சமுதாயத்தை மீட்ட வரலாறு தான் அது.

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர்.

இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் மூஸா (அலை) அவர்கள். ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து,அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு மூஸா நபிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி :

மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்கு கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.

(அல்குர்ஆன் 28:3,4)

மூஸா நபியின் பிறப்பு :

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். மூஸா (அலை) அவர்கள் பிறந்த கால கட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அல்லாஹ்வின் அற்புதம்! எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன் பிற்காலத்தில் எதிரியாக வந்து, அவனை அழிக்கப் போகும் மூஸா (அலை) அவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்.

மூஸா நபியவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவனைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள்.

அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது. இந்த வரலாற்றை அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன் :

அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்” (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று, “இக்குழந்தையைப் பொறுப் பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.

(அல்குர்ஆன் 20:38-40)

இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து,அவரைத் தூதராக ஆக்குவோம்என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.

எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.

மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்கா விட்டால் அவர் (உண்மையை) வெளிப் படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.

நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். “உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்என்று அவள் கூறினாள்.

அவரது தாயார் கவலைப் படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 28:7-13)

அறியாமல் செய்த தவறு :

அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும்,கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. “இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி” என்றார்.

என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்என்றார்.

அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். “நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்என்று அவனிடம் மூஸா கூறினார்.

பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது “மூஸாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லைஎன்று அவன் கூறினான்.

அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து “மூஸாவே! பிரமுகர்கள் உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்என்றார்.

பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். “என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!என்றார்.

(அல்குர்ஆன் 28:14-21)

மணம் முடித்தல் :

அவர் மத்யன் நகருக்கு வந்த போது “என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டக்கூடும்என்றார்.

மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு “உங்கள் விஷயம் என்ன?” என்று கேட்டார். “மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்என்று அவர்கள் கூறினர்.

அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, “என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்என்றார்.

அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, “நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். “நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்என்று அவர் கூறினார்.

என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்என்று அவர் கூறினார்.

இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன் 28:22-28)

நபித்துவம் வழங்கப்படுதல் :

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். “இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.

அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து “மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்என்று அழைக்கப்பட்டார்.

(அல்குர்ஆன் 28:29-30)

இரு பெரும் அற்புதங்கள் :

உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். “மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.

உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.

என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்என்று அவர் கூறினார்.

என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

(அல்குர்ஆன் 28:31-34)

துணைத் தூதராக்கப்பட்ட ஹாரூன் (அலை)

உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்று களுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 28:35)

நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்என்று இருவரும் கூறினர்.

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்என்று அவன் கூறினான்.

இருவரும் அவனிடம் சென்று நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று கூறுங்கள்!

(அல்குர்ஆன் 20:42-48)

அநியாயக்காரனிடம் அழைப்புப்பணி :

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

இவற்றை வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 17:101-102)

மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?” என்று அவன் கேட்டான்.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்என்று அவர் கூறினார்.

முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான்.

அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 20:49-52)

ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக் குரல் :

ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்என்று மூஸா கூறினார்.

அல்லாஹ்வின் மீது உண்மை யைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).

நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!என்று அவன் கூறினான்.

அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.

அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 7:104-110)

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் :

இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். “நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவன் “ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்என்று கூறினான்.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று கேட்டனர்.

நீங்களே போடுங்கள்!என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப் படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

உமது கைத்தடியைப் போடுவீராக!என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.

(அல்குர்ஆன் 7:111-119)

இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள் :

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.

அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்என்றும் கூறினர்.

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்” (என்றும் கூறினான்)

(அல்குர்ஆன் 7:120-124)

ஈமானிய உறுதி :

நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்என்று அவர்கள் கூறினர்.

எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்” (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) “எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!என்றனர்.

இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்ப தற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். “அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண்(மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்என்றும் கூறினார்.

(அல்குர்ஆன் 7:125-129)

அல்லாஹ் வழங்கிய அடுக்கடுக்கான சோதனைகள் :

படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.

எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும்,நாம் உம்மை நம்பப் போவதில்லைஎன்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி,பேன், தவளைகள்,இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர் களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

(அல்குர்ஆன் 7:130-135)

மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும் :

ஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன்.

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!என்று மூஸா கூறினார்.

அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!என்று அவர்கள் கூறினர்.

உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (என்றும் கூறினர்)

இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.

எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்என்று மூஸா கூறினார்.

உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் 10:83-89)

ஃபிர்அவ்னின் ஆணவம் :

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான்,காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 40:23-24)

தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்என்று மூஸா கூறினார்.

பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லைஎன்று ஃபிர்அவ்ன் கூறினான்.

(அல்குர்ஆன் 28:37-38)

நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.

(அல்குர்ஆன் 79:24)

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்த போது “இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்!எனக் கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்

மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

விசாரிக்கப்படும் நாளை நம்பாத ஒவ்வொரு அகந்தை கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று மூஸா கூறினார்.

(அல்குர்ஆன் 40:23-27)

இறைத்தூதருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இறை நம்பிக்கையாளர் :

என் இறைவன் அல்லாஹ்வேஎன்று கூறும் ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.

என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?” (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் “நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லைஎன்று கூறினான்.

என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன் என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.

என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.

அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.

முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.

அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப் பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.

என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.

என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.

நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன்.

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்)

(அல்குர்ஆன் 40:28-44)

கடல் பிளந்தது! கொடியவன் கொல்லப்பட்டான்!

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.

(அல்குர்ஆன் 28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்என்று அவர் கூறினார்.

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராகஎன்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

(அல்குர்ஆன் 26:60-66)

காலம் கடந்த ஞானோதயம் :

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்என்று கூறினான்.

இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.

(அல்குர்ஆன் 10:90-91)

அழியாத அத்தாட்சி :

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம்.

(அல்குர்ஆன் 10:92-93)

படைத்தவனின் வாக்குறுதி பலித்த நாள் :

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்திய போது அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:

உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி “எவ்வாறு செயல்படுகின்றீர்கள்என்பதைக் கவனிப்பான்என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன் 7:129)

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர் களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

(அல்குர்ஆன் 7:137)

மூஸா (அலை) அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். அந்தச் சிறப்பு நாள் இன்று முஸ்லிம்களால் கருப்பு நாளாகச் சித்தரிக்கப்பட்டு விட்டது.

திருக்குர்ஆன் கூறும் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக இந்த நாளை நோன்பு நோற்று கண்ணியப்படுத்தச் சொன்னார்களோ அந்த உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அல்லாஹ் கூறும் அந்த உண்மை வரலாற்றை நினைவு கூர்வோமாக!

தலையங்கம்

  • “மார்க்கம் முழுமையடையும் வரை இந்த நிலை தான் இருந்தது. அதில் மாற்றம் தேவை யிருப்பின் அல்லாஹ்வும் அவனது தூதரும் சூசகமாக அல்ல, தெளிவாகவே அதைச் சொல்லி இருப்பார்கள்”
  • “கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும்,அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன”
  • “அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்”
  • “கோயில் திருவிழாக் களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்”
  • “குழந்தை பாக்கியம் நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோ கிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்”
  • “தவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை”
  • “இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும்”
  • “ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை”
  • “எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன், பிற்காலத்தில் எதிரியாக வந்து,அவனை அழிக்கப் போகும் மூஸா நபி யவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்”
  • “சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். “அகிலத்தாரின் இறை வனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றும் கூறினர்”
  • “ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப் பட்டுவிட்டது”