முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?

கேள்வி :

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?

ஜன்னத்

பதில் :

மூன்று தடவை தலாக் கூறும் வாய்ப்பு கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மூன்று தலாக் கூறி முடித்தால் தான் அந்தப் பெண் மறுமணம் செய்ய முடியும் என்று மார்க்க அறிவில்லாத சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவ்றாகும்.

கணவனால் தலாக் விடப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் முடிவடைவதற்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு உள்ளது.

இத்தாவுடைய காலம் முடிந்துவிட்டால் அவ்விருவரும் பிரிந்து விடுவார்கள். அவர்களுக்கிடையே கணவன் மனைவி என்ற உறவும் முறிந்துவிடும்.

தலாக் விட்ட கணவன் இவளைத் திருமணம் செய்ய விரும்பினாலும் இவள் அதற்கு சம்மதிக்கவோ, மறுக்கவோ உரிமை படைத்தவளாவாள். இத்தா காலம் முடிந்த பிறகு மனைவி தான் விரும்பம் ஆணைத் திருமணம் செய்து கொள்ள அவளுக்கு உரிமை உள்ளது. பழைய கணவன் இதைத் தடுக்க முடியாது.

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (232)2

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232