மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.

அல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.

எந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்

ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2697

صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3243

தாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்!

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?

திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31,32

இன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

திருக்குர்ஆன் 7:55

அல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : நஸாயீ

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!