பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

பொருளியல்       தொடர்: 2

பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன.

ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.

வியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள்

திருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய வசனங்களும்  இடம்பெற்றுள்ளன.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10)

தொழுகை முடிந்தவுடன் வியாபாரத்திற்குச் செல்லச் சொல்வதிலிருந்து பொருள் திரட்டுவது அவசியம் என்று விளங்குகின்றது.

நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்குர்ஆன் 28:73)

பகலில் அவனது அருளை தேட வேண்டும்; இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து வியாபாரம் செய்வது அவசியம் என்பதை அறிய முடியும்.

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர். (அல்குர்ஆன் 16:14)

கடலில் அவனுடைய அருளைத் தேடுவதற்கு வசதியாக அதில் பயணத்தை இறைவன் இலகுவாக ஆக்கிருக்கின்றான்.

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வியாபாரத்தின் மூலமும் ஆகுமாக்கப்பட்ட பிற வழிமுறைகளிலும் பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும் என்பதை விளக்குகின்றன.

அனைத்திற்கும் பொருளாதாரம் அவசியம்

  1. தாய், தந்தையைக் கவனிக்க பொருளாதாரம் தேவை.
  2. திருமணம் முடிக்கும் போது மஹர் கொடுக்கப் பொருளாதாரம் தேவை.
  3. வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை இறைவன் தடை செய்தான்.
  4. குழந்தை பிறந்தால் அகீகா கொடுக்கப் பணம் தேவை.
  5. நோன்பு காலத்தில் நோன்பை முறிக்கக்கூடிய காரியமான உடலுறவு கொண்டு விட்டால் இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதற்குப் பொருளாதாரம் தேவை.
  6. சத்தியம் செய்து அதை முறித்துவிட்டால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவை.
  7. நோன்பு வைக்க முடியாத நோயாளிகள் தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
  8. மனைவியை (லிஹார்) தாய்க்கு ஒப்பாகக் கருதி இல்லற வாழ்வில் சேரவில்லையென்றால் இதை முறித்துவிட்டு இதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
  9. குர்பானி மற்றும் நோன்பின் தர்மமான ஸதக்கதுல் பித்ரா கொடுக்க வேண்டும்.
  10. உண்ணுங்கள், பருகுங்கள் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து உண்ண, குடிக்கப் பொருளாதாரம் தேவை.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் தவிர இதில் கூறப்படாத விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஒரு மனிதன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் இன்றியமையாததாகும் என்பதை விளங்க முடிகின்றது.

சொத்துக்களை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுதல்

நாம் நம்முடைய சொத்துக்களை நமக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஏழைகளாக மாறி பிறரிடம் கையேந்துவதை விட செல்வந்தர்களாக அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது.

விடை பெறும்ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள்  நோயுற்றிருந்த  என்னை (நலம்)  விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விüம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி 3936

சொத்துக்களைச் சேர்ப்பது, பணம் சம்பாதிப்பது கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் எதற்காக வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு ஏவினார்கள்? அப்படியானால் சொத்து, பணம் சம்பாதிப்பது கூடாது என்ற கருத்து தவறானது என்று விளங்குகின்றது.

உயிரைக் கொடுத்தேனும் சொத்தைப் பாதுகாத்தல்

ஒரு மனிதனிடத்தில் உயர்ந்த செல்வம் உயிராகும். கத்தியைக் காட்டி பயமுறுத்தினால் உயிருக்குப் பயந்து ஓடி விடுவான். ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடி அதில் அவன் இறந்து விட்டால் அவன் உயிர் தியாகியுடைய அந்தஸ்தை அடைந்து கொள்வான் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லைஎன்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 225

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: புகாரி 2480

பொருளாதாரத்தைக் கேட்டுப் பிரார்த்தித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்து வருடம் வேலை செய்த அனஸ் என்ற நபித்தோழருக்குப் பொருளாதார வளத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் நபியவர்கள் துஆச் செய்தார்கள். இதிலிருந்து பொருளாதாரத்தைக் கேட்டு துஆச் செய்யலாம் என்று விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது!என்றார். நபி (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்!என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டுஎனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா! இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக!என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 1982, 6334, 6344, 6378, 6380

அனஸ் அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இறக்கும் தருவாயில் மதினாவிலேயே மிகப்பெரும் செல்வந்தனாக இருந்தேன். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் செல்வத்தைக் கேட்டு எனக்கு துஆ செய்தது தான் காரணம்.

செல்வத்தைக் கேட்டு நபியவர்களின் பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில், “என்னை ஏழையாக வாழச் செய்து, ஏழையாகவே மரணிக்கச் செய்’ என்று பிரார்த்தனை செய்ததாக நபி (ஸல்) பெயரில் சில ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். நபி (ஸல்) அவர்களே செல்வத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்ததிலிருந்து செல்வத்தைக் கேட்டு நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம் என்று விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினாஎன்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 5265

அள்ளி அள்ளிக் கொடுப்பவன் சிறந்தவன்

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல் வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 16:75)

இந்த் வசனத்தில் அல்லாஹ், செல்வத்தை வைத்திருப்பவனை தனக்கும், எந்தச் சொத்திற்கும் சொந்தமாகாத அடிமையை சிலைகளுக்கும் உதாரணமாகச் சொல்லிக் காட்டுகிறான். அழகிய செல்வம் வைத்திருப்பவனை உயர்ந்த ஒன்றிற்கு உதாரணமாகக் காட்டுவதன் மூலம் செல்வத்தின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தர்மம் செய்பவன் மீது பொறாமை கொள்ளுதல்

பொதுவாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொள்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்துள்ளனர். பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாவல் தேடவும் இறைவன் கற்றுத் தந்துள்ளான்.

பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)

பொறாமை என்பது ஷைத்தானின் குணம் என்றெல்லாம் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டிருந்தும் இரண்டு விஷயங்களில் மட்டும் பொறாமை கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி (73, 1409, 7149, 7316)

தொடரும்.. இன்ஷா அல்லாஹ்