பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம்

கேள்வி :

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா?

– பர்வீன், துபை

பதில் :

எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும் தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முன்னால், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் குண்டாசில் கைது செய்து தண்டனை அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு தார்மீக உரிமை கிடையாது.

பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் மீதும், காவல்துறை அதிகாரிக்கு எதிரானவர்கள் மீதும் பொய் வழக்கு போடலாம். விலைமாதர்களை அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பொய் வழக்கு மூலம் ஒருவரை ஒரு ஆண்டு உள்ளே வைப்பதற்குத் தான் குண்டர் சட்டம் பயன்படும்.

மேலும் சில பெண்கள் ஆண்களுடன் தவறான உறவு கொண்டு மாட்டிக் கொள்ளும் போது ஆண் தன்னை பலாத்காரம் செய்து விட்டான் என்று புகார் கொடுக்கலாம். இதன் காரணமாக அவனை ஒரு வருடம் உள்ளே தள்ளிவிடலாம். இதற்குத் தான் குண்டாஸ் பயன்படும்.

அல்லது ஆணுடன் பழகி அவனிடம் பணம் பறித்து வந்த பெண் அந்த ஆண் அவளைவிட்டு விலகும் போது, அவனுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்து குண்டாஸில் உள்ளே தள்ள முடியும்.

ஏற்கனவே திருமணமான ஒருவனை அவன் திருமணமானவன் என்பதைத் தெரிந்து கொண்டே, தவறான உறவுகொண்டு விட்டு அவனை மிரட்டி திருமணம் செய்ய வற்புறுத்தவும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

காதலிக்க மறுக்கும் ஆண்களுக்கு எதிராகப் புகார் கொடுத்து ஒரு வருடம் அவனை சிறையில் அடைக்கவும் முடியும்.

பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகள் கண்டிக்கும் போதும் பெண்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளைப் பழிவாங்க முடியும்.

எனவே புகார் உண்மையா? பொய்யா என்பதை தீர விசாரித்து, நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் முனனதாகவே அரசாங்கம் தீர்ப்பு எழுதுவதை நாம் ஏற்க முடியாது.

இது பாலியல் குற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, ஆண்கள் மீது பழி சுமத்தவும் அவனது வாழ்க்கையைப் பாழாக்கவும் தான் உதவும். இதனால் அரசாங்கம் எதிர் பார்க்கும் நன்மை நிச்சயம் கிடைக்காது.