பாங்கு சொல்லும் போது தொழுதல், மலஜலம் கழித்தல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

பாங்கு சொல்லும் போது தொழுதல், மலஜலம் கழித்தல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

கேள்வி :

பாங்கு சொல்லும் போது படுத்த நிலையிலேயே பாங்குக்குப் பதில் சொல்லலாமா? சாப்பிடுதல், உளூச் செய்தல், தொழுதல், மலஜலம் கழித்தல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

ஏ. ஷேக் தாவூத், அம்மாபட்டிணம்

பதில் :

முஅத்தின் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்’ என்று சொன்னதும் உங்களில் (அதைச் செவியுறும்) ஒருவர் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்’ என்று கூறட்டும்.

“அஷ்ஹது அன்(ல்) லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறும் போது, “அஷ்ஹது அன்(ல்) லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறட்டும்.

“அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்று கூறும் போது, “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்று கூறட்டும்.

“ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று கூறும் போது, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று கூறட்டும்.

“ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று கூறட்டும்.

“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்’ என்று கூறும் போது “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்’ என்று கூறட்டும்.

(இறுதியாக) முஅத்தின் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறும் போது, (செவுயுறும்) அவர் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று மனப்பூர்வமாகச் சொன்னால் அவர் சொர்க்கத்தில் நுழைந்து விடுகின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்  578

பாங்குக்குப் பதில் சொன்னால் அதற்கு சுவனம் கூலியாகக் கிடைக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே பாங்கு சொல்லப்படுவதைச் செவியுற்றால் அதற்கு மேற்கண்டவாறு பதில் கூறுவது அவசியமாகும். படுத்துக் கொண்டு பதில் கூறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. திருக்குர்ஆனில் நல்லோர்களைப் பற்றிக் கூறும் போது படுத்த நிலையில் அல்லாஹ்வை நினைப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.

அல்குர்ஆன்3:191

அதே போன்று பாங்கு சொல்லப்படும் போது உளூச் செய்தல், சாப்பிடுதல் போன்றவற்றுக்கும் தடையில்லை. பாங்குக்குப் பதில் கூறியவாறே இந்தச் செயல்களை ஒருவர் செய்ய முடியும். ஆனால் தொழுகை மற்றும் மலஜலம் கழித்தல் போன்றவற்றின் போது பாங்குக்குப் பதில் கூற முடியாது.

தொழுது கொண்டிருக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் தொழுகையைத் தான் தொடர வேண்டும். ஆனால் பாங்கு சொல்லத் துவங்கி விட்டால் அதற்குப் பதில் சொல்வதன் நன்மையைக் கருத்தில் கொண்டு, பாங்கு முடிந்த பின் தொழுவது தான் சிறந்தது.

அதே போன்று மலஜலம் கழிக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். எனவே ஒருவர் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்லக் கூடாது. ஆனால் அதே சமயம் பாங்கு சொல்லத் துவங்கி விட்டால் அதற்குப் பதில் சொல்வதில் உள்ள நன்மைக்காக, பாங்கு முடியும் வரை இயன்றால் தாமதப்படுத்தி மலஜலம் கழிக்கச் செல்லலாம். ஆனால் அதற்காக பாங்கு முடியும் வரை கண்டிப்பாக அடக்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.

அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக்காகவோ புறப்பட்டார்கள்.  அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார்.  ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்தத் தயாரானார்.  அப்போது அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள்!  ஏனெனில் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது  உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் செல்வாராக!”என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, கழிப்பிடத்திற்குச் சென்று விட்டார் என உர்வா பின் ஜூபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரலி) வழியாக அறிவிக்கிறார்.

நூல்: அபூதாவூத் 81

தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது அதிக நன்மை பெற்றுத் தரக் கூடியதாக இருந்தாலும், அதற்காக மலஜலம் கழிப்பதைத் தாமதப் படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எனவே பாங்கு சொல்லப்படும் போது ஒருவருக்கு மலஜலம் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005