நோன்பும் சலுகைகளும்

நோன்பும் சலுகைகளும்

எஸ். யூசுப் பைஜி

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில் கடந்த இதழில் பல்வேறு செய்திகளைக் கண்டோம். ரமளான் மாதத்தின் சிறப்பிதழாக அவ்விதழ் வெளியிடப்பட்டது. இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதற்கு, நோன்பின் சட்டங்களில் இஸ்லாம் வழங்கியிருக்கும் சலுகைகளையும் நாம் உதாரணமாகக் கூறலாம்.

அதன் அடிப்படையில் நோன்பின் சட்டங்களில் இஸ்லாம் காட்டியிருக்கும் எளிமையையும், சலுகைகளையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாம் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது. இந்தக் கடமைகளை பொதுவாக விதித்து விடாமல், இந்தச் சமுதாயத்தின் பலவீனம், அவர்களுடைய உணர்வு போன்றவற்றை அறிந்து, அனைவரும் பின்பற்றத் தகுந்தாற் போல் மிக எளிமையாக விதித்திருக்கிறது.

எளிமையான சட்டங்களை, மனித சமுதாயம் அப்படியே பின்பற்றக் கூடிய சட்டங்களை விதித்ததன் மூலம் இஸ்லாம், இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

நோன்பு எனும் கடமையை எல்லோருக்கும் விதித்தாலும் சிலருக்கு விதிவிலக்கு அளித்திருக்கின்றது.

  1. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

“நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம்” என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, “இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

நூல்: புகாரி 4505

இஸ்லாம் மனிதர்களின் பலவீனத்தை கருத்தில் கொண்டு எவ்வளவு மிக எளிமையான கடமைகளை விதித்திருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று.

  1. நோயாளிகள்

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.

தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.

ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.

  1. பயணிகள்

பயணிகளுக்கு அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.

பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், வெளியூரில் சென்று தங்கியிருப்பவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.

பயணத்தின் இடையில் பல்வேறு கஷ்டங்கள் இருப்பதை நாம் பாôர்க்க முடிகிறது. சில பயணிகளுக்கு அதிகமான வாந்தி, மயக்கம்  ஏற்படுவதையும், சிலருக்குத் தாகம் ஏற்படுவதையும் சிலருக்கு உடல் சோர்வு ஏற்படுதையும் பார்க்கிறோம்.

இந்தப் பலவீனம் மனிதர்களிடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து தான் இஸ்லாம் இவர்களுக்கு நோன்பு நோற்பதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது.

பயணிகள், நோயாளிகள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்கவே விரும்புகிறான்” என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

  1. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாத விடாய் காலகட்டத்தில் பெண்கள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது. ஏனென்றால் மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு தொல்லையாகும். இதைத் திருக்குர்ஆனே குறிப்பிட்டுக் காட்டுகிறது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்வோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

எனவே இந்தச் சிரமமான கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்றவற்றின் மூலம் மேலும் சிரமத்தை அடைந்து விடக் கூடாது என்பதற்காக இது போன்ற கடமைகளில் இஸ்லாம் சலுகை அளிக்கின்றது.

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 508

மாத விடாய் கால கட்டத்தில் நோன்பு மற்றும் தொழுகைகளை விடச் சொன்ன இஸ்லாம், நோன்பை மட்டும் களாச் செய்ய வேண்டும் என்றும், தொழுகையை களாச் செய்யத் தேவையில்லை என்றும் கூறுகிறது.

  1. கர்ப்பிணிகளும்பாலூட்டும் தாய்மார்களும்

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

கர்ப்பமான காலகட்டத்தில் தாய்மார்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை நாம் வர்ணிக்க முடியாது. கர்ப்பம் தரித்த தாய்மார்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியாது. சாதரண காலத்தில் அவர்கள் படுத்து ஓய்வெடுத்தது மாதிரி கர்ப்பம் தரித்த காலத்தில் ஓய்வெடுக்க முடியாது. எனவே அளவற்ற அருளாளன் இவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்கியிருக்கிறான்.

இது போன்று பாலூட்டும் சமயத்திலும் பெண்களுக்கு போதிய உணவு அவசியம் என்பதால் இவர்களும் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

எளிமையாக்கப்பட்ட நோன்பின் சட்டம்

நோன்பு முதலில் கடமையாக்கப் பட்ட போது, ஒரு சிறு இடைவெளியைத் தவிர இரவு, பகல் முழுவதிலும் உண்ணாமல், பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற சட்டம் தான் இருந்தது.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணையினால் இந்தச் சட்டம் மாற்றப்பட்டு, பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்; இரவில் உண்பதற்கும், பருகுவதற்கும், இல்லறத்தில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

(ஆரம்ப நேரத்தில்) நபித் தோழர்கள் நேன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பு உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். ஒரு முறை கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார். நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, “உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டாôர் அவரது மனைவி “இல்லை. எனினும் நான் சென்று உமக்காக உணவைத் தேடி வருகிறேன்” என்றார். கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் கூலி வேலை செய்து விட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டு விட்டது. அவரது மனûவி வந்து அவரைக் கண்ட போது, “உமக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது” என்றார்.

நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்ட போது, “நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது” என்ற வசனமும் “பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள்” என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

அறிவிப்பவர்: பராவு (ரலி)

நூல்: புகாரி 1915

பரிகாரத்திலும் ஒரு சலுகை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

நாம் ஒரு கடை நடத்துகிறோம். அந்தக் கடையில் ஒரு தொழிலாளி வேலை செய்கிறார். வேலை செய்யக் கூடியவர் தவறு செய்து விட்டார் என்றால் நாம் அவருக்குத் தண்டனை கொடுப்போம். “இல்லை, தண்டனையை நான் நிறைவேற்ற முடியாது’ என்று தொழிலாளி சொன்னால் நாம் என்ன செய்வோம்? செய்யக் கூடாத தவறையும் செய்து விட்டு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறாயா? என்று கூடுதல் தண்டனையைக் கொடுப்போம்.

ஆனால் இஸ்லாம் தண்டனை நிறைவேற்ற முடியவில்லை என்று சொன்னால் அதிலும் தண்டனையைக் குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா? என்று கேட்கிறது. அதையும் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதிலும் தண்டனையைக் குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா? என்று கேட்கிறது. இப்படிச் சலுகை காட்டி எதிலும் முடியாது என்று போகவே கடைசியாக பைத்துல் மாலுக்குச் சொந்தமான பொருளிருந்து கொடுத்து நிறைவேற்றச் சொல்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு சட்டத்திலும் எளிமையையும், சலுகையையும் வழங்கி அனைவரும் பின்பற்றத்தக்க எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.