தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?

கேள்வி :

தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?

முஹம்மத் ரிஸ்வான்.

பதில் :

தொழுகைக்கும் நமது துவாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கும் இடையே சம்பந்தம் இருக்கின்றது.

6502حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ رواه البخاري

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசிக்கும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6502

ஒருவர் கடமையான வணக்கங்களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்விடம் நெருங்க முடியும். அவர் அல்லாஹ்விடம் நெருங்கிவிட்டால் அவர் கேட்டதைத் தருவதாகவும் அவர் பாதுகாப்புத் தேடினால் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களிக்கிறான்.

எனவே தொழுகையை நாம் முறையாக நிறைவேற்றினால் இந்த அடிப்படையில் நமது பிரார்த்தனைகள் விரைவாக இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

தொழுகை இறைவனுக்குப் பிடித்த நற்காரியம் என்பதால் இதைச் செய்து நமது தேவையை அவனிடம் முறையிட்டால் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்.

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ(45)2

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 2:45

நாம் ஈடுபடப்போகும் காரியம் நல்லதாக அமைய வேண்டுமென்றால் இரண்டு ரக்அத்கள் தொழுது அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

6382 حَدَّثَنَا مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو مُصْعَبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَالسُّورَةِ مِنْ الْقُرْآنِ إِذَا هَمَّ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ وَيُسَمِّي حَاجَتَهُ رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் “இறைவா! நீ அறிந்துள்ளபடி நன்மைதனை உன்னிடம் நான் கோருகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப்போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு- எனக்கு “என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது “என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதைச் சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு “என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது “என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கட்டும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 7390

கிரகணம் ஏற்பட்டாலோ, மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டாலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது தமது தேவையை அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். இது போன்ற நேரங்களில் தொழ வேண்டும் என்று நமக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குத் தொழுகை காரணம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வணக்கத்தைச் செய்து அல்லாஹ்விடம் உதவி தேடியுள்ளார்கள்.

1040حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْكَسَفَتْ الشَّمْسُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلْنَا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ حَتَّى انْجَلَتْ الشَّمْسُ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا وَادْعُوا حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ رواه البخاري

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு, “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டது அகற்றப்படும் வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ பக்ரா (ரலி)

நூல் : புகாரி 1040

1012و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழை வேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது கிப்லாத் திசையில் திரும்பி, தமது தோள் துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல் : புகாரி 1012