சர்ச்சையாக்கப்படும் புர்கா

சர்ச்சையாக்கப்படும் புர்கா

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வதைத் தடை செய்யப்போவதாகத் தான் பிரான்ஸ் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

முகத்திரை போட்டுக் கொள்வது மத அடையாளம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதில் இருந்து இஸ்லாத்தில் இது இல்லை என்ற கருத்தைத் தான் கூறியுள்ளார். முகத்திரை போட்டுக் கொண்டு தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளதில் இருந்து இதை அறியலாம்.

முகம் முன்கைகள் தவிர மற்ற உறுப்புக்களை மறைத்துக் கொள்ள அனுமதி இல்லை என்று அவர் கூறினால் அதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள் தெரிவிக்கலாம். அப்படி அவர் கூறியிருந்தால் அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொண்டு களமிறங்கிப் போராடியாக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.

இஸ்லாம் கூறாமல் மக்களாக உருவாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே பெரும்பாலான மனிதர்கள் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்.

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இதுதான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும், அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

ஒரு பெண் முகத்தை மறைத்துக் கொண்டால் அவள் யாரோடும் ஊர் சுற்றலாம். கணவனுடன் செல்கிறாள் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைக்க இது வழிவகுத்துள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவிகளில் பலர் இப்படி முகம் மறைத்து செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும்போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலையில் முகத்திரை போட்டு கண்ட படி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

முகத்தை பெண்கள் மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் தான் இதை எதிர்க்கிறார்களே தவிர பிரான்ஸின் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.