கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா?

கேள்வி :

ஆண்கள் உச்ச நிலை அடையும் போது விந்தை கருவறைக்குள் செலுத்தாமல் வெளியே விடுவது சிசுக்கொலையாகாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதற்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளதே?

صحيح مسلم

3638 – حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَمُحَمَّدُ بْنُ أَبِى عُمَرَ قَالاَ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى أَبُو الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ أُخْتِ عُكَّاشَةَ قَالَتْ حَضَرْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى أُنَاسٍ وَهُوَ يَقُولُ « لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ فَنَظَرْتُ فِى الرُّومِ وَفَارِسَ فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلاَدَهُمْ فَلاَ يَضُرُّ أَوْلاَدَهُمْ ذَلِكَ شَيْئًا ». ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ذَلِكَ الْوَأْدُ الْخَفِىُّ ». زَادَ عُبَيْدُ اللَّهِ فِى حَدِيثِهِ عَنِ الْمُقْرِئِ وَهْىَ (وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ)

ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மக்களில் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், பாலூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள தடை விதிக்க விரும்பினேன். பிறகு ரோமர்களும், பாரசீகர்களும் தம் குழந்தைகள் பால் அருந்திக் கொண்டிருக்கும்போதே, தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமலிருப்பது குறித்து நான் யோசித்தேன். (எனவே, தடை விதிக்கும் ண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் அஸ்ல் (உச்ச நிலையின் போது விந்தை வெளியேற்றுதல்) செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது மறைமுகமான சிசுக்கொலையாகும் என்று விடையளித்தார்கள்.

அன்புடன், நாஷித் அஹ்மத்

பதில் :

அஸ்ல் எனும் செயலை மறுக்கும் வகையில் இந்த ஹதீஸ் அமைந்து இருந்தாலும் அஸ்ல் என்பது அனுமதிக்கப்பட்ட செயல் எனக் கூறும் ஹதீஸ்கள் அதிகமாகவே உள்ளன. அந்த ஹதீஸ்களுக்கு முரணாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் அமைந்துள்ளது.

5207 – حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن ابن جريج، عن عطاء، عن جابر،قال: كنا نعزل على عهد النبي صلى الله عليه وسلم

5208 – حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال عمرو: أخبرني عطاء، سمع جابرا رضي الله عنه، قال: كنا نعزل والقرآن ينزل

5209 – وعن عمرو، عن عطاء، عن جابر، قال: كنا نعزل على عهد النبي صلىالله عليه وسلم والقرآن ينزل

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டு இருக்கும் பொது நாங்கள் அஸ்ல் செய்து வந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5207, 5208, 5209

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதற்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

ஒரு குழந்தை உருவாக ஆணுடைய விந்து மட்டும் போதாது. பெண்ணிண் சினை முட்டையும் இணைந்தால் தான் அது குழந்தையாக ஆகும். ஆணுடைய விந்து மட்டும் குழந்தை அல்ல எனும் போது அது எப்படி சிசுக்கொலையாக ஆகும்? என்ற கேள்வியும் இதில் எழுகின்றன.

ஆனால் ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது மேற்கண்ட ஹதீஸில் ஏதோ ஒரு அறிவிப்பாளர் சில சொற்களை விட்டிருக்கலாம் என்று அறிய முடிகின்றது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِحَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِأَبِي كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَعَنْ جَابِرٍ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَعْزِلُفَزَعَمَتْ الْيَهُودُ أَنَّهَا الْمَوْءُودَةُ الصُّغْرَى فَقَالَكَذَبَتْ الْيَهُودُ إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ أَنْ يَخْلُقَهُ فَلَمْيَمْنَعْهُ قَالَ وَفِي الْبَاب عَنْ عُمَرَوَالْبَرَاءِ وَأَبِيهُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அஸ்ல் செய்கிறோம். ஆனால் யூதர்கள் இது குறித்து கூறும் போது இது சிறிய சிசுக்கொலை என்று சொல்கிறார்களே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லாஹ் ஒரு குழந்தையை உருவாக்க நாடிவிட்டால் அதை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல் : திர்மிதி

மேலும் பல நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் அஸ்ல் செய்ய நினைத்தாலும் அல்லாஹ் நாடிவிட்டால் அவர் அஸ்ல் செய்வதற்கு முன்னால் விந்து பாய்ந்துவிடும். உருவாக வேண்டிய குழந்தை உருவாகி விடும் என்று காரணத்துடன் நபியவர்கள் விளக்கி இதில் சிசுக் கொலை இல்லை என்று மறுக்கிறார்கள். யூதர்கள் இப்படி நம்பி வந்தது தெரிந்தும் அதைப் பொய்யெனக் கூறியுள்ளனர்.

எதைப் பொய் என்று நபியவர்கள் மறுத்தார்களோ அதையே உண்மை என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள். அதுவும் காரணத்துடன் பொய் என்று விளக்கி இருக்கும் போது அதற்கு மாற்றமாகச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

யூதர்கள் சொல்கிறார்கள் என்று நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸில் நபியவர்கள் சொல்லி இருந்து அதை அறிவிப்பாளர் ஒருவர் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

மனித உயிர் உருவாக ஆணுக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கும் பங்கு உண்டு என்ற கருத்தைத் தரும் பல வசனங்களுக்கும், நிரூபிக்கப்பட்ட உண்மைக்கும் மாற்றமாக நபியவர்கள் பேசி இருக்க மாட்டார்கள்.

எனவே மேற்கண்ட ஹதீஸை நாம் ஏற்காமல் அதைவிட அதிக எண்ணிக்கையிலும் குர்ஆனுக்கு ஒத்த வகையிலும் அமைந்துள்ள ஹதீஸ்களையே ஏற்க வேண்டும்.