கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா?

கேள்வி :

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?

பதில் :

கடன் என்பது இரண்டு வகைப்படும்.

வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவது ஒரு வகை.

வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை.

உதாரணமாக சொந்த வீடு இருப்பவர் மேலும் ஒரு வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மற்றொரு வீட்டை வாங்குகின்றார். அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடன் வாங்கி அதை முதலீடு செய்கின்றார். இவருக்குக் கடன் இருப்பதால் ஹஜ் செய்யத் தேவையில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவருடைய கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான சொத்து உபரியாக உள்ளது. இவருக்குக் கடன் இருந்தாலும் ஹஜ் கடமை தான்.

அதேபோல் ஒருவர் இரண்டு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் ஐந்து இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றன என்றால் இவரும் கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும். அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால் அவருக்கு ஹஜ் கடமையாகும்.

கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை.

கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத் தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3:97

ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது. வாங்கிய கடனைச் செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை.

صحيح مسلم

4991 – حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ الْمِصْرِىُّ حَدَّثَنَا الْمُفَضَّلُ – يَعْنِى ابْنَ فَضَالَةَ – عَنْ عَيَّاشٍ – وَهُوَ ابْنُ عَبَّاسٍ الْقِتْبَانِىُّ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ أَبِى عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ ».

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது. எனவே கடனை முதலில் செலுத்தி விட்டு அதன் பிறகு ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் ஹஜ் செய்ய வேண்டும்.

கடனைச் செலுத்தினால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்ற நிலை இருக்குமானால் அந்த நிலையில் அவருக்கு ஹஜ் கடமையாகவில்லை என்று தான் அர்த்தம். இந்நிலையில் ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை என்றால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

ஆனால் கடன் இருக்கும் நிலையில் ஹஜ்ஜுக்குச் சென்று, கடனைச் செலுத்தாமலேயே மரணித்து விட்டால் அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாகின்றார். எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.