கஅபா வடிவில் மதுபான கூடமா?

கேள்வி :

கஅபா வடிவில் மதுபான கூடமா?

பதில் :

(கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.)

– நியூயார்க்கிலிருந்து ஓர் உண்மைச் செய்தி!

கடந்த சில நாட்களாக ஃபேஸ் புக்கில் ஒரு புகைப்படமும், அத்துடன் இணைந்து ஒரு செய்தியும் மிகவேகமாக பரவியது.

அந்தச் செய்தி இதோ :

கஃபா வடிவிலான மதுக்கூடத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!

நியூயார்க் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கஅபத்துல்லா வடிவிலான புதிய மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் இஸ்லாமியர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களைத் தொடர்ந்து சீண்டி வரும் ஏகாதிபத்திய அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமியர்களின் கிப்லாவான கஅபாவைப் போன்று ஒரு மதுபானக் கூடத்தை உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதுபானக் கூடத்தைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காத அமெரிக்க அரசு மதுபானக் கூடத்தைத் திறப்பதற்கான பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இதைக் கண்டித்து ஈரான் நாட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது என்று கூறி ஈரான் நாட்டில் நடந்த போராட்டத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தையும் பரப்பி வந்தனர்.

இப்படி ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பரப்பப்படுவதாகவும், இதன் உண்மை நிலை என்ன என்று கேள்வி எழுப்பியும் மாநிலத் தலைமைக்கு கோரிக்கைகள் வந்தன. ஒரு சிலர் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்காவை சும்மா விடக் கூடாது; அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தலைமை நிர்வாகிகளிடம் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில் தான் இந்தக் கட்டடம் கட்டப்படுவதாக தகவல் பரவியுள்ளதால் இது குறித்த உண்மை நிலை என்ன என்று ஆய்வு செய்து சொல்லுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமெரிக்க மண்டலப் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களுக்கு அந்த புகைப்படங்களும், செய்தியும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.

பரப்பப்பட்ட பொய்:

அமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் அந்தச் செய்தியை ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள மாநில நிர்வாகிகளுக்கு,

தாங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைக்கப் பெற்றேன். அதில் குறிப்பிட்டது போல் அப்படி ஒரு இடம் நியூயார்க் மகாணத்தில் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் அப்படி ஒரு மதுபானக் கூடம் இங்கே இல்லை. அதற்காக இங்கு உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எந்த விதமான போராட்டமும் நடத்தவில்லை.

இப்படி ஒரு புரளி பல வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது ஏறத்தாழ சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அது இன்றளவும் பரவிக்கொண்டே இருக்கின்றது. உண்மையில் அந்த இடம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனைக் கூடத்தின் நுழைவாயில்.

இது முற்றிலும் கண்ணாடியால் ஆனது. இதற்கான பணி நடக்கும் போது முடியும் தருவாயில் அதனைச் சுற்றி கருப்பு நிற போர்வை போன்ற துணியால் அதைப் போர்த்தி வைத்திருந்தனர். அவ்வாறு அந்தக் கட்டிடம் போர்த்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

அதே இடத்தின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (02.05.2014) அன்று நானே நின்று எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். இப்படி சில நேரங்களில் நமது மக்களே தேவை இல்லாத பொய்யான தகவல்களைப் பரப்பி நேரத்தை வீணாக்கி தேவை இல்லாமல் மக்களைக் கொந்தளிக்க விடுவது மிக வருத்தத்தைத் தருகிறது.

-நியூயார்க்கில் இருந்து

தஸ்தகிர்.

அமெரிக்கா தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தைப் போர்வையினால் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததைப் புகைப்படம் எடுத்து கஅபா வடிவில் மதுபானக்கூடம் திறக்கப் போகின்றார்கள்; அதை அமெரிக்க அரசாங்கமே செய்கின்றது என்று புளுகி பொய்யான புரளியை யாரோ கிளப்பி விட அதை அப்படியே நமது சகோதரர்களும் ஃபேஸ் புக் வாயிலாக பரப்பி வருகின்றார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது?

இப்படித்தான் தேவையில்லாத பல பொய்யான பீதி கிளப்பக்கூடிய செய்திகளை இஸ்லாத்தைப் பாதுகாக்கின்றோம்; இஸ்லாமியர்களைப் பாதுகாக்கின்றோம் என்று தாங்களாகக் கற்பனை செய்து கொண்டு பரப்பி விடுகின்றனர். நமக்கு வந்த இந்தச் செய்தி உண்மையா? என்று முறையாக ஆய்வு செய்யாமல் பரப்பிவிடுவதால் வரும் பின்விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை.

இதைக் கண்டித்து ஈரானில் மாபெரும் போராட்டம் நடந்ததாக படம் போட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆக இது போன்ற செயல்களை நமது சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.

மேலும் இஸ்லாத்திற்கு வலு சேர்க்கின்றோம் என்ற பெயரில் சில கற்பனைகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பிவிடுவோரும் உள்ளனர்.

ஆம்!

மேகத்தில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

தர்பூசணியில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

குழந்தையின் உடலில் குர்ஆன் எழுத்து உள்ளது;

மரம் அல்லாஹ்வை ருகூஉ செய்கின்றது;

ஆட்டின் தலையில் முஹம்மத் என்ற எழுத்து உள்ளது;

கோழி முட்டையில் முஹம்மத் என்று உள்ளது;

மீன் வயிற்றில் அல்லாஹ் என்ற எழுத்து உள்ளது;

இப்படியும் இன்னும் பல வகைகளிலும் கிளப்பி விடுகின்றார்கள். இவை எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகள்; இதை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.

உதாரணமாக மேகத்தில் அல்லாஹ் என்ற எழுத்து தெரிகிறது என்று நாம் சொன்னால் இல்லை; இது சூலத்தைப் போல் உள்ளது என்று இந்துக்கள் சொல்வார்கள். இருவரின் வாதங்களும் அறியாமையில் எழுந்தவையாகும்

இஸ்லாத்தை உண்மைப்படுத்த திருக்குர்ஆனிலும், நபிகளாரின் வழிகாட்டுதல்களிலும் ஆயிரமாயிரம் செய்திகள் புதைந்து கிடக்க அதையெல்லாம் விட்டுவிட்டு சல்லிக்காசிற்கு பிரயோஜனமில்லாத இது போன்ற செய்திகளைப் பரப்புவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையும், இது போன்ற செய்திகளைப் பரப்புவது இஸ்லாத்திற்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதையும் இதை பரப்பக்கூடியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாத பீதி ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அடுத்தடுத்து பரப்பிவிட்டால் அவை அனைத்தும் பொய் என்று தெரிய வரும் போது உண்மையிலேயே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை சொன்னால் கூட யாரும் நம்பாத நிலை ஏற்படும்.

அதிசயங்கள் – அற்புதங்கள் என்று பொய்யாகச் சொல்லி ஒன்றுக்கும் உதவாத செய்திகளை இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் போது, இந்து மதத்திலும், கிறித்தவத்திலும் இது போன்ற செட்டிங்குகளையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய செய்திகளை கைவசம் தயாராக வைத்துள்ளார்கள்.

பிள்ளையார் பால் குடித்தது;

வேப்ப மரத்தில் பால் வடிந்தது;

மாதா சிலையில் கண்ணீர் வந்தது;

மாதா சிலை கண் திறந்தது;

இயேசுவின் சிலையில் புனித நீர் வழிந்தது

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அவற்றையெல்லாம் நம்பும் சூழல் ஏற்பட்டு அது இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தான் உதவும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அதுபோல அவர் இஸ்லாத்தைத் தழுவினார்; இவர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று பொய்யான பல செய்திகளைப் பரப்பி விடுவோரும்; அதை நம்புவோரும் உள்ளனர். சிறிது நாட்களில் அது பொய் என்று தெரியும் போது முஸ்லிம்கள் தமது மதத்துக்காகப் பொய் சொல்லக்கூடியவர்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்து விடும். மெய்யாகவே ஒருவர் இஸ்லாத்தைத் தழுவி அதை நாம் பரப்பும் போது அதுவும் பொய்யாகக் கருதப்பட்டு விடும்.

அறிவுப்பூர்வமான செய்திகளையும், உண்மையான செய்திகளையும் மட்டுமே பரப்ப வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.