உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

கேள்வி :

தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும்.

பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி.

பதில் :

ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா? வலியை உணருமா? உணராதா? என்பது அவர்களின் வாதமா?

இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நாம் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும்.

வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே’ என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள்.

அப்படியென்றால் வலியை உணர்வதைக் காரணம் காட்டி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது.

இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான்.

இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.

இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது.

தாவரம் என்ற உயிரை – அது வலியை உணரா விட்டாலும் – அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது.

இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது.

உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர்.

மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் – அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் – திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது.

இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.

பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது.

அப்படிச் செய்யும் போது தலைக்கு இரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியிலிருந்து வெளிக்கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன. வலியால் துடிக்கவில்லை.

இதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய ஹலால் முறை பிராணிகளை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர்.

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும், அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் EEG மற்றும் ECG பதிவு செய்யப்பட்டன.

அதாவது EEG மூளையின் நிலையையும்,

ECG இருதய நிலையையும்

படம் பிடித்துக் காட்டின.

மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் இப்போது காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு EEG யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை EEG பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் EEG பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும், வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மேற்கத்தியரின் முறை:

1) மேற்கத்திய முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்துபோய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை EEG பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

صحيح مسلم

5167 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِى قِلاَبَةَ عَنْ أَبِى الأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ ».

அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள்.

நூல் : முஸ்லிம்

மாமிச உணவைத் தவிர்ப்பதற்கு வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம். ஏனெனில் இஸ்லாமிய ஹலால் முறையில் பிராணிகள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

இவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும்.

நாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களையும் இவர்கள் சாப்பிடுவதில்லை. தாமாகச் செத்திருக்கும்போது அதை நாம் வேதனை செய்யவில்லை என்பதால் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும்.

ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா?

முட்டை சாப்பிடுவார்களா?

செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா?

சாப்பிட மாட்டார்கள்.

இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்?