இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

புதிய ஆய்வு முடிவுகள்!

இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது.

இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் சம்மந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நமது முடிவு ஹலாலை ஹராமாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது. ஹராமை ஹலாலாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதால் ஆகஸ்ட் மாதம் இறுதி அமர்வில் இது குறித்த எல்லா சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி வருமாறு அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கருத்துக்களையும் மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

{فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ } [الأنعام: 118]

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 6:118

{وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ} [الأنعام: 119]

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:119

{وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ} [الأنعام: 121]

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் 6 : 121

ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. “நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாக குறிப்பிடுகிறது.

6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும்; உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்று இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி என்ன?

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணைகற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا} [النساء: 48]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا} [النساء: 116]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

{إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ } [المائدة: 72]

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை”

திருக்குர்ஆன் 5:72

{ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ} [الأنعام: 88]

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

{وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ} [الزمر: 65]

“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65

{مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ} [التوبة: 17]

இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் சரியானதுதானா?

வணக்க வழிபாடுகளைப் பொருத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாக தெரிகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிக குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர். இணை கற்பிப்பவர்களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.

இணைகற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ காஃபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன. நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.

முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?:

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.

எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணைகற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணை கற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.

இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

மக்காவில் வாழ்ந்த இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

{ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ} [الأنعام: 138]

சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 6 : 138

”சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்” என்ற வாசகத்தில் இருந்தே ”மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத்தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.

سنن النسائي (7/ 226(

4403 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:«مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، إِلَّا بِسِنٍّ أَوْ ظُفُرٍ»

இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர.

அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல் : நஸாயீ (4403) புகாரி (2488)

மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளையாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இதுதான் இறைவசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.

அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள், தர்காவழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாக தெரிகிறது.

நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

{قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ } [يونس: 31]

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

{قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (84) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ} [المؤمنون: 84، 85]

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

{قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (86) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ } [المؤمنون: 86، 87]

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

{قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ} [المؤمنون: 88، 89]

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ} [العنكبوت: 61]

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

திருக்குர்ஆன் 29:61

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ} [العنكبوت: 63]

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

{ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ } [لقمان: 25]

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ} [الزمر: 38]

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ} [الزخرف: 9]

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ} [الزخرف: 87]

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அப்படியானால் எதற்காக குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

{وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ } [يونس: 18]

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

{أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ} [الزمر: 3]

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டித் தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமது நாட்டில் உள்ள இணைகற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க மாட்டார்கள். அல்லாஹ் என்ற சொல்லை அவர்கள் கூறினாலும் அதன் பொருளைக் கருத்தில் கொள்ளாமல் மந்திரச் சொல்லாக மட்டுமே சொல்வார்கள். கிளிப்பிள்ளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்கு ஒப்பாக இது அமைந்துள்ளது. எனவே அல்லாஹ் என்று ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் பெயர் கூறி ஒருவர் அறுத்தால் அதை உண்ணக் கூடாது.

நமது நாட்டில் உள்ள பிற மதத்தில் உள்ளவர்கள் அகில உலகுக்கும் ஒருகடவுள் தான் இருக்கிறான் என்று மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதை உண்ணலாம்.

மக்காவாசிகள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த காரணத்தால் அவர்கள் மறுமையில் நிரந்தர நரகை அடைவார்கள் என்றாலும் உலகில் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

{فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ } [العنكبوت: 65]

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 29:65

{وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ} [لقمان: 32]

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

நெருக்கடியான நேரத்தில் துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அதை ஏற்று அவர்களுக்கு உதவிபுரிகிறான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதுபோல் தான் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையும் அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் நல்லறங்கள் பாழாகும் என்பது வேறு. அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததை உண்ணலாம் என்பது வேறு.

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு:

அல்லாஹ்வை நம்பியிருந்தும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த மக்காவாசிகள் அறுத்ததை உண்ணலாம் என்று மக்காவில் அருளப்பட்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

மதீனாவில் வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அறுத்ததை உண்ணலாமா என்று ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர்கள் அறுத்ததையும் உண்ணலாம் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

{الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ} [المائدة: 5]

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

அல்குர்ஆன் 5 : 5

இவ்வசனத்தில் வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கே உணவு என்று சொல்லப்படுவது சைவ வகை உணவைத்தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.

சைவ உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவைகளே. அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.

வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர்.

صحيح البخاري

2617 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»،…..

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள்

நூல் : புகாரி 2617

இந்த ஹதீஸிலிருந்து வேதம் கொடுக்கப்பட்டோரின் மாமிச உணவை நபியவர்கள் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துள்ளாரா? என்பதை நாம் தெளிவு படுத்திய பிறகுதான் அதனைச் சாப்பிட வேண்டும். ஆனால் வேதக்காரர்கள் நமக்கு மார்க்கம் அனுமதித்த உணவுப் பொருளைக் கொடுத்தால் அதனை நாம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. அதனை நாம் தாராளமாக உண்ணலாம் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

வேதக்காரர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான முறையில் அறுத்துள்ளார்கள் என்று தெளிவாகத் தெரியும் பட்சத்தில்தான் அவர்களின் உணவை நாம் தவிர்ந்து கொள்வேண்டும்.

வேதமுடையோர் அனுமதிக்கப்பட்ட பிராணியின் மாமிச உணவை நமக்குத் தந்தால் அதனை நாம் தாரளாமாக உண்ணலாம். பின்வரும் ஹதீசும் இதனை நமக்கு உணர்த்துகிறது.

صحيح مسلم

73 – (1772) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مُغَفَّلٍ، يَقُولُ: ” رُمِيَ إِلَيْنَا جِرَابٌ فِيهِ طَعَامٌ، وَشَحْمٌ يَوْمَ خَيْبَرَ، فَوَثَبْتُ لِآخُذَهُ، قَالَ: فَالْتَفَتُّ فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ “،

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.

நூல் : முஸ்லிம் 3636

السنن الصغير للبيهقي

2867 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ فُورَكٍ، نا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، نا يُونُسُ بْنُ حَبِيبٍ، نا أَبُو دَاوُدَ، نا شُعْبَةُ، وَسُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، كِلَاهُمَا عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ الْعَدَوِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ، يَقُولُ: ” دُلِّيَ جِرَابٌ مِنْ شَحْمٍ يَوْمَ خَيْبَرَ، فَأَخَذْتُهُ فَالْتَزَمْتُهُ، فَقُلْتُ: هَذَا لِي لَا أُعْطِي أَحَدًا مِنْهُ شَيْئًا، فَالْتَفَتُّ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ: وَلَيْسَ فِي حَدِيثِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هُوَ لَكَ»

”அது உனக்குத்தான்” என்று நபியவர்கள் கூறியதாக பைஹகிக்குரிய ”சுனனுஸ் ஸகீரில்” 2867 வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

கைபர் போர் என்பது யூதர்களுடன் நடைபெற்ற யுத்தமாகும். யூதர்களிடம் இருந்து வீசப்பட்ட கொழுப்பை அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் உண்பதற்காக எடுத்துக் வைத்துக் கொண்டதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக அது உனக்குத்தான் என்று கூறி அவருக்கே கொடுத்துள்ளார்கள்.

எனவே நமக்குத் தடைசெய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக்கூடாது.

வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?

வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

இஸ்ரவேலர்களுக்குத்தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது என்பதே சரியான கருத்தாகும்.

இஸ்ரவேலர்களாக இல்லாத யூத கிறித்தவர்கள் மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம்.

தர்ஹாக்களில் அறுக்கப்பட்ட பிராணிகள்:

{ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ} [الكوثر: 2]

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக

அல்குர்ஆன் (108:2)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: قُلْنَا لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَخْبِرْنَا بِشَيْءٍ أَسَرَّهُ إِلَيْكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا أَسَرَّ إِلَيَّ شَيْئًا كَتَمَهُ النَّاسَ، وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ: «لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ الْمَنَارَ»

‘யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 4001, 4002, 4003

மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபிமொழி அல்லாஹ்விற்கு மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக ஒரு பிராணியை அறுத்தால் அதனை அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்க வேண்டும.

அல்லாஹ்விற்காக ஒரு பிராணியை அறுத்தல் என்றால் இறைவன் இட்ட கட்டளைக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றும் குர்பானி வணக்கம், பிராணியை அறுத்துப்பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்தல், மற்றும் அகீகா போன்றவை வணக்கங்களாகும்.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக அல்லாமல் வணக்கமாக அறுப்பதாக இருந்தால் அல்லாஹ்விற்காக மட்டுமே மார்க்கம் அனுமதித்த அறுத்துப் பலியிடும் வணக்கங்களைச் செய்ய வேண்டும்.

அதுவல்லாமல் ஒருவன் தர்ஹாக்களிலோ அல்லது அவுலியாக்களுக்காக அறுத்துப் பலியிட்டால் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் காரியமாகும்.

எனவே ஒருவன் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறைன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டால் அதனை உண்பது கூடாது. அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அது ஹராமானதாகும்.

படையல் செய்யப்பட்ட உணவுகள்

{إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ } [البقرة: 173]

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2 : 173

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் 2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

தாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.

அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன் கருத்து சிந்தித்து விளங்கும் வகையில் உள்ளது.

அன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும்போதும், அறுக்கும்போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்படும் பிராணிகளையும் இது எடுத்துக் கொள்ளும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யும் பொருட்களையும் இது எடுத்துக் கொள்ளும்.

5:3 வசனத்தில் இதை அறிந்து கொள்ளலாம். இவ்வசனத்தில் அல்லாஹ் அல்லாதவருக்காக சப்தமிடப்பட்டவை என்று மட்டும் கூறாமல் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை என்பதையும் சேர்த்துக் கூறுகிறான். அறுக்கப்பட்டவை என்பது உயிரினங்களைக் குறிக்கும் என்பதால் சப்தமிடப்பட்டவை என்பது உயிரற்ற பொருட்களை அல்லாஹ் அல்லாதவருக்குப் படையல் செய்வதையே குறிக்கும்.

எனவே அல்லாஹ் அல்லாதவருக்காகப் படையல், அபிஷேகம் செய்யப்படும் பொருட்களையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணிகளையும் உண்ணக் கூடாது என்பதை 5:3 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் அல்லாதவருக்காக உடைக்கப்படும் தேங்காய்கள், அல்லாஹ் அல்லாதவருக்குக் காட்டப்படும் ஆராதனைப் பொருட்கள், கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் அபிஷேகப் பொருட்கள், தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டவை, அவர்களுக்காக பாத்திஹா ஓதி புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதில் அடங்கும். இவை அனைத்தும் ஹராமாகும்.