கூடங்குளம் அணு உலை குறித்து?

0
301

கூடங்குளம் அணு உலை குறித்து?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல்  சரியான நடவடிக்கையா?

ராஜ்முகம்மது, தாம்பரம்.

தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்து நாம் முன்னரே (குரல்16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

நவீன வசதிகள் எதை  எடுத்தாலும் அதற்கு அதிகமான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள்  மூலம் நாம் சொகுசான பயணத்தை  மேற்கொள்ள முடிகிறது. ஆனால்  வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுகளால் காற்று மாசுபடுகிறது.  கெட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.

அதுபோல் குளிர் சாதனங்களால்  நாம் சொகுசாக வாழமுடிகிறது என்றாலும் இதன் காரணமாக  ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகின்றது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்டகதிர்களை ஓஸோன்  படலம் தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டில் இருந்து  பாதுகாக்கிறது. அந்தப் பாதுகாப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

மேற்கண்ட சாதனங்களுடன் டிவி, கம்ப்யூட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகிக் கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. நாளடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகி விடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஐம்பது கோடி மக்கள் இருந்த போது அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் மூலம் தான்  வாரந்தோறும் புழுத்த அரிசியை  வாங்கும் நிலை இருந்தது.

விவசாயத்தைப் பெருக்குவதற்காக நவீன ரசாயன  உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரசாயன உரங்களால் தான் உணவுப் பொருள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருள்கள் நமது உடல் நலனைக் கெடுத்து வருவதை இன்னொரு பக்கம் நாம் உணர்கிறோம்.

சில நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள்  பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்த நோயில் இருந்து விடுபட்டால்  போதும் எனக் கருதி அதையும்  சகித்துக் கொள்கிறோம்.

செல்போன் பேசுவதால்  அதில் இருந்து வெளிப்படும்  கதிர்கள் மூளையைச் சிறிய  அளவில் பாதிக்கும் என்ற போதும் காதின் கேட்கும் திறன் பாதிக்கும் என்ற போதும் நாம் அதைச் சகித்துக்  கொள்கிறோம்.

அதிகப்படியான வெளிச்சம்  கூட கண்களைப் பாதிக்கும் என்ற போதும் நாம் அதிக வெளிச்சம்  தரும் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம்.

எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும்  அதனால் நமக்குப் பல கேடுகளும்  சேர்ந்தே ஏற்படுகின்றன.

இன்றைக்கு நமக்கு மின்சாரம்  என்பது மிக அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. மின்சாரம்  சரியாக வழங்கப்படவில்லை என்பதற்காக ஆட்சியையே மாற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

நிலக்கரி மூலமும்,  தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும், காற்றாலை மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை.

எனவே தான் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில்  அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டது. எந்த வகை மின்சாரத்தையும்  விட அணு மின்சாரம் அதிக லாபமானது என்பது உண்மைதான்.

ஆனால் இதில் ஆபத்தும் அதிகம் தான். அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும், பலருக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படும், பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும், அந்தப் பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம் இதன் ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள்.

மேலும் அணுக் கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்கக் கூடியது. இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

அணுஉலை வெடித்தால் ஆபத்து அதிகம் என்பது உண்மை தான். ஆனால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றனர்.

இதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மக்கள் அஞ்சும் போது அந்த அச்சம் விலகும்  வரை அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பது தான் நல்லது. ஏனெனில் அந்தப் பகுதி மக்கள் தான் அணு உலை வெடித்தால் பாதிக்கப்படக்  கூடியவர்கள்.

ஆனாலும் அவர்களை விட  அணு உலையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், பல்லாயிரம் பணியாளர்களும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அதன் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தத் திட்டத்தைத்  துவக்கும் போதே இதற்கு எதிராக இவ்வளவு கடும் எதிர்ப்பைக்  காட்டி இருந்தால் சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக் கட்டம்வரை மத்திய அரசு வந்திருக்காது.

நம்முடைய பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களைத் தூண்டிவிடுகின்றனர், பீதியைக் கிளப்பி விடுகின்றனர்.

இந்த அணு உலை ரஷ்யாவின் ஒத்துழைப்போடு முடிக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்படிருந்தால் நிச்சயம் பாதிரிகளும், உதயகுமார்களும் இவ்வளவு எதிர்ப்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்ற பிரச்சாரத்தில் அர்த்தம் உள்ளதையும் நாம் மறந்து விடமுடியாது.

(உணர்வு குரல் 16:12ல்இடம் பெற்றது)

இவ்வாறு நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்து,  இந்தத்  திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டம் துவங்கியது முதல் மத்தியில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு ஆட்சிகளிலுமே அணு உலை கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடந்து வந்தன.

அதுபோல் அணு உலைப் பணிகள் தொடங்கியது முதல் இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தைஆட்சி செய்து வந்துள்ளன. இந்த இரு ஆட்சிகளிலும் இப்பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த போதும், இப்பணிகள் தங்கு தடையின்றி நடந்ததால், அனைத்துக் கட்சிகளின் தார்மீக ஆதரவுடன் தான் மக்கள் வரிப் பணத்தில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

எனவே எந்தக் கட்சிக்கும் இத்திட்டத்தை எதிர்க்கும் அருகதை கிடையாது.

இப்பிரச்சினை கிளப்பப்பட்ட உடனே, மாநில அரசு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டு நாட்களில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் அதிமுக அரசு போராட்டக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தியது. இது மத்திய அரசுக்கு எதிரானது அல்ல மாறாக இருளில் மூழ்கும் தமிழகத்தைக் காப்பாற்றும் திட்டம் என்பதைக் காலம்கடந்து அதிமுக அரசு உணர்ந்ததால் தான் இவ்வளவு பிரச்சினையும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியா என்ற கேள்விக்கு வருவோம். அணு உலை என்பது அமெரிக்க தூதரகத்தை விடவும், பாராளுமன்றத்தை விடவும் அதிகம் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும்.

அணுஉலையை நெருங்கலாம், அதன் மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டு அணு உலை சேதமானால் கூடங்குளம் மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பல மாவட்ட மக்கள் அழிந்து நாசமாகி விடக்கூடிய நிலை ஏற்படும். எனவே நாட்டில் உள்ள எந்த அணுவுலையாக இருந்தாலும், அதை நெருங்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் அவசியம்.

மீனவர்கள் என்பதாலும், கடல் இவர்களுக்கு நிலத்தைப் போல் பழகிவிட்டதாலும் கடலுக்குள் இறங்கி அணுஉலையை நெருங்குவதை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது.

போலீஸாருக்கு கடலில் இறங்கி பழக்கமோ பயிற்சியோ இல்லாததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு கடலில் இருந்து கொண்டே போலீஸாரைத் தாக்கியதைக் காண முடிந்தது. உருட்டுக் கட்டைகளால் காவல்துறையினரை இவர்கள் அடித்துத் துவைத்ததையும் காணமுடிந்தது.

இத்தனைக்குப் பிறகும் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஊடகங்கள் எந்தக் கருத்தையும் பலமாகப் பதிவு செய்யவில்லை. (தினமலர் மட்டும் இதில் விதிவிலக்கு.)

நாளை யுரேனியம் நிரப்பப்பட்டு அதன் பின்னர் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால்  நாடே சுடுகாடாகி விடும்.

இதனால்  போராட்டக்காரர்களுக்கும் பேரழிவு ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று தான் சொல்ல முடியும்.  தாக்குதலைக் குறை கூற முடியாது.

25.09.2012. 11:41 AM

பகிர்

பதிலளி

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்
உங்கள் பெயர்